எரேமியா 7:1-11

எரேமியா 7:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவே: “நீ யெகோவாவின் ஆலய வாசலில் நின்று இச்செய்தியைப் பிரசித்தப்படுத்து: “ ‘யெகோவாவை வழிபட இந்த வாசல்களின் வழியாக வருகிற யூதா நாட்டு மக்களே, நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்திருத்துங்கள். அப்பொழுது நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன். ஏமாற்றும் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து, “இதுவே யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம்!” என்று சொல்லாதிருங்கள். நீங்கள் உண்மையாக உங்கள் வழிகளையும், செயல்களையும் மாற்றி, ஒருவரோடொருவர் நீதியாய் நடவுங்கள், அந்நியரையும், தந்தையற்றவர்களையும், விதவைகளையும் ஒடுக்கவேண்டாம். இந்த இடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும், வேறு தெய்வங்களைப் பின்பற்றி உங்களுக்கே தீங்கை உண்டாக்காமலும் இருங்கள். அப்படி இருப்பீர்களானால், உங்கள் முற்பிதாக்களுக்கு என்றென்றைக்குமாக நான் கொடுத்த இந்த நாட்டிலுள்ள, இந்த இடத்தில் உங்களைக் குடியிருக்க வைப்பேன். ஆனால் பாருங்கள், நீங்கள் பயனற்ற ஏமாற்று வார்த்தைகளையே நம்புகிறீர்கள். “ ‘நீங்கள் திருடுகிறீர்கள், கொலைசெய்கிறீர்கள், விபசாரம் செய்கிறீர்கள், பொய் சத்தியம் பண்ணுகிறீர்கள், பாகாலுக்குத் தூபங்காட்டுகிறீர்கள், நீங்கள் அறியாத வேறு தெய்வங்களைப் பின்பற்றுகிறீர்கள். பின்பு என் பெயரைக் கொண்டிருக்கும் இந்த ஆலயத்திற்கு முன்பாக வந்துநின்று, “நாங்கள் பாதுகாப்பாயிருக்கிறோம்” என்கிறீர்கள். இந்த எல்லா அருவருப்புகளையும் செய்வதற்காகவா நீங்கள் பாதுகாக்கப்பட்டீர்கள்? என் பெயரைக் கொண்டிருக்கும் இந்த ஆலயம் உங்களுக்கு கள்ளர் குகையானதோ? ஆனால் நான் கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருக்கிறேன்! என்று யெகோவா அறிவிக்கிறார்.

எரேமியா 7:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: நீ யெகோவாவுடைய ஆலயத்தின் வாசலில் நின்று, அங்கே அறிவித்துச் சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால், யெகோவாவைப் பணிந்துகொள்ள இந்த வாசல்களுக்குள்ளே நுழைகிற யூத மக்களாகிய நீங்களெல்லோரும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த இடத்தில் குடியிருக்கச்செய்வேன். யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த்தைகளை நம்பிக்கொள்ளாதிருங்கள். நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் செயல்களையும் நன்றாக ஒழுங்குபடுத்தி, நீங்கள் மனிதனுக்கும் மனிதனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து, அந்நியதேசத்தாரையும், அனாதையானவனையும், விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த இடத்தில் சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தெய்வங்களைப் பின்பற்றாமலும் இருப்பீர்களேயாகில், அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த இடத்தில் உங்களைச் சதாகாலமும் குடியிருக்கவும்செய்வேன். இதோ, ஒன்றுக்கும் உதவாத பொய்வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்செய்து, பொய்சாட்சி சொல்லி, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி, அதன்பின்பு வந்து, என் பெயர் சூட்டப்பட்ட இந்த ஆலயத்தில் எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ? என் பெயர் சூட்டப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர் குகையானதோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 7:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

எரேமியாவிற்கான கர்த்தருடைய செய்தி இது: எரேமியா, தேவனுடைய வீட்டுக் கதவருகில் நில். வாசலில் இந்த செய்தியைப் பிரசங்கம் செய்: “யூதா நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களே! கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள்! இந்த வாசல் வழியாக கர்த்தரை ஆராதிக்க வருகின்ற ஜனங்களே, இந்தச் செய்தியைக் கேளுங்கள். இஸ்ரவேல் ஜனங்களின் தேவனாகிய கர்த்தர் இருக்கிறார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதைத் தான் சொல்கிறார்: ‘உங்களது வாழ்க்கையை மாற்றுங்கள். நல்லவற்றைச் செய்யுங்கள், இதனை நீங்கள் செய்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன். சில ஜனங்கள் கூறுகிற பொய்களில் நம்பிக்கை வைக்காதீர்கள். இதுதான் கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய ஆலயம்’ என்று அவர்கள் கூறுகின்றனர். நீங்கள் உங்களது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு நற் செயல்களைச் செய்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் நியாயமாக இருக்கவேண்டும். நீங்கள் அந்நியர்களுக்கும் நியாயமாக இருக்கவேண்டும். நீங்கள் விதவைகளுக்கும் அநாதைகளுக்கும் நல்லவற்றைச் செய்யவேண்டும். ஒன்றுமறியாத ஜனங்களைக் கொல்லவேண்டாம். மற்ற தெய்வங்களைப் பின் பற்றவேண்டாம். ஏனென்றால் அவை உங்கள் வாழ்வை அழித்துவிடும். நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன்: நான் உங்களது முற்பிதாக்களுக்கு இந்த நாட்டை என்றென்றைக்கும் வைத்திருக்கும்படி கொடுத்தேன். “ஆனால் நீங்கள் பொய்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பொய்கள் பயனில்லாதவை. நீங்கள் களவும், கொலையும் செய்வீர்களா? நீங்கள் விபச்சாரம் என்னும் பாவத்தை செய்வீர்களா? நீங்கள் மற்றவர்கள் மேல் பொய்வழக்கு போடுவீர்களா? நீங்கள் பொய்த் தெய்வமான பாகாலைத் தொழுதுகொண்டு, உங்களால் அறியப்படாத அந்நிய தெய்வங்களைப் பின்பற்றுவீர்களா? நீங்கள் அந்தப் பாவங்களைச் செய்தால், எனது நாமத்தால் அழைக்கப்படும். இந்த வீட்டில் எனக்கு முன்னால் நிற்க முடியும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் இதுபோன்ற கெட்ட செயல்களையெல்லாம் செய்துகொண்டு, எனக்கு முன்னால் நின்று, ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்’ என்று சொல்லிக்கொண்டே தீய செயல்களைத் தொடர்ந்து செய்யலாம் என்று நினைக்கிறீர்களா? இந்த ஆலயம் எனது நாமத்தால் அழைக்கப்படுகின்றது. இந்த ஆலயம் உங்களுக்கு, கள்ளர் பதுங்கும் இடமே ஒழிய, வேறு எதுவுமில்லையா? நான் உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 7:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: நீ கர்த்தருடைய ஆலயத்தின் வாசலிலே நின்று, அங்கே கூறிச் சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால், கர்த்தரைப் பணிந்துகொள்ள இந்த வாசல்களுக்குள்ளே பிரவேசிக்கிற யூத ஜனங்களாகிய நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன். கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த்தைகளை நம்பிக் கொள்ளாதிருங்கள். நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் நன்றாய்ச் சீர்ப்படுத்தி, நீங்கள் மனுஷனுக்கும் மனுஷனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து, பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த ஸ்தலத்திலே சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும் இருப்பீர்களேயாகில், அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த ஸ்தலத்திலே உங்களைச் சதாகாலமும் குடியிருக்கப்பண்ணுவேன். இதோ, ஒன்றுக்கும் உதவாத பொய்வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி, பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ? என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர் குகையாயிற்றோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.