எரேமியா 10:1-22

எரேமியா 10:1-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவா உங்களுக்குச் சொல்வதைக் கேளுங்கள். யெகோவா சொல்வது இதுவே: பிறதேசத்தாரின் வழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டாம். ஆகாயத்தின் அடையாளங்களைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள், நீங்களோ அவற்றிற்கு பயப்படாமல் இருங்கள். ஏனெனில் அந்த மக்கள் கூட்டங்களின் வழக்கங்கள் பயனற்றவை. அவர்கள் காட்டிலிருக்கிற ஒரு மரத்தை வெட்டுகிறார்கள், தச்சன் அதைத் தன் உளியினால் வடிவமைக்கிறான். அவர்கள் அதை வெள்ளியாலும், தங்கத்தாலும் அலங்கரித்து, சுத்தியலாலும், ஆணிகளாலும் அடித்து அது சாய்ந்து விழாதபடி இறுக்குகிறார்கள். அவை வெள்ளரித் தோட்டத்தின் பொம்மையைப்போல காணப்படுகின்றன. அவர்களின் விக்கிரகங்கள் பேசமாட்டாது, அவைகளால் நடக்கவும் முடியாது. ஆகையால் அவைகளைச் சுமந்து செல்லவேண்டும். அவைகள் நன்மையானதையோ, தீமையானதையோ செய்ய முடியாதவை. ஆகையால் அவைகளுக்குப் பயப்படாதிருங்கள் என்றார். யெகோவாவே, உம்மைப்போல் ஒருவருமில்லை. நீர் வலிமை மிக்கவர். உம்முடைய பெயர் ஆற்றலில் வலிமையுள்ளது. நாடுகளின் அரசரே! உம்மிடத்தில் பயபக்தியில்லாமல் யார்தான் இருப்பார்கள்? இது உமக்கு மட்டுமே உரியது. நாடுகளிலுள்ள எல்லா ஞானிகள் மத்தியிலும், அவர்களுடைய எல்லா அரசுகளுக்குள்ளும், உம்மைப் போன்றவர் எவருமே இல்லை. அவர்கள் எல்லோரும் உணர்ச்சியற்றவர்களும் மூடருமாய் இருக்கிறார்கள். பயனற்ற மரத்தாலான விக்கிரகங்களால் அவர்கள் போதிக்கப்பட்டிருக்கிறார்கள். வெள்ளித்தகடு தர்ஷீசிலிருந்தும், தங்கம் ஊப்பாசிலிருந்தும் கொண்டுவரப்படுகின்றன. கைவினைஞனாலும், கொல்லனாலும் செய்யப்பட்ட விக்கிரகங்களுக்கு நீலநிற உடைகளும், ஊதாநிற உடைகளும் உடுத்தப்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் சிறந்த தொழிலாளிகளினால் செய்யப்பட்டவை. ஆனாலும், யெகோவாவே உண்மையான இறைவன். அவரே வாழும் இறைவன்; நித்திய அரசர். அவர் கோபங்கொள்ளும்போது பூமி நடுங்குகிறது. அவருடைய கடுங்கோபத்தை நாடுகள் தாங்கிக்கொள்ள மாட்டாது. வானங்களையும், பூமியையும் படைக்காத இந்த தெய்வங்கள் பூமியிலிருந்தும், வானங்களின் கீழிருந்தும் அழிந்துவிடும் என்பதை அவர்களுக்குச் சொல். ஆனால் இறைவன் தமது வல்லமையினால் பூமியைப் படைத்து, தமது ஞானத்தினால் உலகத்தை நிறுவி, தமது அறிவாற்றலினால் வானங்களை விரித்தார். அவர் முழங்கும்போது, வானங்களிலுள்ள திரளான தண்ணீர் இரைகின்றன. அவர் பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணுகிறார். அவர் மழையுடன் மின்னலை அனுப்பி, தமது களஞ்சியங்களிலிருந்து காற்றை வெளியே கொண்டுவருகிறார். ஒவ்வொரு மனிதனும் உணர்வற்றவனும், அறிவற்றவனுமாயிருக்கிறான். ஒவ்வொரு கொல்லனும் தன் விக்கிரகங்களால் வெட்கமடைகிறான். ஏனெனில் அவனுடைய உருவச்சிலைகள் போலியானவை. அவைகளில் சுவாசமில்லை. அவைகள் பயனற்றவையாகவும், கேலிக்குரிய பொருட்களாகவும் இருக்கின்றன. அவைகளுக்குரிய தண்டனை வரும்போது அவை அழிந்துபோகும். யாக்கோபின் பங்காயிருப்பவர் இவைகளைப் போன்றவர் அல்ல. ஏனெனில், அவரே எல்லாவற்றையும் படைத்தவர். அவருடைய உரிமைச்சொத்தான இஸ்ரயேல் கோத்திரத்தையும் அவரே படைத்தார். சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர். கைதிகளாக வாழும் எருசலேம் மக்களே! நாட்டைவிட்டுப் போவதற்கு உங்கள் பொருட்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் யெகோவா சொல்வது இதுவே: “அந்த நாட்டில் குடியிருப்பவர்களை நான் இப்போதே அகற்றிவிடுவேன். நான் அவர்கள்மீது துன்பத்தைக் கொண்டுவருவேன். அவர்கள் சிறைப்பிடிக்கப்படுவார்கள்.” என் காயத்தினால் எனக்கு எவ்வளவு வேதனை! என் காயம் குணமாக்க முடியாத ஒன்றாய் இருக்கிறது. ஆனால் நானோ, “இது என் வருத்தம்; நானே அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்” என எனக்குள் கூறினேன். என் கூடாரம் அழிந்துவிட்டது. அதன் கயிறுகளும் அறுந்துபோயின. என் மகன்கள் என்னைவிட்டு போய்விட்டார்கள். அவர்கள் என்னிடம் இல்லை. இப்போது என்னுடைய கூடாரத்தைப் போடவோ, என் புகலிடத்தை அமைக்கவோ யாருமில்லை. மேய்ப்பர்கள் உணர்வற்றவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவிடம் விசாரிக்கிறதில்லை. ஆகையினால் அவர்கள் செழித்தோங்கவில்லை. அவர்கள் மந்தைகளும் சிதறிப்போயின. கேளுங்கள்! செய்தி ஒன்று வருகிறது. வடநாட்டிலிருந்து ஒரு பெரும் அமளியின் சத்தம் கேட்கிறது. அது யூதாவின் பட்டணங்களைப் பாழாக்கி, அவைகளை நரிகளின் இருப்பிடமாக்கும்.

