யோவான் 1:1-28

யோவான் 1:1-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆரம்பத்தில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை இறைவனுடன் இருந்தது, அந்த வார்த்தை இறைவனாயிருந்தது. அந்த வார்த்தையானவர் ஆரம்பத்திலேயே இறைவனோடு இருந்தார். அந்த வார்த்தையானவர் மூலமாகவே எல்லாம் படைக்கப்பட்டன; படைக்கப்பட்டிருப்பவைகளில் எதுவுமே அவரில்லாமல் படைக்கப்படவில்லை. அவரில் ஜீவன் இருந்தது; அந்த ஜீவனே எல்லா மனிதருக்கும் வெளிச்சமாயிருந்தது. அந்த வெளிச்சம் இருளிலே பிரகாசிக்கிறது, ஆனால் இருள் அதை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை. இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான்; அவனுடைய பெயர் யோவான். தன் மூலமாய் எல்லா மக்களும் விசுவாசிக்கும்படியாகவே அந்த வெளிச்சத்தைக் குறித்து சாட்சி கொடுக்கும் ஒரு சாட்சியாகவே அந்த யோவான் வந்தான். அவன் வெளிச்சமாய் இருக்கவில்லை; அவனோ அந்த வெளிச்சத்திற்கான ஒரு சாட்சியாக மாத்திரமே வந்தான். உலகத்திற்குள் வந்து ஒவ்வொரு மனிதனுக்கும் வெளிச்சத்தைக் கொடுத்த வெளிச்சமே அந்த உண்மையான வெளிச்சம். அந்த வார்த்தையானவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் படைக்கப்பட்டிருந்தும், உலகமோ அவரை இன்னார் என்று அறிந்துகொள்ளவில்லை. அவர் தமக்குரிய இடத்திற்கே வந்தார். ஆனால் அவருடைய சொந்த மக்களோ, அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர் தம்மை ஏற்றுக்கொண்டு தம்முடைய பெயரில் விசுவாசம் வைத்த அனைவருக்கும், இறைவனுடைய பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார். இப்பிள்ளைகள் இரத்த உறவினாலோ, மனித தீர்மானத்தினாலோ, புருஷனுடைய விருப்பத்தினாலோ உண்டானவர்கள் அல்ல. மாறாக இவர்கள் இறைவனால் பிறப்பிக்கப்பட்டவர்கள். வார்த்தையானவரே மனித உடல் எடுத்து நம்மிடையே வாழ்ந்தார். நாங்கள் அவருடைய மகிமையைக் கண்டோம். பிதாவின் ஒரே மகனுக்குரிய அந்த மகிமையைக் கண்டோம். அந்த வார்த்தையானவர் கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் பிதாவிடமிருந்து வந்தவர். யோவான் அவரைக்குறித்து சாட்சி கொடுத்து: “எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். ஏனெனில், ‘அவர் எனக்கு முன்னிருந்தவர் என்று இவரைக் குறித்தே நான் சொன்னேன்’ என அவன் சத்தமிட்டுச் சொன்னான்.” அவருடைய நிறைவிலிருந்து, நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபையை பெற்றிருக்கிறோம். ஏனெனில் சட்டம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது; கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வந்தது. இறைவனை எவருமே ஒருபோதும் கண்டதில்லை. பிதாவாகிய இறைவனின் இருதயத்தின் அருகில் இருக்கின்ற அவருடைய ஒரே மகனும் தாமே இறைவனுமாயிருக்கிறவர் பிதாவை வெளிப்படுத்தினார். எருசலேமைச் சேர்ந்த யூத தலைவர்கள் யோவான் யார் என்று விசாரித்து அறியும்படி, ஆசாரியர்களையும் லேவியரையும் அவனிடத்தில் அனுப்பினார்கள்; அப்பொழுது அவன் கொடுத்த சாட்சி இதுவே: “நான் கிறிஸ்து அல்ல” என்று ஒளிவுமறைவின்றி மறுக்காமல், அறிக்கை செய்தான். அப்பொழுது அவர்கள் யோவானிடம், “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்றார்கள். அதற்கு அவன், “நான் எலியாவும் அல்ல” என்றான். தொடர்ந்து அவர்கள், “நீர் வரவேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டார்கள். அதற்கும் அவன், “இல்லை” என்றான். இறுதியாக அவர்கள், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் போய்ச் சொல்லும்படி நீர் ஒரு பதிலைச் சொல்லும். நீர் உம்மைக் குறித்து என்ன சொல்லுகிறீர்?” என்று கேட்டார்கள். யோவான் அதற்கு, இறைவாக்கினன் ஏசாயா கூறியிருந்த வார்த்தைகள் மூலம் பதிலளித்து, “கர்த்தருக்கு வழியை நேராக்குங்கள் என்று பாலைவனத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் நானே” என்றான். பரிசேயர்களால் அனுப்பப்பட்ட சிலர் யோவானிடம், “நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, வரவேண்டிய இறைவாக்கினருமல்ல என்றால், ஏன் நீர் திருமுழுக்கு கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள். யோவான் அதற்குப் பதிலாக, “நான் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். ஆனால் உங்கள் நடுவில் ஒருவர் நிற்கிறார். நீங்களோ அவரை அறியாதிருக்கிறீர்கள். அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிற ஒரு அடிமையாக இருக்கவும் நான் தகுதியற்றவன்” என்றான். இவை எல்லாம் யோர்தானின் அக்கரையிலிருந்த பெத்தானியா என்ற கிராமத்தில் நடைபெற்றது. அங்குதான் யோவான் திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான்.

