எரேமியா 3:14-18
எரேமியா 3:14-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“பின்மாற்றமடைந்த மக்களே! திரும்பிவாருங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஏனெனில் நானே உங்கள் கணவன். நான் உங்களை ஒரு பட்டணத்திலிருந்து ஒருவனாகவும், ஒரு வம்சத்திலிருந்து இருவராகவும் தெரிந்தெடுத்து, உங்களைச் சீயோனுக்குக் கொண்டுவருவேன். என் இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களை உங்களுக்குத் தருவேன். அவர்கள் அறிவோடும், விவேகத்தோடும் உங்களை வழிநடத்துவார்கள். அந்நாட்களில் நாட்டில் உங்கள் எண்ணிக்கை மிகுதியாய் பெருகியிருக்கும்” என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது மனிதர்கள், யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியைப்பற்றி ஒருபோதும் பேசமாட்டார்கள். அதைப்பற்றி ஒருபோதும் அவர்கள் எண்ணுவதோ நினைப்பதோ இல்லை; அதைக் குறித்த மனவருத்தமும் அவர்களுக்கு ஏற்படாது. அதுபோல வேறொன்று செய்யப்படுவதும் இல்லை. அக்காலத்தில் எல்லா மக்களும் எருசலேமை யெகோவாவினுடைய சிங்காசனம் என்று கூறுவார்கள். யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துவதற்காக எருசலேமில் ஒன்று கூடுவார்கள். தொடர்ந்து அவர்கள் தங்களுடைய தீமையான இருதயங்களின் பிடிவாதத்துடன் நடக்கமாட்டார்கள். அந்நாட்களில் யூதா வம்சத்தார், இஸ்ரயேல் வம்சத்தாருடன் ஒன்றுசேருவார்கள். அவர்கள் வடதிசையிலுள்ள நாட்டிலிருந்து நான் உங்கள் முற்பிதாக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்த நாட்டுக்கு வருவார்கள்.
எரேமியா 3:14-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டு பேருமாகத் தெரிந்து, உங்களை சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து, உங்களுக்கு என் இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியுடனும் மேய்ப்பார்கள். நீங்கள் தேசத்தில் பெருகிப் பலுகுகிற அந்நாட்களில், அவர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி யென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனி சரிசெய்யப்படுவதும் இல்லை என்று யெகோவா சொல்லுகிறார். அக்காலத்தில் எருசலேமை யெகோவாவுடைய சிங்காசனம் என்பார்கள்; எல்லா தேசத்தாரும் எருசலேமில் விளங்கிய யெகோவாவுடைய பெயருக்காக அதனுடன் சேர்வார்கள்; அவர்கள் இனித் தங்கள் பொல்லாத இருதயத்தின் விருப்பத்தின்படி நடக்கமாட்டார்கள். அந்நாட்களில் யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாருடன் சேர்ந்து, அவர்கள் ஏகமாக பாபிலோன் தேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் முற்பிதாக்களுக்குச் சொந்தமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்.
எரேமியா 3:14-18 பரிசுத்த பைபிள் (TAERV)
“ஜனங்களாகிய நீங்கள் விசுவாசமற்றவர்கள். ஆனால் என்னிடம் திரும்பி வாருங்கள்!” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் உனது ஆண்டவர். நான் ஒவ்வொரு நகரத்திலிருந்து ஒருவனையும், ஒவ்வொரு குடும்பத்திலிருந்து இரண்டுபேரையும் எடுத்து சீயோனுக்குக் கொண்டுவருவேன். பிறகு நான் உங்களுக்குப் புதிய ராஜாக்களைத் தருவேன். அந்த ராஜாக்கள் எனக்கு விசுவாசமாக இருப்பார்கள். உங்களை அவர்கள் அறிவோடும் கூர்ந்த உணர்வோடும் வழிநடத்திச் செல்வார்கள். அந்த நாட்களில், இந்த நாட்டில் நீங்களே மிகுதியாக இருப்பீர்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்த நேரத்தில் ஜனங்கள், “நான் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி எங்களோடு இருந்ததை நினைக்கிறேன், என்று சொல்லமாட்டார்கள். அவர்கள் ஒருபோதும் இன்னொரு முறை பரிசுத்த பெட்டியை நினைவுகூரமாட்டார்கள். அவர்கள் எப்பொழுதும் பரிசுத்த பெட்டியைச் செப்பனிடுவதுமில்லை. அந்நேரத்தில், எருசலேம் நகரம் ‘கர்த்தருடைய சிங்காசனம்’ என்று அழைக்கப்படும். எல்லா நாடுகளும் எருசலேம் நகரத்தில் சேர்ந்து கர்த்தருடைய நாமத்திற்கு மகிமைதரக் கூடுவார்கள். அவர்கள் இனிமேல் தங்களது பொல்லாங்கான கடின இதயம் சொல்வதுபோன்று நடக்கமாட்டார்கள். அந்த நாட்களில், யூதாவின் குடும்பம், இஸ்ரவேல் குடும்பத்தோடு சேரும். அவர்கள் வடக்கு நாட்டிலிருந்து வந்து கூடுவார்கள். நான் அவர்களது முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிற்கு அவர்கள் வருவார்கள்.
எரேமியா 3:14-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டு பேருமாகத் தெரிந்து, உங்களைச் சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து, உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள். நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். அக்காலத்திலே எருசலேமைக் கர்த்தருடைய சிங்காசனம் என்பார்கள்; சகல ஜாதியாரும் எருசலேமில் விளங்கிய கர்த்தருடைய நாமத்தினிமித்தம் அதினிடமாகச் சேர்வார்கள்; அவர்கள் இனித் தங்கள் பொல்லாத இருதயத்தின் இச்சையின்படி நடவார்கள். அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்.