எரேமியா 10:1-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேல் வீட்டாரே, யெகோவா உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்: அன்னியமக்களுடைய வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களால் அந்நியமக்கள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளால் கலங்காதிருங்கள். மக்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாளுகிற உளியினால் செதுக்கப்படும். வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடி அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். அவைகள் பனையைப் போல உயரமாக நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்காது. எனவே சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமை செய்யமுடியாது, நன்மை செய்யவும் அவைகளுக்கு பெலனில்லையென்று யெகோவா சொல்லுகிறார். யெகோவாவே, உமக்கு நிகரானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது பெயர் வல்லமையில் பெரியது. தேசங்களின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீர் ஒருவருக்கே பயப்படவேண்டியது; மக்களுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா தேசத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை. அவர்கள் அனைவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது. தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருந்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டான் கைகளினாலும் செய்யப்படுகிறது; இளநீலமும் இரத்தாம்பரமும் அவைகளின் உடை; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது. யெகோவாவோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய கடுங்கோபத்தை மக்கள் சகிக்கமாட்டார்கள். வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராமல் அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூமியின் நிலப்பரப்பை தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார். அவர் சத்தமிடும்போது வானத்தில் திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லையிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது கிடங்குகளிலிருந்து புறப்படச்செய்கிறார். மனிதர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த உருவங்களால் வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை. அவைகள் மாயையும், மகா பொய்யான செயல்களாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளில் அழியும். யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சொந்தமான கோத்திரம்; சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர். கோட்டையில் குடியிருக்கிறவளே, தேசத்திலிருந்து உன் பொருள்களைச் சேர்த்துக்கொள். இதோ, நான் இந்த முறை தேசத்தின் குடிமக்களைக் கவண்கொண்டெறிந்து, அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார். ஐயோ, நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் பெரிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன். என் கூடாரம் அழிந்துபோனது, என் கயிறுகளெல்லாம் அறுந்துபோனது; என் பிள்ளைகள் என்னை விட்டுப்போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை. மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, யெகோவாவை தேடாமல் போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது. இதோ, யூதாவின் பட்டணங்களை அழித்து வலுசர்ப்பங்களின் தங்கும் இடமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது.