யோவான் 1:1-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆரம்பத்திலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது. அவர் ஆரம்பத்திலே தேவனோடு இருந்தார். எல்லாமும் அவர் மூலமாக உண்டானது; உண்டானது ஒன்றும் அவர் இல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்கு ஒளியாக இருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதை மேற்கொள்ளவில்லை. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான், அவன் பெயர் யோவான். அவன் மூலமாக எல்லோரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாக இருந்தான். உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாக உண்டானது, உலகமோ அவரை அறியவில்லை. அவர் அவருக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாக அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது சரீரவிருப்பத்தினாலாவது கணவனுடைய விருப்பத்தினாலாவது பிறக்காமல், தேவனாலே பிறந்தவர்கள். அந்த வார்த்தை சரீரமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக, நம்மிடையே வாழ்ந்தார்; அவருடைய மகிமையைப் பார்த்தோம்; அது பிதாவிற்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப்பின் வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகவே, அவர் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டு சொன்னான். அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். ஏனென்றால், நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக வந்தது. தேவனை ஒருவனும் ஒருநாளும் பார்த்ததில்லை, பிதாவின் மடியில் இருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியர்களையும், லேவியர்களையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுக்காமல் அறிக்கை செய்ததும் இல்லாமல், நான் கிறிஸ்து இல்லை என்றும் அறிக்கை செய்தான். அப்பொழுது அவர்கள்: பின்பு யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் இல்லை என்றான். நீர் தீர்க்கதரிசியா என்று கேட்டார்கள். அதற்கும்: இல்லை என்றான். அவர்கள் பின்பும் அவனைப் பார்த்து: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் பதில் சொல்வதற்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருக்கிறேன் என்றான். அனுப்பப்பட்டவர்கள் பரிசேயர்களாக இருந்தார்கள். அவர்கள் அவனைப் பார்த்து: நீர் கிறிஸ்துவும் இல்லை, எலியாவும் இல்லை, தீர்க்கதரிசியானவரும் இல்லை என்றால், ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள். யோவான் அவர்களுக்கு மறுமொழியாக: நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே இருக்கிறார். அவர் எனக்குப்பின் வந்தும் என்னைவிட மேன்மையுள்ளவர்; அவருடைய காலணியின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை என்றான். இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானம் கொடுத்த பெத்தானியாவிலே நடந்தது.

யோவான் 1:1-28 பரிசுத்த பைபிள் (TAERV)

