எரேமியா 31:1-6

எரேமியா 31:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அக்காலத்திலே நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். பட்டயத்திற்குத் தப்பி, மீந்த ஜனம் வனாந்தரத்தில் இரக்கம்பெற்றது; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதிசிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன். இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய். மறுபடியும் சமாரியாவின் மலைகளிலே திராட்சத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அநுபவிப்பார்கள். எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள ஜாமக்காரர் கூறுங்காலம் வரும்.

எரேமியா 31:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அக்காலத்தில், “இஸ்ரயேலின் எல்லா வம்சங்களுக்கும் நான் இறைவனாயிருப்பேன், அவர்களும் என் மக்களாய் இருப்பார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். யெகோவா கூறுவது இதுவே: “வாளுக்குத் தப்பிய மக்கள் பாலைவனத்தில் ஆதரவு பெறுவார்கள். இஸ்ரயேலுக்கு ஆறுதல் கொடுக்க நான் வருவேன்” என்கிறார். பூர்வகாலத்தில் யெகோவா எங்களுக்குத் தோன்றி சொன்னதாவது: “நான் உங்களை நித்திய அன்பினால் நேசித்திருக்கிறேன்; ஆதலால், கைவிடாத தயவினால் நான் உங்களை என்னிடமாய் இழுத்திருக்கிறேன். இஸ்ரயேல் கன்னிகையே! நான் உன்னைத் திரும்பவும் கட்டி எழுப்புவேன். நீ திரும்பவும் கட்டப்படுவாய்; உன் மேளவாத்தியங்களை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுள்ளவர்களுடன் நடனத்திற்குப் போவாய். நீ திரும்பவும் சமாரியாவின் மலைகளில் திராட்சைத் தோட்டங்களை நாட்டுவாய். விவசாயிகள் அவைகளை நாட்டி அவைகளின் பலனை அனுபவிப்பார்கள். ஒரு நாள் வரும்; அந்நாளில், ‘சீயோனில் நம்முடைய இறைவனாகிய யெகோவாவிடத்தில் ஏறிப்போவோம் வாருங்கள்’ என்று எப்பிராயீம் மலைகளிலுள்ள காவலாளிகள் சத்தமிட்டுக் கூறுவார்கள்” என்று சொல்லியிருந்தார்.

எரேமியா 31:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அக்காலத்தில் நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் மக்களாயிருப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். பட்டயத்திற்குத் தப்பியிருந்த, மக்கள் வனாந்திரத்தில் இரக்கம்பெற்றார்கள்; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார். பூர்வகாலமுதல் யெகோவா எனக்குக் காட்சியளித்தார் என்பாய்; ஆம் ஆதி அன்பினால் உன்னை நேசித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்கிறேன். இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய். மறுபடியும் சமாரியாவின் மலைகளில் திராட்சைத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அநுபவிப்பார்கள். எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள காவற்காரர் சொல்லும் காலம் வரும்.

எரேமியா 31:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர், “அந்த நேரத்தில் நான் இஸ்ரவேலின் அனைத்து கோத்திரங்களுக்கும் தேவனாக இருப்பேன். அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்” என்றார். கர்த்தர் கூறுகிறார்: “ஜனங்களில் சிலர் பகைவரின் வாளால் கொல்லப்படவில்லை. அந்த ஜனங்கள் வனாந்தரத்திற்குத் தப்பி ஓடி, ஆறுதலடைவார்கள், இஸ்ரவேலர் இளைப்பாறுதலைத் தேடி அங்கு போவார்கள்.” வெகு தொலைவில் இருந்து கர்த்தர் அவரது ஜனங்களுக்கு தோன்றுவார். கர்த்தர் கூறுகிறார்: “ஜனங்களே, நான் உங்களை நேசிக்கிறேன். எனது அன்பு என்றென்றும் நீடித்திருக்கும். ஆகையால் தான் தொடர்ந்து உங்களுக்கு அன்பு காட்டினேன். இஸ்ரவேலே, எனது மணப்பெண்ணே, நான் உன்னை மீண்டும் கட்டுவேன். நீ மீண்டும் ஒரு நாடாவாய். நீ உனது மேள வாத்தியங்களை மீண்டும் எடுத்துக்கொள்வாய். நீ மகிழ்ச்சியூட்டும் மற்ற ஜனங்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடைவாய். இஸ்ரவேலின் விவசாயிகளாகிய நீங்கள் மீண்டும் திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்வீர்கள். சமாரியா நகரைச் சுற்றிலும் மலைப் பகுதிகளில் திராட்சைகளைப் பயிரிடுவாய். அவ்விவசாயிகள் அத்திராட்சைத் தோட்டங்களிலிருந்து பழங்களைத் தின்று மகிழ்வார்கள். காவல்காரன் இச்செய்தியைச் சத்தமிடும் ஒரு காலம் வரும். ‘வாருங்கள், நமது தேவனாகிய கர்த்தரை தொழுதுகொள்ள சீயோனுக்குப் போகலாம்!’ எப்பிராயீம் நாட்டு மலையில் உள்ள காவல்காரன் கூட இச்செய்தியைச் சத்தமிட்டுச் சொல்வான்.”