எரேமியா 23:16-22
எரேமியா 23:16-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “இறைவாக்கு உரைப்போர் சொல்லும் இறைவாக்குகளைக் கேட்க வேண்டாம். அவர்கள் பொய்யான எதிர்பார்ப்பினால் உங்கள் மனதை நிரப்புகிறார்கள். யெகோவாவின் வாயிலிருந்து அல்ல, தங்கள் மனதிலுள்ள சுயதரிசனத்தையே பேசுகிறார்கள். என்னை அவமதிப்போரிடம், ‘உங்களுக்குச் சமாதானம் இருக்கும் என்று யெகோவா சொல்கிறார்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். தங்கள் இருதயங்களின் பிடிவாதத்தில் நடப்பவர்கள் எல்லோரையும் பார்த்து, ‘உங்களுக்கு ஒரு தீங்கும் வராது’ என்கிறார்கள். யெகோவாவின் வார்த்தையைக் காணும்படியும், கேட்கும்படியும் யெகோவாவின் ஆலோசனைச் சபையில் அவர்களில் எவன் நின்றான்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்? பாருங்கள், யெகோவாவின் பெருங்காற்றாகிய கொடிய புயல் வெளிப்படும். அது கொடியவர்களின் தலையின்மேல் சுழல் காற்றாய் மோதும். யெகோவா தமது இருதயத்திலுள்ள நோக்கங்களை முழுவதுமாக நிறைவேற்றும்வரை அவரது கோபம் தணிவதில்லை. வரும் நாட்களில் இதைத் தெளிவாக விளங்கிக்கொள்வீர்கள். இந்த இறைவாக்கு உரைப்போரை நான் அனுப்பவில்லை. ஆயினும் அவர்கள் தங்களுடைய செய்திகளுடன் ஓடிவந்திருக்கிறார்கள். நான் அவர்களுடன் பேசவில்லை. அவர்களோ இறைவாக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னுடைய ஆலோசனைச் சபையில் இருந்திருந்தால், என் மக்களுக்கு என்னுடைய வார்த்தைகளையே அறிவித்திருப்பார்கள். என்னுடைய மக்களை அவர்களுடைய தீயவழிகளிலிருந்தும், செயல்களிலிருந்தும் திருப்பியிருப்பார்கள்.
எரேமியா 23:16-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமையடையச் செய்கிறார்கள்; யெகோவாவுடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். அவர்கள் என்னை அசட்டை செய்கிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று யெகோவா சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்; தங்கள் இருதயத்தின் கடினத்தில் நடக்கிற அனைவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள். யெகோவாவுடைய ஆலோசனையில் நின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்? இதோ, யெகோவாவுடைய பெருங்காற்றாகிய கொடிய புயல் புறப்பட்டது; அது துன்மார்க்கருடைய தலையின்மேல் கடுமையாக மோதும். யெகோவா தம்முடைய இருதயத்தின் நினைவுகளை செய்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசி நாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள். அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களுடன் நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அவர்கள் என் ஆலோசனையில் நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை மக்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்.
எரேமியா 23:16-22 பரிசுத்த பைபிள் (TAERV)
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “உங்களில் அத்தீர்க்கதரிசிகள் சொல்பவற்றில் கவனம் செலுத்தாதீர்கள். அவர்கள் உங்களை முட்டாளாக்க முயல்கிறார்கள். அத்தீர்க்கதரிசிகள் தரிசனங்களைப்பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் என்னிடமிருந்து அத்தரிசனங்களைப் பெறவில்லை. அவர்களின் தரிசனங்கள் அவர்களது சொந்த மனதிலிருந்தே வருகின்றன. கர்த்தரிடமிருந்து வந்த உண்மையான செய்தியைச் சிலர் வெறுக்கிறார்கள். எனவே, அத்தீர்க்கதரிசிகள் ஜனங்களுக்கு வேறுபட்டச் செய்தியைக் கூறுகிறார்கள். அவர்கள், ‘உங்களுக்கு சமாதானம் இருக்கும்’ என்று கூறுகிறார்கள். சில ஜனங்கள் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் செய்யவிரும்புவதை மட்டுமே செய்கிறார்கள். எனவே அத்தீர்க்கதரிசிகள், ‘உங்களுக்கு எந்தத் தீமையும் ஏற்படாது!’ என்று கூறுகிறார்கள். ஆனால் அத்தீர்க்கதரிசிகளில் எவரும் பரலோகச் சபையில் நின்றிருக்கமாட்டார்கள். அவர்களில் எவரும் கர்த்தருடைய செய்தியைப் பார்த்திருக்கவோ கேட்டிருக்கவோமாட்டார்கள். அவர்கள் எவரும் கர்த்தருடைய செய்தியை கூர்ந்து கவனமாகக் கேட்டிருக்கமாட்டார்கள். இப்பொழுது கர்த்தருடைய தண்டனை புயலைப் போன்று வரும். கர்த்தருடைய கோபம் கொடிய புயலைப்போன்றிருக்கும். கெட்ட மனிதர்களின் தலைகளை மோதித் தள்ளவரும். கர்த்தருடைய கோபம், அவர் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாரோ அவற்றைச் செய்து முடிக்கும்வரை நிற்காது. அந்த நாட்களின் முடிவில் நீங்கள் தெளிவாக அறிந்துக்கொள்வீர்கள். அத்தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை. ஆனால், அவர்கள் செய்தியைச் சொல்ல ஓடினார்கள். நான் அவர்களோடு பேசவில்லை. ஆனால் அவர்கள் என் நாமத்தில் பிரசங்கம் செய்தனர். அவர்கள் எனது பரலோகச்சபையில் நின்றிருந்தால், பிறகு யூதாவின் ஜனங்களுக்கு என் செய்தியைச் சொல்லியிருப்பார்கள். அவர்கள் தீயசெயல் செய்யாமல் ஜனங்களைத் தடுத்திருப்பார்கள். அவர்கள் பாவம் செய்யாதபடி ஜனங்களைத் தடுத்திருப்பார்கள்.”
எரேமியா 23:16-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்; தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள். கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்? இதோ, கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடிய புசல் புறப்பட்டது; அது துன்மார்க்கருடைய தலையின்மேல் உக்கிரமாய் மோதும். கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசி நாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள். அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். அவர்கள் என் ஆலோசனையிலே நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்.