எரேமியா 31:3-9
எரேமியா 31:3-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பூர்வகாலத்தில் யெகோவா எங்களுக்குத் தோன்றி சொன்னதாவது: “நான் உங்களை நித்திய அன்பினால் நேசித்திருக்கிறேன்; ஆதலால், கைவிடாத தயவினால் நான் உங்களை என்னிடமாய் இழுத்திருக்கிறேன். இஸ்ரயேல் கன்னிகையே! நான் உன்னைத் திரும்பவும் கட்டி எழுப்புவேன். நீ திரும்பவும் கட்டப்படுவாய்; உன் மேளவாத்தியங்களை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுள்ளவர்களுடன் நடனத்திற்குப் போவாய். நீ திரும்பவும் சமாரியாவின் மலைகளில் திராட்சைத் தோட்டங்களை நாட்டுவாய். விவசாயிகள் அவைகளை நாட்டி அவைகளின் பலனை அனுபவிப்பார்கள். ஒரு நாள் வரும்; அந்நாளில், ‘சீயோனில் நம்முடைய இறைவனாகிய யெகோவாவிடத்தில் ஏறிப்போவோம் வாருங்கள்’ என்று எப்பிராயீம் மலைகளிலுள்ள காவலாளிகள் சத்தமிட்டுக் கூறுவார்கள்” என்று சொல்லியிருந்தார். இப்பொழுது யெகோவா கூறுவது இதுவே: “யாக்கோபுக்காக மகிழ்ச்சியுடன் பாடுங்கள். நாடுகளின் முதன்மையானவர்களுக்காகச் சத்தமிடுங்கள்; உங்கள் துதிகளைக் கேட்கப்பண்ணுங்கள். ‘யெகோவாவே இஸ்ரயேலில் மீதியாயிருக்கிற உமது மக்களைக் காப்பாற்றும்’ என்று சொல்லுங்கள். இதோ நான் அவர்களை வடநாட்டிலிருந்து கொண்டுவருவேன்; பூமியின் கடைசி எல்லையிலிருந்து அவர்களைக் கூட்டிச்சேர்ப்பேன். குருடரும், முடவரும், கர்ப்பவதிகளும், பிரசவிக்கும் பெண்களும் அவர்களிடையே இருப்பார்கள். இவ்வாறாக ஒரு மக்கள் கூட்டம் திரும்பிவரும். நான் அவர்களைத் திரும்பக் கொண்டுவருகையில் அவர்கள் அழுகையுடனும், மன்றாட்டுடனும் வருவார்கள். நான் அவர்களை இடறாத சமமான பாதையில், நீரோடைகள் அருகே வழிநடத்திக் கொண்டுசெல்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தகப்பன்; எப்பிராயீம் என் முதற்பேறான மகன்.
எரேமியா 31:3-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பூர்வகாலமுதல் யெகோவா எனக்குக் காட்சியளித்தார் என்பாய்; ஆம் ஆதி அன்பினால் உன்னை நேசித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்கிறேன். இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய். மறுபடியும் சமாரியாவின் மலைகளில் திராட்சைத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அநுபவிப்பார்கள். எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள காவற்காரர் சொல்லும் காலம் வரும். யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: யாக்கோபுக்காக மகிழ்ச்சியாய் கெம்பீரித்து, தேசங்களுடைய தலைவருக்காக ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கச்செய்து, துதித்து: யெகோவாவே, இஸ்ரவேலில் மீதியான உமது மக்களைக் காப்பாற்றும் என்று சொல்லுங்கள். இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரவழைத்து, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து அழைத்துவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத்தாய்ச்சிகளும் அவர்களில் இருப்பார்கள்; திரளான கூட்டமாக இவ்விடத்திற்குத் திரும்புவார்கள். அழுகையுடனும் விண்ணப்பங்களுடனும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதியருகில் தவறாத செம்மையான வழியில் நடக்கச்செய்வேன்; இஸ்ரவேலுக்கு நான் தகப்பனாயிருக்கிறேன், எப்பிராயீம் என் மூத்தமகனாயிருக்கிறான்.
