எரேமியா 42:1-12

எரேமியா 42:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது இராணுவ அதிகாரிகள் எல்லோரும் கரேயாவின் மகன் யோகனான், ஓசாயாவின் மகன் யெசனியா மற்றும் சிறியோர், பெரியோர் உட்பட எல்லா மக்களும், இறைவாக்கினன் எரேமியாவிடம் வந்தார்கள். அவர்கள் அவனிடம், “தயவுசெய்து எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, இங்கு மீதியாயிருக்கும் எல்லோருக்காகவும் உன் இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடு. ஏனெனில் நீ இப்பொழுது பார்க்கிறபடி, ஒருகாலத்தில் நாங்கள் அநேகராயிருந்தோம். இப்பொழுதோ சிலர் மட்டுமே மீதியாயிருக்கிறோம். நாங்கள் எங்கே போகவேண்டும், என்ன செய்யவேண்டும் என்பதை உன் இறைவனாகிய யெகோவா எங்களுக்குச் சொல்லும்படி அவரிடம் மன்றாடு” என்று சொன்னார்கள். அதற்கு இறைவாக்கினன் எரேமியா, “நீங்கள் சொன்னதை நான் கேட்டேன். நீங்கள் கேட்டுக்கொண்டபடியே, உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் நிச்சயமாக நான் மன்றாடுவேன். யெகோவா சொல்லும் எல்லாவற்றையும் ஒன்றும் மறைக்காமல் உங்களுக்குச் சொல்வேன்” என்றான். அப்பொழுது அவர்கள் எரேமியாவிடம், “உம்முடைய இறைவனாகிய யெகோவா எங்களிடம் கூறும்படி, உமக்கு எவைகளைச் சொல்லி அனுப்புகிறாரோ, அவைகளின்படியெல்லாம் நாங்கள் செய்யாதே போனால், யெகோவா எங்களுக்கெதிராக உண்மையும், நம்பத்தகுந்த சாட்சியுமாய் இருப்பாராக. அவை சாதகமானவையோ, சாதகமில்லாதவையோ, எதுவானாலும் உம்மை அனுப்புகிற நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிவோம். நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு கீழ்ப்படிவதால் இவை நமக்கு நன்மையாகவே முடியும்” என்றார்கள். பத்து நாட்களின்பின் யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது. அப்பொழுது அவன் கரேயாவின் மகன் யோகனானையும், அவனுடன்கூட இருந்த இராணுவத் தளபதிகளையும், சிறியவர்களும், பெரியவர்களுமான யாவரையும் ஒன்றாய் வரும்படி அழைத்தான். அவன் அவர்களிடம், “நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குமுன் கொண்டுபோகும்படி என்னை அனுப்பினீர்கள். அவர் சொல்வதாவது: ‘நீங்கள் தொடர்ந்து யூதாவிலேயே தங்கியிருப்பீர்களானால், நான் உங்களைக் கட்டியெழுப்புவேன்; இடித்து வீழ்த்தமாட்டேன். உங்களை நாட்டுவேன்; பிடுங்கி எறியமாட்டேன். ஏனெனில் நான் உங்கள்மீது வரப்பண்ணின பேராபத்தைக் குறித்து வருந்துகிறேன். நீங்கள் இப்பொழுது பயப்படுகிற, பாபிலோன் அரசனைக் குறித்துப் பயப்படவேண்டாம்; அவனுக்கு அஞ்சவும் வேண்டாம் என்று யெகோவா அறிவிக்கிறார். ஏனெனில் நான் உங்களுடனேகூட இருக்கிறேன். நான் உங்களைக் காப்பாற்றி உங்களை அவனுடைய கையிலிருந்து மீட்பேன். அவன் உங்களில் இரக்கங்கொண்டு, உங்களை உங்கள் நாட்டிலேயே திரும்பவும் குடியமர்த்தும்படி, நான் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன்.’

எரேமியா 42:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது எல்லா இராணுவச்சேர்வைக்காரரும், கரேயாவின் மகனாகிய யோகனானும், ஓசாயாவின் மகனாகிய யெசனியாவும், சிறியோர்முதல் பெரியோர்வரையுள்ள எல்லா மக்களும் சேர்ந்துவந்து, தீர்க்கதரிசியாகிய எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய யெகோவா நாங்கள் நடக்கவேண்டிய வழியையும், செய்யவேண்டிய காரியத்தையும் எங்களுக்குத் தெரிவிப்பதற்காக, நீர் எங்கள் விண்ணப்பத்திற்கு இடங்கொடுத்து, மீதியாயிருக்கிற இந்த எல்லா மக்களாகிய எங்களுக்காக உம்முடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி ஜெபம்செய்யும். உம்முடைய கண்கள் எங்களைக் காண்கிறபடியே திரளான மக்களில் கொஞ்சம் நபர்களே மீதியாயிருக்கிறோம் என்றார்கள். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி அவர்களை நோக்கி: நீங்கள் சொன்னதைக் கேட்டேன்; இதோ, உங்கள் வார்த்தையின்படியே உங்கள் தேவனாகிய யெகோவாவை நோக்கி ஜெபம்செய்வேன்; யெகோவா உங்களுக்கு மறுஉத்திரவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் நான் உங்களுக்கு ஒன்றையும் மறைக்காமல் அறிவிப்பேன் என்றான். அப்பொழுது அவர்கள் எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய யெகோவா உம்மைக்கொண்டு எங்களுக்குச் சொல்லியனுப்பும் எல்லா வார்த்தைகளின்படியும் நாங்கள் செய்யாவிட்டால், யெகோவா நமக்கு நடுவே சத்தியமும் உண்மையுமான சாட்சியாயிருப்பாராக. அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாக நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள். பத்துநாள் சென்றபின்பு, யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டானது. அப்பொழுது அவன், கரேயாவின் மகனாகிய யோகனானையும், அவனுடன் இருந்த எல்லாப் போர்வீரர்களையும், சிறியோர்முதல் பெரியோர்வரை உண்டான எல்லா மக்களையும் அழைத்து, அவர்களை நோக்கி: உங்களுக்காக விண்ணப்பம் செய்வதற்கு நீங்கள் என்னை அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் இந்தத் தேசத்தில் தங்கியிருந்தால், நான் உங்களைக் கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன்; உங்களை நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன்; நான் உங்களுக்குச் செய்திருக்கிற தீங்குக்கு மனம் வருந்தினேன். நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்குப் பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று யெகோவா சொல்லுகிறார், உங்களைக் காப்பாற்றுவதற்காகவும், உங்களை அவன் கைக்கு விடுவிப்பதற்காகவும் நான் உங்களுடன் இருந்து, அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சொந்ததேசத்திற்கு உங்களைத் திரும்பிவரச்செய்கிறதற்கும் உங்களுக்கு இரக்கம் செய்வேன்.

எரேமியா 42:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

அவர்கள் கெருத் கிம்காமினில் இருக்கும் போது, யோகனானும் ஓசாயாவின் குமாரனான யெசனியாவும் தீர்க்கதரிசி எரேமியாவிடம் சென்றனர். எல்லாப் படை அதிகாரிகளும் யோகனான் மற்றும் யெசனியாவுடன் சென்றனர். முக்கியத்துவம் குறைந்த ஜனங்களில் இருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள் வரை அனைத்து ஜனங்களும் எரேமியாவிடம் சென்றனர். அந்த ஜனங்களனை வரும் எரேமியாவிடம், “எரேமியா, நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை தயவுசெய்துக் கேளும். யூதாவின் வம்சத்திலிருந்து தப்பிப் பிழைத்த இந்த ஜனங்களுக்காக உமது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்யும். எரேமியா, எங்களில் நிறைய பேர் மீதியாக இருக்கவில்லை என்பதை நீர் பார்க்கமுடியும். ஒரு காலத்தில் நாங்கள் ஏராளமாக இருந்தோம். எரேமியா, நாங்கள் எங்கே போக வேண்டும், நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று உமது தேவனாகிய கர்த்தர் என்ன கூறுகிறார் என்று கர்த்தரிடம் ஜெபம்செய்துக்கேளும்” என்றனர். பிறகு, எரேமியா தீர்க்கதரிசி, “நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைப் புரிந்துக்கொள்கிறேன். நீங்கள் கேட்டுக்கொண்டபடி நான் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்கிறேன். கர்த்தர் சொல்கிற எல்லாவற்றையும் நான் உங்களுக்குச் சொல்வேன். நான் உங்களிடமிருந்து எதையும் மறைக்கமாட்டேன்” என்றான். பிறகு, அந்த ஜனங்கள் எரேமியாவிடம், “நாங்கள், உமது தேவனாகிய கர்த்தர் சொன்னபடி செய்யாவிட்டால், பிறகு கர்த்தரே எங்களுக்கு எதிரான உண்மையான நம்பிக்கையுள்ள சாட்சியாக இருப்பார் என்று நம்புவோம். உமது தேவனாகிய கர்த்தர் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்லவே உம்மை அனுப்பியுள்ளார் என அறிகிறோம். நாங்கள் அச்செய்தியை விரும்புகிறோமா அல்லது அச்செய்தியை விரும்பவில்லையா என்பது ஒரு பொருட்டன்று. நமது தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் அடிபணிவோம். நாங்கள் உம்மை எங்களுக்கான செய்தியை அறியவே அனுப்புகிறோம். அவர் என்ன சொல்கிறாரோ அதற்கு நாங்கள் அடிபணிவோம். பிறகு எங்களுக்கு நல்லவை நடக்கும். ஆம் நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணிவோம்” என்றனர். பத்து நாட்கள் முடிந்ததும், கர்த்தரிடமிருந்து செய்தி எரேமியாவிற்கு வந்தது. பிறகு எரேமியா, கரேயாவின் குமாரனான யோகனானையும் அவனுடனிருந்த படை அதிகாரிகளையும் சேர்ந்து அழைத்தான். எரேமியா, முக்கியத்துவம் குறைந்த ஆட்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஆட்கள்வரை அனைத்து ஜனங்களையும் அழைத்தான். பிறகு அவர்களிடம் எரேமியா, “இஸ்ரவேலர்களின் தேவனாகிய ஆண்டவர் கூறுவது இதுதான், நீங்கள் என்னை அவரிடம் அனுப்பினீர்கள். நான் தேவனோடு வழக்காடி நான் அவரிடத்தில் நீங்கள் கேட்க விரும்பியதை கேட்டேன். கர்த்தர் சொல்கிறது இதுதான். ‘ஜனங்களாகிய நீங்கள் யூதாவில் தங்கினால் நான் உங்களைப் பலமுள்ளவர்களாகச் செய்வேன். நான் உங்களை அழிக்கமாட்டேன். நான் உங்களை நடுவேன். நான் உங்களைத் தள்ளமாட்டேன். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால், நான் உங்களுக்கு ஏற்படுத்திய பயங்கரமான செயல்களுக்காக வருத்தப்படுகிறேன். இப்போது நீங்கள் பாபிலோன் ராஜாவுக்குப் பயப்படுகிறீர்கள். ஆனால் பாபிலோன் ராஜாவுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்’ இதுதான் கர்த்தருடைய வார்த்தை, ‘ஏனென்றால் நான் உங்களுடன் இருக்கிறேன். நான் உங்களைக் காப்பாற்றுவேன். நான் உங்களை விடுவிப்பேன். நான் உங்களை அவனுடைய கைகளிலிருந்து தப்புவிப்பேன். நான் உங்களிடம் தயவாய் இருப்பேன். பாபிலோனின் ராஜாவும் உங்களை இரக்கத்தோடு நடத்துவான். அவன் உங்களை திரும்பவும் உங்கள் நாட்டுக்குக் கொண்டு வருவான்.’

எரேமியா 42:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது எல்லா இராணுவச்சேர்வைக்காரரும், கரேயாவின் குமாரனாகிய யோகனானும், ஓசாயாவின் குமாரனாகிய யெசனியாவும், சிறியோர்முதல் பெரியோர்மட்டுமான சகல ஜனங்களும் சேர்ந்துவந்து, தீர்க்கதரிசியாகிய எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் நாங்கள் நடக்கவேண்டிய வழியையும், செய்யவேண்டிய காரியத்தையும் எங்களுக்குத் தெரியப்பண்ணும்படிக்கு, நீர் எங்கள் விண்ணப்பத்துக்கு இடங்கொடுத்து, மீதியாயிருக்கிற இந்தச் சகல ஜனங்களாகிய எங்களுக்காக உம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும். உம்முடைய கண்கள் எங்களைக்காண்கிறபடியே திரளான ஜனங்களில் கொஞ்சப்பேரே மீந்திருக்கிறோம் என்றார்கள். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி அவர்களை நோக்கி: நீங்கள் சொன்னதைக் கேட்டேன்; இதோ, உங்கள் வார்த்தையின்படியே உங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணுவேன்; கர்த்தர் உங்களுக்கு மறுஉத்தரவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் நான் உங்களுக்கு ஒன்றையும் மறைக்காமல் அறிவிப்பேன் என்றான். அப்பொழுது அவர்கள் எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மைக்கொண்டு எங்களுக்குச் சொல்லியனுப்பும் எல்லா வார்த்தைகளின்படியும் நாங்கள் செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுவே சத்தியமும் உண்மையுமான சாட்சியாயிருக்கக்கடவர். அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள். பத்துநாள் சென்றபின்பு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாயிற்று. அப்பொழுது அவன், கரேயாவின் குமாரனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரையும், சிறியோர்முதல் பெரியோர்மட்டும் உண்டான சகல ஜனங்களையும் அழைத்து, அவர்களை நோக்கி: உங்களுக்காக விண்ணப்பஞ்செய்யும்படிக்கு நீங்கள் என்னை அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் இந்த தேசத்திலே தரித்திருந்தால், நான் உங்களைக் கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன்; உங்களை நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன்; நான் உங்களுக்குச் செய்திருக்கிற தீங்குக்கு மனஸ்தாபப்பட்டேன். நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்குப் பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்குத் தப்புவிக்கும்படிக்கும் நான் உங்களுடனே இருந்து, அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன்.