யோவான் 1:35-51
யோவான் 1:35-51 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மறுநாளிலே மீண்டும் யோவான் தன்னுடைய சீடர்களில் இரண்டு பேருடன் அங்கு நின்றுகொண்டிருந்தான். இயேசு அவ்வழியாய் கடந்துபோகிறதை அவன் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனுடைய ஆட்டுக்குட்டி!” என்றான். அந்த இரண்டு சீடர்களும் அவன் இப்படிச் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள். இயேசு திரும்பிப்பார்த்து, அவர்கள் தம்மைப் பின்பற்றி வருகிறதைக் கண்டு, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், “போதகரே, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பதிலாக, “வந்து, நீங்களே பாருங்கள்” என்றார். எனவே அவர்கள் அவருடன் போய், இயேசு தங்கும் இடத்தைக் கண்டு, அந்த நாளை அவருடன் கழித்தார்கள். அப்பொழுது நேரம் பிற்பகல் நான்கு மணியாயிருந்தது. யோவான் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்ற அந்த இருவரில் ஒருவனின் பெயர் அந்திரேயா; இவன் சீமோன் பேதுருவின் சகோதரன். அந்திரேயா போய், முதலில் தன் சகோதரன் சீமோனைக் கண்டு அவனிடம், “நாங்கள் மேசியாவைக் கண்டோம்” என்று சொன்னான். மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம். அவன் சீமோனை இயேசுவினிடத்திற்குக் கூட்டிக்கொண்டு வந்தான். இயேசு சீமோனைப் பார்த்து, “யோவானின் மகனாகிய சீமோனே, நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். கேபா என்றால் கற்பாறை என்று பொருள்படும். அது கிரேக்க மொழியிலே பேதுரு எனப்படும். மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப் போகத் தீர்மானித்தார். அவர் பிலிப்புவைக் கண்டு அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார். அந்திரேயாவையும் பேதுருவையும் போன்றே பிலிப்புவும் பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவன். பின்பு பிலிப்பு நாத்தான்யேலைக் கண்டு அவனிடம், “மோசே தமது சட்டத்தில் குறிப்பிட்டிருந்தவரை நாங்கள் கண்டோம். அவரைக் குறித்தே இறைவாக்கினர்களும் எழுதியிருக்கிறார்கள். நாசரேத் ஊரைச் சேர்ந்தவரும், யோசேப்பின் மகனுமான இயேசுவே அவர்” என்றான். நாத்தான்யேலோ அவனிடம், “நாசரேத்தா! அங்கிருந்து நன்மை ஏதும் வரக்கூடுமோ?” என்று கேட்டான். அதற்கு பிலிப்பு, “வா, வந்து பார்” என்றான். அப்படியே நாத்தான்யேலும், தன்னை நோக்கி வருவதை இயேசு கண்டு, அவனைக்குறித்து, “இவன் ஒரு உண்மையான இஸ்ரயேலன், கபடம் ஏதுமில்லாதவன்” என்றார். அப்பொழுது நாத்தான்யேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான். இயேசு அவனுக்கு மறுமொழியாக, “பிலிப்பு உன்னைக் கூப்பிடுமுன், நீ அத்திமரத்தின்கீழ் இருக்கும்போதே நான் உன்னைக் கண்டுகொண்டேன்” என்றார். அப்பொழுது நாத்தான்யேல், “போதகரே, நீரே இறைவனின் மகன்; நீரே இஸ்ரயேலின் அரசன்” என்று அறிவித்தான். அதற்கு இயேசு அவனிடம், “நான் அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று உனக்குச் சொன்னதினாலேயா நீ என்னை விசுவாசிக்கிறாய்? நீ இதைப் பார்க்கிலும் பெரிதான காரியங்களைக் காண்பாய்” என்றார். அவர் தொடர்ந்து சொன்னதாவது, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், பரலோகம் திறந்திருக்கிறதையும், இறைவனுடைய தூதர்கள் மானிடமகனாகிய என்னிடத்திலிருந்து மேலே போவதையும், இறங்கி வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார்.
