யோவான் 1:15-51

யோவான் 1:15-51 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யோவான் அவரைக்குறித்து சாட்சி கொடுத்து: “எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். ஏனெனில், ‘அவர் எனக்கு முன்னிருந்தவர் என்று இவரைக் குறித்தே நான் சொன்னேன்’ என அவன் சத்தமிட்டுச் சொன்னான்.” அவருடைய நிறைவிலிருந்து, நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபையை பெற்றிருக்கிறோம். ஏனெனில் சட்டம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது; கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வந்தது. இறைவனை எவருமே ஒருபோதும் கண்டதில்லை. பிதாவாகிய இறைவனின் இருதயத்தின் அருகில் இருக்கின்ற அவருடைய ஒரே மகனும் தாமே இறைவனுமாயிருக்கிறவர் பிதாவை வெளிப்படுத்தினார். எருசலேமைச் சேர்ந்த யூத தலைவர்கள் யோவான் யார் என்று விசாரித்து அறியும்படி, ஆசாரியர்களையும் லேவியரையும் அவனிடத்தில் அனுப்பினார்கள்; அப்பொழுது அவன் கொடுத்த சாட்சி இதுவே: “நான் கிறிஸ்து அல்ல” என்று ஒளிவுமறைவின்றி மறுக்காமல், அறிக்கை செய்தான். அப்பொழுது அவர்கள் யோவானிடம், “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்றார்கள். அதற்கு அவன், “நான் எலியாவும் அல்ல” என்றான். தொடர்ந்து அவர்கள், “நீர் வரவேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டார்கள். அதற்கும் அவன், “இல்லை” என்றான். இறுதியாக அவர்கள், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் போய்ச் சொல்லும்படி நீர் ஒரு பதிலைச் சொல்லும். நீர் உம்மைக் குறித்து என்ன சொல்லுகிறீர்?” என்று கேட்டார்கள். யோவான் அதற்கு, இறைவாக்கினன் ஏசாயா கூறியிருந்த வார்த்தைகள் மூலம் பதிலளித்து, “கர்த்தருக்கு வழியை நேராக்குங்கள் என்று பாலைவனத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் நானே” என்றான். பரிசேயர்களால் அனுப்பப்பட்ட சிலர் யோவானிடம், “நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, வரவேண்டிய இறைவாக்கினருமல்ல என்றால், ஏன் நீர் திருமுழுக்கு கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள். யோவான் அதற்குப் பதிலாக, “நான் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். ஆனால் உங்கள் நடுவில் ஒருவர் நிற்கிறார். நீங்களோ அவரை அறியாதிருக்கிறீர்கள். அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிற ஒரு அடிமையாக இருக்கவும் நான் தகுதியற்றவன்” என்றான். இவை எல்லாம் யோர்தானின் அக்கரையிலிருந்த பெத்தானியா என்ற கிராமத்தில் நடைபெற்றது. அங்குதான் யோவான் திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். மறுநாளிலே இயேசு தன்னிடம் வருவதை யோவான் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனின் ஆட்டுக்குட்டி! இவரே உலகத்தின் பாவத்தை நீக்குகிறவர். ‘எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். அவர் எனக்கு முன்னமே இருந்தார்’ என்று நான் இவரைக் குறித்தே சொன்னேன். நானும் அவரை அறியாதிருந்தேன். அவரை இஸ்ரயேலருக்கு வெளிப்படுத்தவே, நான் வந்து தண்ணீரில் திருமுழுக்கு கொடுத்தேன்” என்றான். பின்பு யோவான் இந்த சாட்சியை சொன்னான்: “பரலோகத்திலிருந்து ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்கி, இயேசுவின்மேல் அமர்வதைக் கண்டேன். தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கும்படி என்னை அனுப்பினவர் எனக்குச் சொல்லியிருக்காவிட்டால், நானும் அவரை அறிந்திருக்கமாட்டேன். என்னை அனுப்பினவரோ, ‘பரிசுத்த ஆவியானவர் இறங்கி