எரேமியா 38:17-23
எரேமியா 38:17-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதற்கு எரேமியா சிதேக்கியாவிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘பாபிலோன் அரசனுடைய அதிகாரிகளிடம் நீ சரணடைந்தால், நீ உன் உயிரைக் காத்துக்கொள்வாய். இப்பட்டணமும் எரித்து அழிக்கப்படமாட்டாது. உன் குடும்பமும் உயிர்வாழும். ஆனால் நீ பாபிலோன் அரசனின் அதிகாரிகளிடம் சரணடையாவிட்டால், இப்பட்டணம் பாபிலோனியரின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும். அவர்கள் இப்பட்டணத்தைச் சுட்டெரிப்பார்கள். நீயும் அவர்களுடைய கையிலிருந்து தப்பமாட்டாய்’ என்றான்.” அதற்கு சிதேக்கியா அரசன் எரேமியாவிடம், “நான் பாபிலோனியரிடம் முன்பே போய்ச் சேர்ந்த யூதருக்குப் பயப்படுகிறேன். ஏனெனில் பாபிலோனியர் என்னை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்கள் என்னைத் துன்புறுத்தக்கூடும்” என்று சொன்னான். அதற்கு எரேமியாவோ, “அவர்கள் உன்னை ஒப்புக்கொடுக்கமாட்டார்கள். நான் உனக்குச் சொல்வதின்படி செய்து யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திரு. அப்பொழுது உனக்கு எல்லாம் நன்மையாயிருக்கும். நீயும் உயிருடன் தப்புவாய். ஆனால் நீ சரணடைவதற்கு மறுத்தால், யெகோவா எனக்கு வெளிப்படுத்தியுள்ளது இதுவே: யூதா அரசனின் அரண்மனையில் மீதியாய் விடப்பட்டிருக்கும் பெண்கள், பாபிலோன் அரசனின் அதிகாரிகளிடம் கொண்டுவரப்படுவார்கள். அப்பெண்கள் உன்னிடம்: “ ‘நீ நம்பியிருந்த உனது நண்பர்கள், உன்னை வழிதவறச்செய்து உன்னை மேற்கொண்டார்கள். உன்னுடைய பாதங்கள் சேற்றிற்குள்ளே புதைந்தன; உனது நண்பர்கள் உன்னைக் கைவிட்டுப் போய்விட்டார்கள்’ என்று சொல்வார்கள். “உனது எல்லா மனைவியரும், பிள்ளைகளும், பாபிலோனியரிடத்துக்குக் கொண்டுவரப்படுவார்கள். நீயுங்கூட அவர்களுடைய கையிலிருந்து தப்பாமல், பாபிலோன் அரசனால் கைதுசெய்யப்படுவாய். இப்பட்டணம் தீயினால் எரிக்கப்படும்” என்றான்.
எரேமியா 38:17-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடம் புறப்பட்டுப்போனால், உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப் பட்டணம் நெருப்பினால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள். நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப்பட்டுப்போகாவிட்டால், அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவர்கள் இதை நெருப்பினால் சுட்டெரிப்பார்கள்; நீர் அவர்களுக்குத் தப்பிப்போவதில்லை என்கிறதை இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறார் என்றான். அப்பொழுது சிதேக்கியா ராஜா எரேமியாவை நோக்கி: கல்தேயர் தங்களைச் சேர்த்துகொண்ட யூதரின் கையில் என்னைப் பரியாசம்செய்ய ஒப்புக்கொடுப்பார்களோ என்று நான் சந்தேகப்படுகிறேன் என்றான். அதற்கு எரேமியா: உம்மை ஒப்புக்கொடுக்கமாட்டார்கள்; நான் உம்மிடத்தில் சொல்லுகிற யெகோவாவுடைய வார்த்தையைக் கேளும், அப்பொழுது உமக்கு நன்மையாயிருக்கும், உம்முடைய ஆத்துமா பிழைக்கும். நான் புறப்படுகிறதில்லை என்று சொல்வீர்ரென்றால், யெகோவா எனக்குத் தெரியப்படுத்தின வார்த்தையாவது: இதோ, யூதா ராஜாவின் வீட்டில் மீதியான எல்லாப் பெண்களும் வெளியே பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்தில் கொண்டுபோகப்படுவார்கள்; அப்பொழுது, இதோ, அவர்கள் தானே உம்முடைய நண்பர்கள்; அவர்கள் உமக்குப் போதனைசெய்து, உம்மை மேற்கொண்டார்கள் என்றும், உம்முடைய கால்கள் சேற்றில் அமிழ்ந்தபின்பு அவர்கள் பின்வாங்கிப் போனார்கள் என்றும் அந்த பெண்களே சொல்லுவார்கள். உம்முடைய எல்லாப் பெண்களையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டு போவார்கள்; நீரும் அவர்கள் கைக்குத் தப்பிப்போகாமல் பாபிலோன் ராஜாவின் கையினால் பிடிக்கப்பட்டு, இந்த நகரம் நெருப்பால் சுட்டெரிக்கப்படக் காரணமாயிருப்பீர் என்றான்.