எரேமியா 10:1-22 பரிசுத்த பைபிள் (TAERV)

இஸ்ரவேல் குடும்பத்தாரே! உங்களைக் குறித்து கர்த்தர் சொன்னதை கவனித்து கேளுங்கள்! “மற்ற நாடுகளில் உள்ள ஜனங்களைப் போன்று வாழாதீர்கள்! வானத்தில் தோன்றும் சிறப்பான அடையாளங்களைக் கண்டு பயப்படாதீர்கள்! அயல் நாடுகளில் உள்ளவர்கள் தாம் வானத்தில் காண்கின்றவற்றைப்பற்றி பயப்படுகிறார்கள். ஆனால் அவற்றைப்பற்றி நீங்கள் பயப்பட வேண்டாம்! மற்ற ஜனங்களின் பழக்கவழக்கங்கள் பயனற்றவை. ஏனெனில், அவர்களது விக்கிரகங்கள் காட்டிலுள்ள மரக்கட்டைகளைத் தவிர, வேறில்லை. அவர்களின் விக்கிரகங்கள் வேலையாளால் உளியால் செதுக்கப்பட்டவை. அவர்கள் தமது விக்கிரகங்களைப் பொன்னாலும் வெள்ளியாலும் அழகுபடுத்துகின்றனர். அவர்கள் ஆணிகளையும், சுத்திகளையும் பயன்படுத்தி, விக்கிரகங்கள் விழாமல் செய்கிறார்கள். எனவே, அவை விழுவதில்லை. அயல்நாடுகளில் உள்ள விக்கிரகங்கள் வெள்ளரிக்காய் வயலிலே, குருவிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்ட கொல்லை பொம்மையைப் போன்றுள்ளன. அவர்களின் விக்கிரகங்களால் பேசமுடியாது. அவர்களின் விக்கிரகங்களால் நடக்கமுடியாது. ஜனங்கள் அந்த விக்கிரகங்களைத் தூக்கிச் செல்லவேண்டும். அவற்றுக்கு நீங்கள் பயப்படவேண்டாம். அவைகளால் உங்களைக் காயப்படுத்த முடியாது. அவை உங்களுக்கு உதவியும் செய்யாது” என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தாவே, உம்மைப் போன்று எவரும் இல்லை! நீர் பெரியவர்! உமது நாமம் மகிமையும் பெருமையும் வல்லமையும் வாய்ந்தது! தேவனே! எல்லோரும் உமக்கு மரியாதைச் செலுத்தவேண்டும். அனைத்து தேசத்தாருக்கும் நீரே ராஜா. அவர்களின் மரியாதைக்கு நீர் பாத்திரர். அந்த நாடுகளுக்கிடையில் பல ஞானமுள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எவரும் உம்மைப் போன்று ஞானமுள்ளவர்கள் இல்லை. வேறு நாடுகளில் உள்ள, அனைத்து ஜனங்களும், அறியாமையும், மூடத்தனமும் கொண்டவர்கள். அவர்களின் போதனைகள் பயனற்றவை. அவர்களின் தெய்வங்கள் மரச் சிலைகளே. அவர்கள் தர்ஷீசிலிருந்து கொண்டுவந்த வெள்ளியையும் ஊப்பாசிலிருந்து கொண்டு வந்த பொன்னையும் வைத்து அந்தச் சிலைகளைச் செய்திருக்கின்றனர். அந்த விக்கிரகங்கள், தச்சன்களாலும், தட்டான்களாலும் செய்யப்பட்டவை. அவர்கள் அந்த விக்கிரகங்களுக்கு, இளநீலமும், ஊதா ஆடையும் அணிவிக்கிறார்கள். “ஞானமுள்ளவர்கள்” அந்த “தெய்வங்களைச்” செய்கின்றனர். ஆனால் கர்த்தர்தான் உண்மையான ஒரே தேவன். உண்மையில் ஜீவனுள்ள ஒரே தேவன் அவர்தான்! அவர் என்றென்றும் ஆளுகின்ற ராஜா! தேவன் கோபங்கொண்டால் பூமி அதிர்கிறது, தேசங்களிலுள்ள ஜனங்களால் அவரது கோபத்தை தாங்க முடியாது. “அந்த ஜனங்களிடம் இந்தச் செய்தியைக் கூறுங்கள், ‘அந்தப் பொய்த் தெய்வங்கள் பரலோகத்தையும் பூமியையும் படைக்கவில்லை. அந்தப் பொய்த் தெய்வங்கள் அழிக்கப்படுவார்கள். வானம் மற்றும் பூமியிலிருந்து மறைவார்கள்’” என்று கர்த்தர் சொல்லுகிறார். தேவன் ஒருவரே தமது வல்லமையால் பூமியைச் செய்தார். தேவன் தனது ஞானத்தைப் பயன்படுத்தி பூமியை உண்டாக்கினார். தேவன் தமது ஞானத்தினால் பூமியின்மேல் வானத்தை விரியச் செய்தார். சத்தமான இடிக்கும் தேவனே காரணமாகிறார். வானத்திலிருந்து பெருவெள்ளம் பொழியவும் அவரே காரணமாகிறார். அவர் பூமியின் அனைத்து இடங்களிலிருந்தும் வானத்திற்கு மேகம் எழும்பும்படி செய்கிறார். அவர் மின்னலுடன் மழையை அனுப்புகிறார். அவர் தமது பண்டகச் சாலையிலிருந்து காற்றை அனுப்புகிறார். ஜனங்கள் மூடர்களாக இருக்கிறார்கள்! உலோகச் சிற்பிகள் தாங்கள் செய்த விக்கிரகங்களைக் கொண்டு அவமானத்துக்குள்ளாகின்றனர். அந்தச் சிலைகள் வெறும் பொய் என்று அவர்கள் அறிவார்கள். அந்த விக்கிரகங்களுக்கு உயிர் இல்லை. அந்த விக்கிரகங்கள் பயனற்றவை. அவை பொய்யானவை. வஞ்சிக்கும்படியாக