யார்மீது தங்குவதை நீ காண்கிறாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுக்கிறவர்’ என்று சொல்லியிருந்தார். இதை நான் கண்டேன். இவரே இறைவனின் மகன் என்று சாட்சி கூறுகிறேன்” என்றான். மறுநாளிலே மீண்டும் யோவான் தன்னுடைய சீடர்களில் இரண்டு பேருடன் அங்கு நின்றுகொண்டிருந்தான். இயேசு அவ்வழியாய் கடந்துபோகிறதை அவன் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனுடைய ஆட்டுக்குட்டி!” என்றான். அந்த இரண்டு சீடர்களும் அவன் இப்படிச் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள். இயேசு திரும்பிப்பார்த்து, அவர்கள் தம்மைப் பின்பற்றி வருகிறதைக் கண்டு, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், “போதகரே, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பதிலாக, “வந்து, நீங்களே பாருங்கள்” என்றார். எனவே அவர்கள் அவருடன் போய், இயேசு தங்கும் இடத்தைக் கண்டு, அந்த நாளை அவருடன் கழித்தார்கள். அப்பொழுது நேரம் பிற்பகல் நான்கு மணியாயிருந்தது. யோவான் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்ற அந்த இருவரில் ஒருவனின் பெயர் அந்திரேயா; இவன் சீமோன் பேதுருவின் சகோதரன். அந்திரேயா போய், முதலில் தன் சகோதரன் சீமோனைக் கண்டு அவனிடம், “நாங்கள் மேசியாவைக் கண்டோம்” என்று சொன்னான். மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம். அவன் சீமோனை இயேசுவினிடத்திற்குக் கூட்டிக்கொண்டு வந்தான். இயேசு சீமோனைப் பார்த்து, “யோவானின் மகனாகிய சீமோனே, நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். கேபா என்றால் கற்பாறை என்று பொருள்படும். அது கிரேக்க மொழியிலே பேதுரு எனப்படும். மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப் போகத் தீர்மானித்தார். அவர் பிலிப்புவைக் கண்டு அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார். அந்திரேயாவையும் பேதுருவையும் போன்றே பிலிப்புவும் பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவன். பின்பு பிலிப்பு நாத்தான்யேலைக் கண்டு அவனிடம், “மோசே தமது சட்டத்தில் குறிப்பிட்டிருந்தவரை நாங்கள் கண்டோம். அவரைக் குறித்தே இறைவாக்கினர்களும் எழுதியிருக்கிறார்கள். நாசரேத் ஊரைச் சேர்ந்தவரும், யோசேப்பின் மகனுமான இயேசுவே அவர்” என்றான். நாத்தான்யேலோ அவனிடம், “நாசரேத்தா! அங்கிருந்து நன்மை ஏதும் வரக்கூடுமோ?” என்று கேட்டான். அதற்கு பிலிப்பு, “வா, வந்து பார்” என்றான். அப்படியே நாத்தான்யேலும், தன்னை நோக்கி வருவதை இயேசு கண்டு, அவனைக்குறித்து, “இவன் ஒரு உண்மையான இஸ்ரயேலன், கபடம் ஏதுமில்லாதவன்” என்றார். அப்பொழுது நாத்தான்யேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான். இயேசு அவனுக்கு மறுமொழியாக, “பிலிப்பு உன்னைக் கூப்பிடுமுன், நீ அத்திமரத்தின்கீழ் இருக்கும்போதே நான் உன்னைக் கண்டுகொண்டேன்” என்றார். அப்பொழுது நாத்தான்யேல், “போதகரே, நீரே இறைவனின் மகன்; நீரே இஸ்ரயேலின் அரசன்” என்று அறிவித்தான். அதற்கு இயேசு அவனிடம், “நான் அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று உனக்குச் சொன்னதினாலேயா நீ என்னை விசுவாசிக்கிறாய்? நீ இதைப் பார்க்கிலும் பெரிதான காரியங்களைக் காண்பாய்” என்றார். அவர் தொடர்ந்து சொன்னதாவது, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், பரலோகம் திறந்திருக்கிறதையும், இறைவனுடைய தூதர்கள் மானிடமகனாகிய என்னிடத்திலிருந்து மேலே போவதையும், இறங்கி வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார்.