உலகம் ஆரம்பிக்கும் முன்பே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது. அவர் (வார்த்தை) தொடக்கக் காலத்திலேயே தேவனோடு இருந்தார். அனைத்தும் அவர் (வார்த்தை) மூலமாகவே உண்டாக்கப்பட்டன. அவரில்லாமல் எதுவும் உருவாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் உலகத்து மக்களுக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளிலே வெளிச்சத்தைத் தந்தது. இருளானது அந்த ஒளியை மேற்கொள்ளவில்லை. யோவான் என்ற பெயருள்ள ஒரு மனிதன் இருந்தான். அவன் தேவனால் அனுப்பப்பட்டவன். அவன் அந்த ஒளியைப் (கிறிஸ்து) பற்றி மக்களிடம் சொல்வதற்காக வந்தான். எனவே மக்கள் அனைவரும் யோவான் மூலமாக அந்த ஒளியைப்பற்றிக் கேள்விப்படவும் நம்பிக்கை வைக்கவும் முடிந்தது. யோவான் ஒளியல்ல. ஆனால் அவன் அந்த ஒளியைப்பற்றி மக்களிடம் சொல்லவே வந்தவன். அனைத்து மக்களுக்கும் வெளிச்சத்தைத் தருகிற அந்த உண்மையான ஒளி உலகத்திற்கு வந்து கொண்டிருந்தது. அவர் (வார்த்தை) உலகத்தில் ஏற்கெனவே இருந்தார். உலகம் அவர் மூலமாகவே உண்டாக்கப்பட்டது. ஆனால் உலகம் அவரை அறிந்துகொள்ளாமல் இருந்தது. அவருக்குச் சொந்தமான உலகத்துக்கு அவர் வந்தார். ஆனால் அவருக்குச் சொந்தமான மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர் அவரை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நம்பினர். தன்னை நம்பியவர்களுக்கு தேவனின் பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார். இந்தப் பிள்ளைகள் ஏனைய சிறிய குழந்தைகள் பிறப்பதைப்போல பிறக்கவில்லை. இவர்கள் ஒரு தாய் தந்தையின் விருப்பத்தின்படியோ, திட்டத்தின்படியோ பிறக்கவில்லை. இந்தக் குழந்தைகள் தேவனாலேயே பிறந்தனர். வார்த்தை ஒரு மனிதனாகி நம்மிடையே வாழ்ந்தார். அவரது மகிமையை நாம் பார்த்தோம். அந்த மகிமை தந்தையின் ஒரே குமாரனுக்கு உரியது. அவ்வார்த்தை கிருபையும், உண்மையும் நிறைந்ததாயிற்று. அவரைப்பற்றி யோவான் மக்களிடம், “நான் சொல்லிக்கொண்டிருந்தவர் இவர்தான். ‘எனக்குப் பின்னால் வருகிறவர் என்னிலும் மேலானவர். இவர் எனக்கு முன்னரே இருப்பவர்’” என்று சாட்சி சொன்னான். அவர் (கிறிஸ்து) கிருபையும், உண்மையும் நிறைந்தவராய் இருந்தார். அவரிடமிருந்து நாமனைவரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம். மோசே மூலம் சட்டங்கள் கொடுக்கப்பட்டன! ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே கிருபையும், உண்மையும் வந்தன. எந்த மனிதனும் ஒருபோதும் தேவனைப் பார்த்ததில்லை. ஆனால் இயேசுவாகிய ஒரே குமாரனே தேவன். அவர் பிதாவுக்கு (தேவனுக்கு) மிகவும் நெருக்கமானவர். அத்துடன் குமாரனே தேவனின் தன்மையை நமக்கு வெளிக்காட்டினார். எருசலேமிலுள்ள யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடம் அனுப்பி வைத்தார்கள். “நீர் யார்?” என்று கேட்பதற்காக அவர்களை யூதர்கள் அனுப்பினர். யோவான் அவர்களிடம் தாராளமாகப் பேசினான். அவன் பதில் சொல்ல மறுக்கவில்லை. “நான் கிறிஸ்து அல்ல” என்று யோவான் தெளிவாகக் கூறினான். இது தான் அவன் மக்களிடம் சொன்னது. “பிறகு நீர் யார்? நீர் எலியாவா?” என்று மேலும் யூதர்கள் யோவானிடம் கேட்டார்கள். “இல்லை. நான் எலியா இல்லை” என்று யோவான் பதிலுரைத்தான். “நீர் தீர்க்கதரிசியா?” என யூதர்கள் கேட்டனர். “இல்லை. நான் தீர்க்கதரிசி இல்லை” என்றான் யோவான். “நீர் யார்? உம்மைப்பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் சொல்வதற்கென்று ஒரு பதில் சொல்லுங்கள். உம்மைப்பற்றி நீர் என்ன சொல்கிறீர்?” என்று யூதர்கள் கேட்டனர். யோவான் அவர்களிடம் தீர்க்கதரிசி ஏசாயாவின் வார்த்தைகளைச் சொன்னான். “வனாந்தரத்தில் சத்தமிடுகிறவனின் ஓசையாக நான் இருக்கிறேன். ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள்.’” யூதர்களான இவர்கள் பரிசேயர்கள் என்பவர்களால் அனுப்பப்பட்டிருந்தனர். “நீர் கிறிஸ்து அல்ல என்று கூறுகிறீர். நீர் எலியாவோ தீர்க்கதரிசியோ அல்ல என்றும் கூறுகிறீர். பின்னர் நீர் ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர்?” என அவர்கள் யோவானிடம் கேட்டார்கள். “நான் தண்ணீரால் ஞானஸ்நானம் தருகிறேன். ஆனால் உங்களோடு இங்கே இருக்கிற ஒருவர் உங்களால் அறியப்படாதவராக இருக்கிறார். அந்த ஒருவர்தான் எனக்குப் பின்னால் வருகிறவர். அவரது செருப்பின் வாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவன் நான்” என்று யோவான் பதிலுரைத்தான். இந்நிகழ்ச்சிகள் யாவும் யோர்தான் ஆற்றின் அக்கரையில் உள்ள பெத்தானியாவில் நடைபெற்றன. இங்கேதான் யோவான் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான்.

யோவான் 1:1-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான். அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான். உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான். அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம். எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான். அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான். அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள். அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங்கொடுக்கிறீர் என்று கேட்டார்கள். யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான். இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.

யோவான் 1:1-28

யோவான் 1:1-28 TAOVBSIயோவான் 1:1-28 TAOVBSI