எரேமியா 38:17-23 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு எரேமியா சிதேக்கியா ராஜாவிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர், கூறுகிறார், ‘நீ பாபிலோன் ராஜாவின் அதிகாரிகளிடம் சரணடைந்தால் உனது வாழ்க்கை காப்பாற்றப்படும். எருசலேம் எரிக்கப்படாமல் இருக்கும். நீயும் உனது குடும்பமும் காக்கப்படுவீர்கள். ஆனால் நீ சரணடைய மறுத்தால், பிறகு பாபிலோனியப் படையிடம் எருசலேம் கொடுக்கப்படும். அவர்கள் எருசலேமை எரிப்பார்கள். நீ அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது’” என்றான். ஆனால் ராஜா சிதேக்கியா எரேமியாவிடம், “ஆனால் நான் பாபிலோனியப் படையுடன் ஏற்கனவே சேர்ந்துவிட்ட யூதாவின் ஆட்களைப்பற்றிப் பயப்படுகிறேன். வீரர்கள் என்னை அந்த யூதாவின் ஆட்களிடம் கொடுப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன். அவர்கள் என்னை மோசமாக நடத்தி என்னைத் தாக்குவார்கள்” என்றான். ஆனால் எரேமியா பதிலாக, “யூதாவின் ஆட்களிடம் அவ்வீரர்கள் உன்னைக் கொடுக்கமாட்டார்கள். சிதேக்கியா ராஜாவே, நான் என்ன சொல்கிறேனோ அதன்படி கர்த்தருக்கு கீழ்ப்படி. பிறகு எல்லாம் உனக்கு நன்மையாகும். உனது வாழ்வு காப்பாற்றப்படும். ஆனால் பாபிலோனிய படைக்குச் சரணடைய மறுத்தால், கர்த்தர் எனக்கு என்ன நடக்கும் என்பதைக் காட்டியிருக்கிறார். இதுதான் கர்த்தர் எனக்குச் சொன்னது. யூதா ராஜாவின் வீட்டில் விடப்பட்டுள்ள ஸ்திரீகள் எல்லாம் வெளியே கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் பாபிலோன் ராஜாவின் முக்கிய அதிகாரிகளிடம் கொண்டுவரப்படுவார்கள். உங்கள் ஸ்திரீகள் ஒரு பாடலால் பரிகாசம் செய்வார்கள். இதுதான் அப்பெண்கள் சொல்வது: “உங்கள் நல்ல நண்பர்கள் உனக்கு தந்திரம் செய்தார்கள். தீயக் காரியங்களை செய்யும்படி உன்னை மாற்றுகின்றனர். உங்கள் கால்கள் சேற்றில் சிக்கிக்கொண்டன. பின்னர் உன்னை தன்னந்தனியே அவர்கள் விட்டுவிட்டனர்.” “உன் மனைவிகளும் குழந்தைகளும் வெளியே கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் பாபிலோனியப் படையிடம் கொடுக்கப்படுவார்கள். நீங்கள் பாபிலோன் படையிடமிருந்து தப்பிக்க முடியாது. நீ பாபிலோன் ராஜாவால் கைப்பற்றப்படுவாய். எருசலேம் எரிக்கப்படும்” என்றான்.
எரேமியா 38:17-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டைக்குப் புறப்பட்டுப்போவீரானால், உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப் பட்டணம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள். நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப்பட்டுப்போகாவிட்டால், அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவர்கள் இதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; நீர் அவர்களுக்குத் தப்பிப்போவதில்லை என்கிறதை இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது சிதேக்கியா ராஜா எரேமியாவை நோக்கி: கல்தேயர் தங்களைச் சேர்ந்துபோன யூதரின் கையிலே என்னைப் பரியாசம்பண்ண ஒப்புக்கொடுப்பார்களோ என்று நான் ஐயப்படுகிறேன் என்றான். அதற்கு எரேமியா: உம்மை ஒப்புக்கொடார்கள்; நான் உம்மிடத்தில் சொல்லுகிற கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடும், அப்பொழுது உமக்கு நன்மையாயிருக்கும், உம்முடைய ஆத்துமா பிழைக்கும். நான் புறப்படுகிறதில்லை என்பீரேயாகில், கர்த்தர் எனக்குத் தெரியப்படுத்தின வார்த்தையாவது: இதோ, யூதா ராஜாவின் வீட்டிலே மீதியான எல்லா ஸ்திரீகளும் வெளியே பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டையில் கொண்டுபோகப்படுவார்கள்; அப்பொழுது, இதோ, அவர்கள் தானே உம்முடைய இஷ்டர்கள்; அவர்கள் உமக்குப் போதனைசெய்து, உம்மை மேற்கொண்டார்கள் என்றும், உம்முடைய கால்கள் உளையிலே அமிழ்ந்தினபின்பு அவர்கள் பின்வாங்கிப்போனார்கள் என்றும் அந்த ஸ்திரீகளே சொல்லுவார்கள். உம்முடைய எல்லா ஸ்திரீகளையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டு போவார்கள்; நீரும் அவர்கள் கைக்குத் தப்பிப்போகாமல் பாபிலோன் ராஜாவின் கையினால் பிடிக்கப்பட்டு, இந்த நகரம் அக்கினியால் சுட்டெரிக்கப்படக் காரணமாயிருப்பீர் என்றான்.