எரேமியா 19:3-6
எரேமியா 19:3-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீ அவர்களிடம், “யூதாவின் அரசர்களே! எருசலேமின் மக்களே! கேளுங்கள். இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இந்த இடத்தில் நான் ஒரு பேராபத்தைக் கொண்டுவரப் போகிறேன். அதைப்பற்றிக் கேட்கும் ஒவ்வொருவருடைய காதுகளிலும் அது உறுத்திக்கொண்டே இருக்கும்” என்று சொல். ஏனெனில், இவர்கள் என்னைக் கைவிட்டு, இந்த இடத்தை அந்நிய தெய்வங்களின் இடமாக்கினார்கள். இவர்கள் இந்த இடத்தில் தாங்களோ, தங்கள் முற்பிதாக்களோ அல்லது யூதாவின் அரசர்களோ ஒருபோதும் அறிந்திராத தெய்வங்களுக்குப் தூபங்காட்டி, குற்றமற்ற இரத்தத்தினால் இந்த இடத்தையும் நிரப்பியிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் மகன்களைப் பாகாலுக்குப் பலிகளாக நெருப்பில் பலியிடுவதற்காக பாகாலின் மேடைகளையும் கட்டியிருக்கிறார்கள். இப்படியான ஒரு செயலை நான் கட்டளையிட்டதுமில்லை, சொல்லியதுமில்லை. அது என்னுடைய மனதில் தோன்றினதுமில்லை. ஆகையால் எச்சரிக்கையாயிருங்கள். இதோ, இந்த இடம் தோப்பேத் என்றோ பென் இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ அழைக்கப்படாமல், படுகொலைப் பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் நாட்கள் வரும் என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 19:3-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீ அவர்களை நோக்கி: யூதாவின் ராஜாக்களே, எருசலேமின் குடிகளே, யெகோவாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: இதோ, நான் இந்த இடத்தின்மேல் ஒரு பொல்லாப்பை வரச்செய்வேன்; அதைக் கேட்கிற அனைவருடைய காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும். அவர்கள் என்னை விட்டுவிட்டு, இந்த இடத்தை அந்நிய இடமாக்கி, தாங்களும், தங்கள் முற்பிதாக்களும், யூதாவின் ராஜாக்களும், அறியாதிருந்த அந்நிய தெய்வங்களுக்கு அதில் தூபங்காட்டி, இந்த இடத்தைக் குற்றமில்லாதவர்களின் இரத்தத்தினால் நிரப்பினதினாலும், தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிப்பதற்கு பாகாலின் மேடைகளைக் கட்டினதினாலும் இப்படி வரச்செய்வேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை, சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை. ஆகையால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இந்த இடம் தோப்பேத்தென்றும், இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கென்றும் இனிச் சொல்லப்படாமல், சங்கார பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்.
எரேமியா 19:3-6 பரிசுத்த பைபிள் (TAERV)
உன்னோடு இருக்கிற அந்த ஜனங்களிடம் சொல், ‘யூதாவின் ராஜாவே, எருசலேமின் ஜனங்களே, கர்த்தரிடமிருந்து வருகிற இந்த வார்த்தையைக் கேளுங்கள்! இதுதான் சர்வவல்லமையுள்ள கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் கூறுவது: நான் இந்த இடத்தில் விரைவில் ஒரு பயங்கரத்தை நிகழச்செய்வேன். இதைப்பற்றி கேள்விப்படுகிற ஒவ்வொருவனும் அதிர்ச்சியும் அச்சமும் அடைவான். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால் யூதாவின் ஜனங்கள் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டனர். அவர்கள் இந்த இடத்தை அயல்நாட்டுத் தெய்வங்களுக்கு உரியதாகச் செய்துவிட்டனர். அவர்கள் இந்த இடத்தில் வேறு தெய்வங்களுக்குத் தகனபலிகளை அளித்தனர். நீண்ட காலத்திற்கு முன்பு அந்தத் தெய்வங்களைத் தொழுதுகொள்ளவில்லை. அவர்களின் முற்பிதாக்களும் அத்தெய்வங்களைத் தொழுதுகொள்ளவில்லை. இவை அந்நிய நாடுகளிலிருந்து வந்தப் புதிய தெய்வங்கள். யூதாவின் ராஜாக்கள் ஒன்றுமறியாத குழந்தைகளின் இரத்தத்தால் இந்த இடத்தை நிரப்புகிறார்கள். யூதாவின் ராஜாக்கள் பாகால் தேவனுக்காக மேடையைக் கட்டினார்கள். அவர்கள் அந்த இடங்களைத் தங்கள் குமாரர்களை எரிக்கப் பயன்படுத்தினார்கள். பாகால் தெய்வத்திற்குத் தங்கள் குமாரர்களைத் தகனபலியாகக் கொடுத்தனர். நான் அவ்வாறு செய்யும்படி சொல்லவில்லை. உங்கள் குமாரர்களைப் பலியாகக் கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. நான் அதைப்பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இப்பொழுது, ஜனங்கள் இந்த இடத்தை இன்னோமின் பள்ளத்தாக்கு என்றும் “தோப்பேத்” என்றும் அழைக்கின்றனர். ஆனால், நான் இந்த எச்சரிக்கையைக் கொடுக்கிறேன். நாட்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது: ஜனங்கள் இந்த இடத்தை “கொலையின் பள்ளத்தாக்கு” என்று அழைக்கும் நாள் வருகிறது.
எரேமியா 19:3-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீ அவர்களை நோக்கி: யூதாவின் ராஜாக்களே, எருசலேமின் குடிகளே, கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேல் ஒரு பொல்லாப்பை வரப்பண்ணுவேன்; அதைக் கேட்கிற யாவருடைய காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும். அவர்கள் என்னை விட்டுவிட்டு, இந்த ஸ்தலத்தை அந்நிய ஸ்தலமாக்கி, தாங்களும், தங்கள் பிதாக்களும், யூதாவின் ராஜாக்களும், அறியாதிருந்த அந்நிய தேவர்களுக்கு அதிலே தூபங்காட்டி, இந்த ஸ்தலத்தைக் குற்றமில்லாதவர்களின் இரத்தத்தினாலே நிரப்பினபடியினாலும், தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிக்கும்படி பாகாலின் மேடைகளைக் கட்டினபடியினாலும் இப்படி வரப்பண்ணுவேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை, சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை. ஆகையால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இந்த ஸ்தலம் தோப்பேத்தென்றும், இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கென்றும் இனிச் சொல்லப்படாமல், சங்கார பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்.