யோவான் 1:15-51 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப்பின் வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகவே, அவர் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டு சொன்னான். அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். ஏனென்றால், நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக வந்தது. தேவனை ஒருவனும் ஒருநாளும் பார்த்ததில்லை, பிதாவின் மடியில் இருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியர்களையும், லேவியர்களையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுக்காமல் அறிக்கை செய்ததும் இல்லாமல், நான் கிறிஸ்து இல்லை என்றும் அறிக்கை செய்தான். அப்பொழுது அவர்கள்: பின்பு யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் இல்லை என்றான். நீர் தீர்க்கதரிசியா என்று கேட்டார்கள். அதற்கும்: இல்லை என்றான். அவர்கள் பின்பும் அவனைப் பார்த்து: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் பதில் சொல்வதற்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருக்கிறேன் என்றான். அனுப்பப்பட்டவர்கள் பரிசேயர்களாக இருந்தார்கள். அவர்கள் அவனைப் பார்த்து: நீர் கிறிஸ்துவும் இல்லை, எலியாவும் இல்லை, தீர்க்கதரிசியானவரும் இல்லை என்றால், ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள். யோவான் அவர்களுக்கு மறுமொழியாக: நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே இருக்கிறார். அவர் எனக்குப்பின் வந்தும் என்னைவிட மேன்மையுள்ளவர்; அவருடைய காலணியின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை என்றான். இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானம் கொடுத்த பெத்தானியாவிலே நடந்தது. மறுநாளிலே யோவான் இயேசு தன்னிடத்தில் வருவதைப் பார்த்து: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்பே இருந்தபடியால் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொன்னேனே, அவர் இவர்தான். நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படுவதற்காகவே, நான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுக்கவந்தேன் என்றான். பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்து இறங்கி, இவர்மேல் இருக்கிறதைப் பார்த்தேன். நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் இருப்பதை நீ பார்ப்பாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். அதன்படியே நான் பார்த்து, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்து வருகிறேன் என்றான். மறுநாளிலே யோவானும் அவனுடைய சீடர்களில் இரண்டுபேரும் நிற்கும்போது, இயேசு நடந்து போகிறதை அவன் பார்த்து: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். அவன் அப்படிச் சொன்னதை அந்த இரண்டு சீடர்களும் கேட்டு, இயேசுவிற்குப் பின் சென்றார்கள். இயேசு திரும்பி, அவர்கள் தனக்குப் பின்னே வருகிறதைப் பார்த்து: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்கு போதகரே என்று அர்த்தம். அவர்: வந்துபாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்து, அந்த நாளில் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறைய மாலை நான்கு மணி. யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்னே சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைப் பார்த்து: மேசியாவைப் பார்த்தோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம். பின்பு, அவனை இயேசுவினிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா எனப்படுவாய் என்றார்; கேபா என்பதற்கு பேதுரு என்று அர்த்தம். மறுநாளிலே இயேசு கலிலேயாவிற்குப் போக விருப்பமாக இருந்து, பிலிப்புவைப் பார்த்து: நீ என் பின்னே வா என்றார். பிலிப்பு என்பவன், அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா ஊரைச் சேர்ந்தவன். பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதி இருக்கிறவரைப் பார்த்தோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்து ஊரானுமாகிய இயேசுவே என்றான். அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து எந்தவொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான். இயேசு நாத்தான்வேல் தம்மிடத்தில் வருவதைப் பார்த்து அவனைக்குறித்து: இதோ, கபடம் இல்லாத உத்தம இஸ்ரவேலன் என்றார். அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனைப் பார்த்து: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைப் பார்த்தேன் என்றார். அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: அத்திமரத்தின் கீழே உன்னைப் பார்த்தேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைப் பார்ப்பாய் என்றார். பின்னும், அவர் அவனைப் பார்த்து: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனிதகுமாரன் இடத்திலிருந்து ஏறுகிறதையும், இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் பார்ப்பீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