எரேமியா 31:3-9 பரிசுத்த பைபிள் (TAERV)
வெகு தொலைவில் இருந்து கர்த்தர் அவரது ஜனங்களுக்கு தோன்றுவார். கர்த்தர் கூறுகிறார்: “ஜனங்களே, நான் உங்களை நேசிக்கிறேன். எனது அன்பு என்றென்றும் நீடித்திருக்கும். ஆகையால் தான் தொடர்ந்து உங்களுக்கு அன்பு காட்டினேன். இஸ்ரவேலே, எனது மணப்பெண்ணே, நான் உன்னை மீண்டும் கட்டுவேன். நீ மீண்டும் ஒரு நாடாவாய். நீ உனது மேள வாத்தியங்களை மீண்டும் எடுத்துக்கொள்வாய். நீ மகிழ்ச்சியூட்டும் மற்ற ஜனங்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடைவாய். இஸ்ரவேலின் விவசாயிகளாகிய நீங்கள் மீண்டும் திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்வீர்கள். சமாரியா நகரைச் சுற்றிலும் மலைப் பகுதிகளில் திராட்சைகளைப் பயிரிடுவாய். அவ்விவசாயிகள் அத்திராட்சைத் தோட்டங்களிலிருந்து பழங்களைத் தின்று மகிழ்வார்கள். காவல்காரன் இச்செய்தியைச் சத்தமிடும் ஒரு காலம் வரும். ‘வாருங்கள், நமது தேவனாகிய கர்த்தரை தொழுதுகொள்ள சீயோனுக்குப் போகலாம்!’ எப்பிராயீம் நாட்டு மலையில் உள்ள காவல்காரன் கூட இச்செய்தியைச் சத்தமிட்டுச் சொல்வான்.” கர்த்தர் கூறுகிறார்: “மகிழ்ச்சியாக இருங்கள். யாக்கோபுக்காகப் பாடுங்கள்! இஸ்ரவேலுக்காகச் சத்தமிடுங்கள். அது ஜாதிகளிலேயே மகா பெரிய ஜனம் ஆகும்! உங்கள் துதிகளைப் பாடி சத்தமிடுங்கள், ‘கர்த்தர் அவரது ஜனங்களைக் காப்பாற்றினார்! அவர் இஸ்ரவேல் நாட்டில் உயிரோடு விடப்பட்டுள்ள ஜனங்களைக் காப்பாற்றியிருக்கிறார்.’ நினைவுகொள்ளுங்கள். வடக்கில் உள்ள அந்த நாட்டிலிருந்து இஸ்ரவேலை நான் கொண்டு வருவேன். பூமியில் வெகு தொலை தூர இடங்களில் உள்ள இஸ்ரவேல் ஜனங்களை எல்லாம் சேர்ப்பேன். ஜனங்களில் சிலர் குருடாகவும் நொண்டியாகவும் இருப்பார்கள். பெண்களில் சிலர் கர்ப்பமாக இருப்பார்கள், குழந்தை பெறுவதற்குத் தயாராக இருப்பார்கள். ஆனால் அதிகமதிகமான ஜனங்கள் திரும்ப வருவார்கள். அந்த ஜனங்கள் அழுதுக்கொண்டே திரும்பி வருவார்கள். ஆனால் நான் அவர்களை வழிநடத்தி ஆறுதல் செய்வேன். நான் அவர்களை வழிநடத்திச் சென்று நீரோடைக்கு அழைத்துச் செல்வேன். அவர்களை நான் எளிதான பாதையில் நடத்திச் செல்வேன். எனவே, அவர்கள் இடறமாட்டார்கள். நான் அந்த வழியிலே அவர்களை வழிநடத்திச் செல்வேன். ஏனென்றால், நான் இஸ்ரவேலின் தந்தை. எப்பிராயீம் எனது முதலில் பிறந்த குமாரன்.
எரேமியா 31:3-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதிசிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன். இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய். மறுபடியும் சமாரியாவின் மலைகளிலே திராட்சத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அநுபவிப்பார்கள். எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள ஜாமக்காரர் கூறுங்காலம் வரும். கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: யாக்கோபினிமித்தம் மகிழ்ச்சியாய் கெம்பீரித்து, ஜாதிகளுடைய தலைவரினிமித்தம் ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கப்பண்ணி, துதித்து: கர்த்தாவே, இஸ்ரவேலில் மீதியான உமது ஜனத்தை இரட்சியும் என்று சொல்லுங்கள். இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத்தாய்ச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள்; மகா கூட்டமாய் இவ்விடத்துக்குத் திரும்புவார்கள். அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.