எரேமியா 1:14-19

எரேமியா 1:14-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது யெகோவா என்னிடம், “நாட்டில் வாழும் யாவர்மேலும் வடக்கிலிருந்து பெரும் பயங்கரம் கொதித்தெழும்பும். அதற்காக நான் வடதிசை அரசுகளின் படைகளையெல்லாம் அழைக்கப் போகிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களின் அரசர்கள் வந்து எருசலேமின் நுழைவு வாசல்களில் தங்கள் சிங்காசனத்தை வைப்பார்கள்; அவர்கள் எருசலேமைச் சுற்றியுள்ள மதில்களுக்கு எதிராகவும், யூதாவின் பட்டணங்களுக்கு எதிராகவும் வருவார்கள். எனது மக்கள் வேறு தெய்வங்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளினால் செய்தவற்றையே வழிபட்டு, என்னைக் கைவிட்டார்கள். இந்த கொடிய செயல்களின் நிமித்தம் அவர்களுக்கு என் நியாயத்தீர்ப்பை வழங்குவேன். “ஆதலால் உன்னை ஆயத்தப்படுத்து. எழுந்து நின்று நான் உனக்குக் கட்டளையிடுவதையெல்லாம் அவர்களுக்குச் சொல். அவர்களுக்குப் பயப்படாதே, பயந்தால் அவர்கள் முன்னால் நான் உன்னைத் திகிலடையச் செய்வேன். இன்று நான் உன்னை முழு நாட்டிற்கும் விரோதமாக நிற்கும்படி பாதுகாப்பான பட்டணமாகவும், இரும்புத் தூணாகவும், வெண்கல மதிலாகவும் ஆக்கியிருக்கிறேன். யூதாவின் அரசர்களுக்கும், அதன் அதிகாரிகளுக்கும், ஆசாரியருக்கும், நாட்டு மக்களுக்கும் விரோதமாக நிற்கும்படியாகவே இப்படிச் செய்தேன். அவர்கள் உனக்கு எதிராகச் சண்டையிடுவார்கள். ஆயினும் அவர்கள் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள், ஏனெனில் நான் உன்னோடிருக்கிறேன். நான் உன்னை தப்புவிப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்” என்றார்.

எரேமியா 1:14-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிமக்கள் எல்லோர் மேலும் வரும். இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன்தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லாப் பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள். அவர்கள் என்னைவிட்டு அந்நிய தெய்வங்களுக்கு ஆராதனைசெய்து, தங்கள் கைகளின் செயலைப் பணிந்துகொண்ட அவர்களுடைய எல்லா தீமைகளுக்காக நான் என் நியாயத்தீர்ப்புகளை அவர்களுக்கு விரோதமாகக் கூறுவேன். ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிற அனைத்தையும் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கச்செய்யாமல், நீ அவர்கள் முகத்திற்கு பயப்படாதிரு. இதோ, தேசம் முழுவதற்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் மக்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றையதினம் பாதுகாப்பான பட்டணமும், இரும்புத்தூணும், வெண்கல மதிலும் ஆக்கினேன். அவர்கள் உனக்கு விரோதமாகப் போர்செய்வார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னைக் காப்பாற்றுவதற்கு நான் உன்னுடன் இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 1:14-19 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் என்னிடம், “வடக்கிலிருந்து பயங்கரமான ஒன்று வரும், இந்த நாட்டில் வாழ்கிற அனைத்து ஜனங்களுக்கும் இது ஏற்படும். மிகக் குறுகிய காலத்தில் நான், வடநாட்டு அரசுகளில் உள்ள அனைத்து ஜனங்களையும் அழைப்பேன்” என்றார். இவற்றையெல்லாம் கர்த்தர் சொன்னார். “அந்நாடுகளில் உள்ள ராஜாக்கள் வந்து எருசலேமின் வாசலருகில் தங்கள் சிங்காசனங்களை போடுவார்கள், அவர்கள் எருசலேமின் நகரச் சுவர்களைத் தாக்குவார்கள், மற்றும் அவர்கள் யூதாவிலுள்ள அனைத்து நகரங்களையும் தாக்குவார்கள். நான் எனது ஜனங்களுக்கு எதிராக என் தீர்ப்பினை அறிவிப்பேன். அவர்கள் தீயவர்கள், எனவே நான் இவற்றைச் செய்வேன். அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பியிருந்தார்கள். எனது ஜனங்கள் என்னை விட்டு விலகினார்கள். அவர்கள் அந்நிய தெய்வங்களுக்கு பலிகளைக் கொடுத்தனர், அவர்கள் தமது கைகளால் செய்திருந்த விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர். “ஆகவே எரேமியா, தயாராயிரு, எழுந்து நில், ஜனங்களோடு பேசு, நான் உன்னிடம் சொன்னவற்றையெல்லாம் நீ அவர்களுக்குச் சொல். ஜனங்களைப் பார்த்து பயப்படாதே, நீ ஜனங்களுக்குப் பயந்தால், பிறகு அவர்களுக்கு நீ பயப்படும்படி நல்ல காரணங்களைத் தருவேன். என்னைப் பொருத்தவரை, இன்று உன்னை பாதுகாப்பான நகரத்தைப்போன்று வலிமையானவனாக ஆக்குவேன், இரும்புத் தூண் போலவும், வெண்கலச்சுவர் போலவும் செய்வேன். தேசத்திலுள்ள எல்லாவற்றுக்கும் முன்பும், யூதா நாட்டிலுள்ள ராஜாக்களுக்கு முன்பும், யூதாவின் தலைவர்களுக்கு முன்பும், யூதாவின் ஆசாரியர்களுக்கு முன்பும், யூதாநாட்டின் ஜனங்களுக்கு முன்பும் நிற்க முடிந்த ஒருவனாக ஆவாய். அந்த ஜனங்கள் அனைவரும் உனக்கு எதிராகப் போரிடுவார்கள், ஆனால் அவர்கள் உன்னைத் தோற்கடிக்கமாட்டார்கள். ஏனென்றால், நான் உன்னோடு இருக்கிறேன், நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்றார். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.

எரேமியா 1:14-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரும். இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன்தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லாப் பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள். அவர்கள் என்னைவிட்டு அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளின் கிரியையைப் பணிந்துகொண்ட அவர்களுடைய சகல தீமைகளினிமித்தமும் நான் என் நியாயத்தீர்ப்புகளை அவர்களுக்கு விரோதமாகக் கூறுவேன். ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணாதபடிக்கு, நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு. இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றையதினம் அரணிப்பான பட்டணமும், இரும்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன். அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.