யோவான் 1:15-51 பரிசுத்த பைபிள் (TAERV)

அவரைப்பற்றி யோவான் மக்களிடம், “நான் சொல்லிக்கொண்டிருந்தவர் இவர்தான். ‘எனக்குப் பின்னால் வருகிறவர் என்னிலும் மேலானவர். இவர் எனக்கு முன்னரே இருப்பவர்’” என்று சாட்சி சொன்னான். அவர் (கிறிஸ்து) கிருபையும், உண்மையும் நிறைந்தவராய் இருந்தார். அவரிடமிருந்து நாமனைவரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம். மோசே மூலம் சட்டங்கள் கொடுக்கப்பட்டன! ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே கிருபையும், உண்மையும் வந்தன. எந்த மனிதனும் ஒருபோதும் தேவனைப் பார்த்ததில்லை. ஆனால் இயேசுவாகிய ஒரே குமாரனே தேவன். அவர் பிதாவுக்கு (தேவனுக்கு) மிகவும் நெருக்கமானவர். அத்துடன் குமாரனே தேவனின் தன்மையை நமக்கு வெளிக்காட்டினார். எருசலேமிலுள்ள யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடம் அனுப்பி வைத்தார்கள். “நீர் யார்?” என்று கேட்பதற்காக அவர்களை யூதர்கள் அனுப்பினர். யோவான் அவர்களிடம் தாராளமாகப் பேசினான். அவன் பதில் சொல்ல மறுக்கவில்லை. “நான் கிறிஸ்து அல்ல” என்று யோவான் தெளிவாகக் கூறினான். இது தான் அவன் மக்களிடம் சொன்னது. “பிறகு நீர் யார்? நீர் எலியாவா?” என்று மேலும் யூதர்கள் யோவானிடம் கேட்டார்கள். “இல்லை. நான் எலியா இல்லை” என்று யோவான் பதிலுரைத்தான். “நீர் தீர்க்கதரிசியா?” என யூதர்கள் கேட்டனர். “இல்லை. நான் தீர்க்கதரிசி இல்லை” என்றான் யோவான். “நீர் யார்? உம்மைப்பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் சொல்வதற்கென்று ஒரு பதில் சொல்லுங்கள். உம்மைப்பற்றி நீர் என்ன சொல்கிறீர்?” என்று யூதர்கள் கேட்டனர். யோவான் அவர்களிடம் தீர்க்கதரிசி ஏசாயாவின் வார்த்தைகளைச் சொன்னான். “வனாந்தரத்தில் சத்தமிடுகிறவனின் ஓசையாக நான் இருக்கிறேன். ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள்.’” யூதர்களான இவர்கள் பரிசேயர்கள் என்பவர்களால் அனுப்பப்பட்டிருந்தனர். “நீர் கிறிஸ்து அல்ல என்று கூறுகிறீர். நீர் எலியாவோ தீர்க்கதரிசியோ அல்ல என்றும் கூறுகிறீர். பின்னர் நீர் ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர்?” என அவர்கள் யோவானிடம் கேட்டார்கள். “நான் தண்ணீரால் ஞானஸ்நானம் தருகிறேன். ஆனால் உங்களோடு இங்கே இருக்கிற ஒருவர் உங்களால் அறியப்படாதவராக இருக்கிறார். அந்த ஒருவர்தான் எனக்குப் பின்னால் வருகிறவர். அவரது செருப்பின் வாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவன் நான்” என்று யோவான் பதிலுரைத்தான். இந்நிகழ்ச்சிகள் யாவும் யோர்தான் ஆற்றின் அக்கரையில் உள்ள பெத்தானியாவில் நடைபெற்றன. இங்கேதான் யோவான் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான். மறுநாள் தன்னை நோக்கி இயேசு வருவதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர் தான் தேவனுடைய ஆட்டுக்குட்டி. உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கப்போகிறவர். நான் ஏற்கெனவே சொல்லிக்கொண்டிருந்தவர் இவர் தான். ‘எனக்குப் பிறகு ஒரு மனிதர் வருவார். அவர் என்னிலும் மேலானவர். ஏனென்றால் அவர் எனக்கு முன்னமே வாழ்ந்துகொண்டிருக்கிறவர். அவர் எப்போதும் வாழ்கிறவர்.’ இவரை நானும் அறியாதிருந்தேன். ஆனாலும் நான் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்க வந்திருக்கிறேன். ஆகையால் இஸ்ரவேல் மக்கள் இயேசுதான் கிறிஸ்து என அறிந்துகொள்ள முடியும். “கிறிஸ்து யாரென்று நானும் அறியாமல்தான் இருந்தேன். ஆனால் தேவன் என்னைத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தார். ‘நீ யார் மீது பரிசுத்த ஆவியானர் இறங்கி அமர்வதைக் காண்பாயோ, அவர்தான் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்’ என்று தேவன் என்னிடம் கூறினார்” என்றான். “நான் அவ்வாறு நிகழ்வதைப் பார்த்தேன். ஆவியானவர் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். அந்த ஆவியானவர் ஒரு புறாவைப்போல் இறங்கி இயேசுவின் மீது அமர்ந்தார். நான் இதைத்தான் மக்களிடம் சொல்லி வருகிறேன். ‘இயேசுதான் தேவனின் குமாரன்’” என்று யோவான் சொன்னான். மறுநாள் மறுபடியும் யோவான் அங்கே இருந்தான். அவனோடு அவனைப் பின்பற்றுகிற சீஷர்களில் இரண்டு பேர் இருந்தனர். இயேசு நடந்துசெல்வதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர்தான் தேவனின் ஆட்டுக்குட்டி” என்றான். அந்த இரு சீஷர்களும் யோவான் கூறுவதைக் கேட்டார்கள். ஆகையால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு திரும்பி அவர்களைப் பார்த்து கேட்டார். அந்த இருவரும், “போதகரே, நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டனர். “என்னோடு வாருங்கள். நீங்கள் கண்டுகொள்வீர்கள்” என்று இயேசு பதிலுரைத்தார். எனவே அவர்கள் இருவரும் அவர் பின்னால் சென்றனர். இயேசு தங்கியிருக்கும் இடத்தையும் கண்டனர். அன்று அவர்கள் அவரோடு அங்கே தங்கியிருந்தனர். அப்பொழுது நேரம் சுமார் நான்கு மணி. இயேசுவைப்பற்றி யோவான் சொன்னதன் மூலமாகத் தெரிந்துகொண்டதால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். அந்த இருவரில் ஒருவன் பெயர் அந்திரேயா. அவன் சீமோன் பேதுருவின் சகோதரன். முதல் காரியமாக அவன் தன் சகோதரன் சீமோன் பேதுருவைப் போய்ப் பார்த்தான். “நாங்கள் மேசியாவைக் (அதன் பொருள் கிறிஸ்து) கண்டுகொண்டோம்” என்று கூறினான். பிறகு அந்திரேயா சீமோனை இயேசுவிடம் அழைத்துக் கொண்டு வந்தான். இயேசு சீமோனைப் பார்த்து, “நீ யோவானுடைய குமாரனான சீமோன். நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். (“கேபா” என்பதற்கு “பேதுரு” என்று அர்த்தம்.) மறுநாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்லத் தீர்மானித்தார். இயேசு பிலிப்புவைக் கண்டு, “என்னைத் தொடர்ந்து வா” என்றார். பிலிப்பு, அந்திரேயா, பேதுரு ஆகியோரின் ஊரான பெத்சாயிதாவைச் சேர்ந்தவன். பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து, “மோசே எழுதியிருக்கிற சட்டங்களை எண்ணிப்பார். மோசே வரப்போகிற ஒரு மனிதரைப்பற்றி எழுதினார். தீர்க்கதரிசிகளும் அவரைப்பற்றி எழுதி இருக்கிறார்கள். நாங்கள் அவரைத் தெரிந்துகொண்டோம். அவர் பெயர் இயேசு. யோசேப்பின் குமாரன். நாசரேத்திலிருந்து வருகிறார்.” ஆனால் நாத்தான்வேல் பிலிப்புவிடம், “நாசரேத்தா? நாசரேத்திலிருந்து ஏதாவது நன்மை வர இயலுமா?” எனக் கேட்டான். “வந்து பார்” என்று பதிலுரைத்தான் பிலிப்பு. நாத்தான்வேல் தன்னிடம் வந்துகொண்டிருப்பதை இயேசு பார்த்தார். “இதோ வந்துகொண்டிருக்கிற இவன் உண்மையாகவே தேவனின் மக்களில் ஒருவன். இவனிடம் எந்த தவறும் இல்லை” என்று இயேசு கூறினார். “என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என நாத்தான்வேல் கேட்டான். பிலிப்பு என்னைப்பற்றி உனக்குக் கூறும் முன்பே, “நீ அத்தி மரத்தின் கீழே நிற்கும்போதே உன்னைப் பார்த்தேன்” என்று இயேசு சொன்னார். பிறகு இயேசுவிடம், “ஆண்டவரே! நீங்கள் தான் தேவகுமாரன். இஸ்ரவேலின் ராஜா” என்று நாத்தான்வேல் கூறினான். “நான் உன்னை அத்தி மரத்தின் அடியில் பார்த்ததாக ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அதனால் என்மீது நீ நம்பிக்கை வைத்தாய். ஆனால் அதைவிட மேலும் சிறந்தவைகளைக் காண்பாய்” என்று இயேசு கூறினார். அவர் மேலும், “நான் மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன். பரலோக வாசல் திறந்திருப்பதையும், மனிதகுமாரனிடத்திலிருந்து தேவதூதர்கள் மேலே செல்வதையும் கீழே இறங்குவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார்.

யோவான் 1:15-51 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான். அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம். எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான். அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான். அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள். அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங்கொடுக்கிறீர் என்று கேட்டார்கள். யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான். இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன. மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான். நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கவந்தேன் என்றான். பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான். மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது, இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள். இயேசு திரும்பி, அவர்கள் பின் செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம். அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையதினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது. யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார். பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான். பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான். இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.