எரேமியா 29:10-14
எரேமியா 29:10-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா சொல்வதாவது: “பாபிலோனுக்கு எழுபது வருடங்கள் நிறைவேறிய பின்பு, நான் உங்களிடம் வந்து மீண்டும் உங்களை இந்த இடத்திற்குக் கொண்டுவருவேன் எனக்கூறிய, எனது நல்ல வார்த்தையை நிறைவேற்றுவேன். உங்களுக்காக நான் வைத்திருக்கும் என் திட்டங்களை நானே அறிவேன்.” அவைகள், “உங்களுக்குத் தீமை விளைவிக்கும் திட்டங்களல்ல, அவை உங்களுக்கு ஒரு செழிப்பான வாழ்வையும், நம்பிக்கையையும், நல்ல எதிர்காலத்தையும் கொடுக்கும் திட்டங்களே என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது நீங்கள் என்னை நோக்கிக் கூப்பிட்டு, என்னிடம் வந்து மன்றாடுவீர்கள். நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது, நீங்கள் என்னைத் தேடிக் கண்டடைவீர்கள். நீங்கள் என்னைக் கண்டுகொள்ளும்படி நான் செய்வேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் உங்களைச் சிறையிருப்பிலிருந்து மீண்டும் கொண்டுவருவேன். நான் உங்களை நாடுகடத்திய எல்லா நாடுகளிலிருந்தும், எல்லா இடங்களிலிருந்தும் உங்களை ஒன்றுசேர்ப்பேன்; எங்கிருந்து நான் உங்களை நாடுகடத்தி அனுப்பினேனோ அந்த இடத்திற்கு உங்களைத் திரும்பவும் கொண்டுவருவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 29:10-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பாபிலோனில் எழுபது வருடங்கள் முடிந்தபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்திற்குத் திரும்பிவரச்செய்ய உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுப்பதற்காக நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்திற்கு உகந்த நினைவுகளே. அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்செய்வீர்கள்; நான் உங்கள் விண்ணப்பத்தை கேட்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடுவீர்கள் என்றால், என்னைத் தேடும்போது கண்டுபிடிப்பீர்கள். நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி, நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த இடத்துக்கே உங்களைத் திரும்பிவரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 29:10-14 பரிசுத்த பைபிள் (TAERV)
இதுதான் கர்த்தர் சொல்லுகிறது: “பாபிலோன் 70 ஆண்டுகளுக்கு வல்லமையுடையதாக இருக்கும். அக்காலத்திற்குப் பிறகு, பாபிலோனில் வாழ்கிற உங்களிடம் வருவேன். என்னுடைய நல்ல வாக்குறுதியை நான் காப்பாற்றுவேன். உங்களை எருசலேமிற்கு மீண்டும் கொண்டுவருவேன். நான் இதனைக் கூறுகிறேன் ஏனென்றால், உங்களுக்காக நான் வைத்துள்ள திட்டங்களை நானறிவேன்” இச்செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் உங்களுக்காக நல்ல திட்டங்களை வைத்திருக்கிறேன். நான் உங்களை துன்புறுத்தும் வகையில் திட்டமிடமாட்டேன். உங்களுக்கு நம்பிக்கையைத் தரவும் நல்ல எதிர்காலம் அமையவும் நான் திட்டமிடுகிறேன். பிறகு, ஜனங்களாகிய நீங்கள் எனது நாமத்தை அழைப்பீர்கள். நீங்கள் என்னிடம் வருவீர்கள்: ஜெபம் செய்வீர்கள், நான் உங்களை கவனிப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நீங்கள் முழு மனதோடு என்னைத் தேடினால் என்னைக் கண்டுப்பிடிக்கலாம். நீங்கள் என்னைக் கண்டுப்பிடிக்க அனுமதிப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “உங்கள் சிறையிலிருந்து திரும்பவும் நான் உங்களைக் கொண்டுவருவேன். இந்த இடத்திலிருந்து போகும்படி நான் உங்களை கட்டாயப்படுத்தினேன். ஆனால் உங்களை எங்கெங்கு அனுப்பினேனோ அங்கங்கிருந்தெல்லாம் அழைத்துச் சேர்ப்பேன். உங்களைக் கைதிகளாய் கொண்டுப்போகச் செய்த இந்த இடத்திற்கே மீண்டும் உங்களைக் கொண்டுவருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 29:10-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி, நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.