எரேமியா 4:1-4

எரேமியா 4:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேலே, “நீ திரும்பிவர விரும்பினால் என்னிடம் திரும்பி வா” என்று யெகோவா அறிவிக்கிறார். “நீ என் பார்வையிலிருந்து உன் அருவருப்பான விக்கிரகங்களை அகற்றி, இனி ஒருபோதும் வழிவிலகாதிருந்து, உண்மையும், நீதியும், நேர்மையுமான வழியில் நடந்து ‘யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்று நீ ஆணையிடுவாயானால், எல்லா நாட்டினரும் அவரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். அவரில் அவர்கள் மகிழ்ச்சிகொள்வார்கள்” என்கிறார். யூதாவின் மனிதருக்கும், எருசலேமின் மனிதருக்கும் யெகோவா கூறுவது இதுவே: “உழப்படாத உங்கள் நிலத்தைப் பண்படுத்துங்கள். முட்களுக்குள்ளே விதைக்காதிருங்கள். யூதாவின் மனிதரே, எருசலேமின் மக்களே, யெகோவாவுக்கென்று உங்களை விருத்தசேதனம் பண்ணுங்கள், உங்கள் இருதயங்களை விருத்தசேதனம் பண்ணுங்கள். இல்லையெனில் நீங்கள் செய்திருக்கிற தீமையினால், என்னுடைய கோபம் வெளிப்பட்டு, அணைப்பாரில்லாத நெருப்பைப்போல் எரியும்.

எரேமியா 4:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேல், நீ திரும்புகிறதற்கு மனமிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று யெகோவா சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையிலிருந்து அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை. நீ உண்மையுடனும், நியாயத்தோடும், நீதியுடனும், யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; அந்நியமக்களும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள். யூதா மக்களுடனும், எருசலேம் மக்களுடனும் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முட்களுக்குள்ளே விதைக்காதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள். யூதா மனிதர்களே, எருசலேமின் குடிமக்களே, உங்கள் செயல்களுடைய பொல்லாப்பினால் என் கடுங்கோபம் நெருப்பைப்போல எழும்பி, அணைப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் யெகோவாவாக்கென்று உங்களை. முற்றிலுமாய் அர்ப்பணியுங்கள்.

எரேமியா 4:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)

“இஸ்ரவேலே, நீ திரும்பி வர வேண்டுமென்று விரும்பினால் என்னிடம் திரும்பி வா. உனது விக்கிரகங்களைத் தூர எறி. என்னை விட்டுத் தூரமாக அலையாதே. நீ அவற்றைச் செய்தால், பிறகு நீ எனது நாமத்தைப் பயன்படுத்தி, வாக்குகொடுக்க வல்லமை பெறுவாய், ‘கர்த்தர் வாழ்கிறதுபோல’ என்று நீ சொல்லும் வல்லமை பெறுவாய். அந்த வார்த்தைகளை உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், பயன்படுத்தும் வல்லமைபெறுவாய்: நீ இவற்றைச் செய்தால், பிறகு கர்த்தரால் தேசங்கள் ஆசீர்வதிக்கப்படும். அவர்கள் கர்த்தர் செய்திருக்கிறவற்றைப்பற்றி, மேன்மை பாரட்டுவார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். எருசலேம் மற்றும் யூதாவின் மனிதருக்கு, கர்த்தர் சொல்லுகிறது இதுதான்: “உங்கள் வயல்கள் உழப்படவில்லை, அவற்றை உழுங்கள், முட்களுக்கு இடையில் விதைகளை தூவாதீர்கள். கர்த்தருடைய ஜனங்களாயிருங்கள். உங்கள் இதயங்களை மாற்றுங்கள்! யூதா ஜனங்களே, எருசலேம் ஜனங்களே! நீங்கள் மாற்றாவிட்டால் பிறகு நான் மிகவும் கோபம் அடைவேன். எனது கோபம் நெருப்பைப் போன்று வேகமாகப் பரவும். எனது கோபம் உங்களை எரித்துப்போடும். எவராலும் அந்த நெருப்பை அணைக்கமுடியாது. இது ஏன் நிகழும் என்றால், நீங்கள் தீங்கான செயல்கள் செய்திருக்கிறீர்கள்.”

எரேமியா 4:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை. நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள். யூதா மனுஷரோடும், எருசலேமியரோடும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள். யூதா மனுஷரே, எருசலேமின் குடிகளே, உங்கள் கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல எழும்பி, அவிப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்.