யோவான் 1:35-51 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மறுநாளிலே யோவானும் அவனுடைய சீடர்களில் இரண்டுபேரும் நிற்கும்போது, இயேசு நடந்து போகிறதை அவன் பார்த்து: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். அவன் அப்படிச் சொன்னதை அந்த இரண்டு சீடர்களும் கேட்டு, இயேசுவிற்குப் பின் சென்றார்கள். இயேசு திரும்பி, அவர்கள் தனக்குப் பின்னே வருகிறதைப் பார்த்து: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்கு போதகரே என்று அர்த்தம். அவர்: வந்துபாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்து, அந்த நாளில் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறைய மாலை நான்கு மணி. யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்னே சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைப் பார்த்து: மேசியாவைப் பார்த்தோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம். பின்பு, அவனை இயேசுவினிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா எனப்படுவாய் என்றார்; கேபா என்பதற்கு பேதுரு என்று அர்த்தம். மறுநாளிலே இயேசு கலிலேயாவிற்குப் போக விருப்பமாக இருந்து, பிலிப்புவைப் பார்த்து: நீ என் பின்னே வா என்றார். பிலிப்பு என்பவன், அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா ஊரைச் சேர்ந்தவன். பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதி இருக்கிறவரைப் பார்த்தோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்து ஊரானுமாகிய இயேசுவே என்றான். அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து எந்தவொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான். இயேசு நாத்தான்வேல் தம்மிடத்தில் வருவதைப் பார்த்து அவனைக்குறித்து: இதோ, கபடம் இல்லாத உத்தம இஸ்ரவேலன் என்றார். அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனைப் பார்த்து: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைப் பார்த்தேன் என்றார். அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: அத்திமரத்தின் கீழே உன்னைப் பார்த்தேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைப் பார்ப்பாய் என்றார். பின்னும், அவர் அவனைப் பார்த்து: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனிதகுமாரன் இடத்திலிருந்து ஏறுகிறதையும், இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் பார்ப்பீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 1:35-51 பரிசுத்த பைபிள் (TAERV)
மறுநாள் மறுபடியும் யோவான் அங்கே இருந்தான். அவனோடு அவனைப் பின்பற்றுகிற சீஷர்களில் இரண்டு பேர் இருந்தனர். இயேசு நடந்துசெல்வதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர்தான் தேவனின் ஆட்டுக்குட்டி” என்றான். அந்த இரு சீஷர்களும் யோவான் கூறுவதைக் கேட்டார்கள். ஆகையால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு திரும்பி அவர்களைப் பார்த்து கேட்டார். அந்த இருவரும், “போதகரே, நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டனர். “என்னோடு வாருங்கள். நீங்கள் கண்டுகொள்வீர்கள்” என்று இயேசு பதிலுரைத்தார். எனவே அவர்கள் இருவரும் அவர் பின்னால் சென்றனர். இயேசு தங்கியிருக்கும் இடத்தையும் கண்டனர். அன்று அவர்கள் அவரோடு அங்கே தங்கியிருந்தனர். அப்பொழுது நேரம் சுமார் நான்கு மணி. இயேசுவைப்பற்றி யோவான் சொன்னதன் மூலமாகத் தெரிந்துகொண்டதால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். அந்த இருவரில் ஒருவன் பெயர் அந்திரேயா. அவன் சீமோன் பேதுருவின் சகோதரன். முதல் காரியமாக அவன் தன் சகோதரன் சீமோன் பேதுருவைப் போய்ப் பார்த்தான். “நாங்கள் மேசியாவைக் (அதன் பொருள் கிறிஸ்து) கண்டுகொண்டோம்” என்று கூறினான். பிறகு அந்திரேயா சீமோனை இயேசுவிடம் அழைத்துக் கொண்டு வந்தான். இயேசு சீமோனைப் பார்த்து, “நீ யோவானுடைய குமாரனான சீமோன். நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். (“கேபா” என்பதற்கு “பேதுரு” என்று அர்த்தம்.) மறுநாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்லத் தீர்மானித்தார். இயேசு பிலிப்புவைக் கண்டு, “என்னைத் தொடர்ந்து வா” என்றார். பிலிப்பு, அந்திரேயா, பேதுரு ஆகியோரின் ஊரான பெத்சாயிதாவைச் சேர்ந்தவன். பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து, “மோசே எழுதியிருக்கிற சட்டங்களை எண்ணிப்பார். மோசே வரப்போகிற ஒரு மனிதரைப்பற்றி எழுதினார். தீர்க்கதரிசிகளும் அவரைப்பற்றி எழுதி இருக்கிறார்கள். நாங்கள் அவரைத் தெரிந்துகொண்டோம். அவர் பெயர் இயேசு. யோசேப்பின் குமாரன். நாசரேத்திலிருந்து வருகிறார்.” ஆனால் நாத்தான்வேல் பிலிப்புவிடம், “நாசரேத்தா? நாசரேத்திலிருந்து ஏதாவது நன்மை வர இயலுமா?” எனக் கேட்டான். “வந்து பார்” என்று பதிலுரைத்தான் பிலிப்பு. நாத்தான்வேல் தன்னிடம் வந்துகொண்டிருப்பதை இயேசு பார்த்தார். “இதோ வந்துகொண்டிருக்கிற இவன் உண்மையாகவே தேவனின் மக்களில் ஒருவன். இவனிடம் எந்த தவறும் இல்லை” என்று இயேசு கூறினார். “என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என நாத்தான்வேல் கேட்டான். பிலிப்பு என்னைப்பற்றி உனக்குக் கூறும் முன்பே, “நீ அத்தி மரத்தின் கீழே நிற்கும்போதே உன்னைப் பார்த்தேன்” என்று இயேசு சொன்னார். பிறகு இயேசுவிடம், “ஆண்டவரே! நீங்கள் தான் தேவகுமாரன். இஸ்ரவேலின் ராஜா” என்று நாத்தான்வேல் கூறினான். “நான் உன்னை அத்தி மரத்தின் அடியில் பார்த்ததாக ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அதனால் என்மீது நீ நம்பிக்கை வைத்தாய். ஆனால் அதைவிட மேலும் சிறந்தவைகளைக் காண்பாய்” என்று இயேசு கூறினார். அவர் மேலும், “நான் மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன். பரலோக வாசல் திறந்திருப்பதையும், மனிதகுமாரனிடத்திலிருந்து தேவதூதர்கள் மேலே செல்வதையும் கீழே இறங்குவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார்.
யோவான் 1:35-51 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது, இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள். இயேசு திரும்பி, அவர்கள் பின் செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம். அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையதினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது. யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார். பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான். பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான். இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.