எரேமியா 23:1-6

எரேமியா 23:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைச் துரத்திவிட்டீர்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் என் ஆடுகளில் மீதியாயிருப்பவைகளைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து சேர்த்து, அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பலுகிப்பெருகும். அவைகளை மேய்க்கத்தக்கவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார். இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரீகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.

எரேமியா 23:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“என்னுடைய மேய்ச்சலின் செம்மறியாடுகளை அழித்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு” என்று யெகோவா அறிவிக்கிறார். இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா என் மக்களை மேய்க்கிற மேய்ப்பர்களுக்குச் சொல்வது இதுவே: நீங்கள் என்னுடைய மந்தையைக் கவனிக்காமல் அவர்களைச் சிதறப்பண்ணி துரத்திவிட்டீர்கள். நீங்கள் செய்த தீமைக்காக இப்பொழுது நான் உங்கள்மேல் தண்டனையைக் கொண்டுவருவேன் என்று யெகோவா அறிவிக்கிறார். என் மந்தையில் மீதியானவர்களை நான் துரத்திவிட்ட நாடுகளிலிருந்து நானே அவர்களைக் கூட்டிச்சேர்த்து, அவர்களைத் திரும்பவும் அவர்களுடைய மேய்ச்சலிடத்திற்குக் கொண்டுவருவேன். அங்கே அவர்கள் செழித்து, எண்ணிக்கையில் அதிகரிப்பார்கள். அவர்களைப் பராமரிக்கும் மேய்ப்பர்களை அவர்களுக்காக எழுப்புவேன். அவர்கள் இனி பயப்படவோ, பயமுறுத்தப்படவோ, ஒருவராவது தொலைந்துபோகவோ மாட்டார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். நாட்கள் வருகின்றன என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது தாவீதின் வம்சத்திலிருந்து ஒரு நீதியின் கிளையை எழுப்புவேன். அவர் ஞானமாய் ஆளுகை செய்யும் ஒரு அரசன். அவர் நாட்டில் நீதியையும், நியாயத்தையும் செய்வார். அவருடைய நாட்களில் யூதா காப்பாற்றப்படும். இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். யெகோவாவே நமது நேர்மை என்ற பெயரால் அவர் அழைக்கப்படுவார்.

எரேமியா 23:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ, என்று யெகோவா சொல்லுகிறார். இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா தமது மக்களை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரிக்காமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைச் துரத்திவிட்டீர்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். நான் என் ஆடுகளில் மீதியாக இருப்பவைகளைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து சேர்த்து, அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பலுகிப்பெருகும். அவைகளை மேய்க்கத் தகுதி உள்ளவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லையென்று யெகோவா சொல்லுகிறார். இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது தாவீதிற்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பச்செய்வேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ஆட்சிசெய்து, பூமியில் நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். அவர் நாட்களில் யூதா காப்பாற்றப்படும், இஸ்ரவேல் சுகமாக வாசம்செய்யும்; அவருக்குச் சூட்டப்படும் பெயர் நமது நீதியாயிருக்கிற யெகோவா என்பதே.

எரேமியா 23:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

“இது யூதா ஜனங்களின் மேய்ப்பர்களுக்கு (தலைவர்களுக்கு) மிகவும் கெட்டதாகும். அம்மேய்ப்பர்கள் ஆடுகளை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா திசைகளிலும் என் மேய்ச்சல் நிலத்திலிருந்து ஆடுகளை ஓட வைக்கிறார்கள்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. எனது ஜனங்களுக்கு அம்மேய்ப்பர்களே பொறுப்பானவர்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அம்மேய்ப்பர்களுக்கு இதனைச் சொல்கிறார்: “மேய்ப்பர்களாகிய நீங்கள் எனது ஆடுகளை எல்லாத் திசைகளிலும் ஓடச்செய்கிறீர்கள். அவை போகுமாறு நீங்கள் பலவந்தப்படுத்துகிறீர்கள். நீங்கள் அவற்றைப்பற்றி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், நான் உங்களைப்பற்றி அக்கறை எடுத்துக்கொள்வேன். நீங்கள் செய்த தீமைக்காக நான் உங்களைத் தண்டிப்பேன்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் எனது ஆடுகளை வேறு நாடுகளுக்கு அனுப்பினேன். ஆனால், விடுபட்ட ஆடுகளை நான் சேகரிப்பேன். நான் அவற்றை மீண்டும் அவற்றின் மேய்ச்சல் நிலத்திற்குக் கொண்டுவருவேன். எனது ஆடுகள் தம் மேய்ச்சல் நிலத்திற்குத் திரும்பியதும், அவற்றுக்கு நிறைய குட்டிகள் வர அவை எண்ணிக்கையில் பெருகும். நான் எனது ஆடுகளுக்குப் புதிய மேய்ப்பர்களை ஏற்படுத்துவேன். அம்மேய்ப்பர்கள் எனது ஆடுகளை அக்கறையோடு பார்த்துக்கொள்வார்கள். எனது ஆடுகள் பயப்படவோ, கலங்கவோ செய்யாது. எனது ஆடுகள் எதுவும் காணாமல் போகாது” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது: “காலம் வந்துக்கொண்டு இருக்கிறது. நான் ஒரு நல்ல ‘துளிரை’ எழுப்புவேன். அவன் ராஜா ஆவான். அவன் ஞான வழியில் ஆள்வான். நாட்டில் எது சரியோ நியாயமானதோ, அதைச் செய்வான். நல்ல ‘துளிருள்ள’ காலத்தில், யூதாவின் ஜனங்கள் காப்பாற்றப்படுவார்கள். இஸ்ரவேலர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள். இது அவரது நாமமாக இருக்கும்: கர்த்தர் நமது நன்மை.