செய்யப்பட்டவை. நியாயத்தீர்ப்புக் காலத்தில், அவ்விக்கிரகங்கள் அழிக்கப்படும். ஆனால் யாக்கோபின் தேவன், அந்த விக்கிரகங்களைப் போன்றவரல்ல. தேவன் எல்லாவற்றையும் படைத்தார், தேவன் தமது சொந்த ஜனங்கள் என்று இஸ்ரவேல் ஜனங்களை தேர்ந்தெடுத்தார். “சர்வ வல்லமையுள்ள கர்த்தர்” என்பது தேவனுடைய நாமம். உனக்குச் சொந்தமானவற்றையெல்லாம் சேர்த்துக்கொள். புறப்படத் தயாராகு. யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் பட்டணத்தில் பிடிபடுவீர்கள். இதனை பகைவர்கள் சுற்றி வளைத்துக் கொள்வார்கள். “இந்த முறை, யூதாவின் ஜனங்களை நாட்டைவிட்டு வெளியே எறிவேன். நான் அவர்களுக்கு வலியும், துன்பமும் கொண்டு வருவேன். நான் இதனைச் செய்வதன் மூலம் அவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். ஓ! நான் (எரேமியா) மோசமாகக் காயப்பட்டேன், நான் புண்பட்டேன், என்னால் குணமாக முடியவில்லை எனக்குள் நான் இவ்வாறு சொல்லிக்கொண்டேன். “இதுதான் என்னுடைய நோய். இதன் மூலம் நான் துன்பப்படவேண்டும்.” எனது கூடாரம் அழிக்கப்பட்டது. கூடாரக் கயிறுகள் எல்லாம் அறுபட்டன. எனது பிள்ளைகள் என்னை விட்டுவிட்டனர். அவர்கள் போய்விட்டார்கள். எனது கூடாரத்தை அமைப்பதற்கு எவனும் இருக்கவில்லை, எனக்கான இருப்பிடத்தை உருவாக்கிட யாரும் இல்லை. மேய்ப்பர்கள் (தலைவர்கள்) மூடர்கள், அவர்கள் கர்த்தரைத் தேட முயற்சி செய்வதில்லை. அவர்களுக்கு ஞானம் இல்லை. எனவே அவரது மந்தைகள் (ஜனங்கள்) சிதறிக் காணாமல் போகின்றன. உரத்த சத்தத்தைக் கேளுங்கள்! இந்த உரத்த சத்தம் வடக்கிலிருந்து வருகிறது. அது யூதாவின் நகரங்களை அழிக்கும். யூதா ஒரு வெறுமையான வனாந்தரமாகும், அது ஓநாய்களுக்கான வீடாகும்.

எரேமியா 10:1-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேல் வீட்டாரே, கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்: புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள், ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமை செய்யக்கூடாது, நன்மை செய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது. ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீருக்கே பயப்படவேண்டியது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை. அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது. தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருந்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டான் கைகளினாலும் செய்யப்படுகிறது; இளநீலமும் இரத்தாம்பரமும் அவைகளின் உடுமானம்; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது. கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள். வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார். அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார். மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை. அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும். யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம். அரணில் குடியிருக்கிறவளே, தேசத்திலிருந்து உன் பொருள்களைச் சேர்த்துக்கொள். இதோ, நான் இந்த முறை தேசத்தின் குடிகளைக் கவண்கொண்டெறிந்து, அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஐயோ! நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் கொடிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன். என் கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; என் பிள்ளைகள் என்னை விட்டுப்போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை. மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது. இதோ, யூதாவின் பட்டணங்களைப் பாழும் வலுசர்ப்பங்களின் தாவுமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது.