நியாயாதிபதிகள் 7:16-22

நியாயாதிபதிகள் 7:16-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எனவே அவன் அந்த முந்நூறுபேரையும் மூன்று பிரிவாகப் பிரித்து அவர்கள் எல்லோருடைய கைகளிலும் எக்காளங்களையும், வெறுமையான பானைக்குள் தீப்பந்தங்களையும் வைத்துக் கொடுத்தான். பின் அவன் அவர்களிடம், “என்னைக் கவனித்து என் வழியைப் பின்பற்றுங்கள். நான் முகாமின் அருகில் சென்று செய்வதைப்போலவே ஒன்றும்விடாமல் நீங்களும் செய்யுங்கள். நானும் எனது பகுதியில் இருப்பவர்களும் எங்கள் எக்காளங்களை ஊதியவுடன், நீங்கள் எல்லோரும் முகாமைச் சுற்றி உங்கள் எக்காளத்தை ஊதி, ‘யெகோவாவுக்காவும் கிதியோனுக்காகவும்’ என்று சத்தமிடுங்கள்” எனச் சொன்னான். நள்ளிரவு காவல் தொடங்கும் நேரத்தில், அவர்கள் காவலர்களை மாற்றிய சிறிது நேரத்தில், கிதியோனும் அவனுடன் நின்ற நூறுபேரும் முகாமின் அருகே போய்ச்சேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் எக்காளங்களை ஊதி, கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள். அந்த மூன்று பிரிவினரும் எக்காளங்களை ஊதி பானைகளை உடைத்தார்கள். அவர்கள் தீப்பந்தங்களை இடதுகையில் இறுக்கி பிடித்துக்கொண்டு, தாங்கள் ஊதப்போகிற எக்காளங்களைத் தங்கள் வலதுகையில் பிடித்துக்கொண்டு, “யெகோவாவுக்கு ஒரு வாள் கிதியோனுக்கு ஒரு வாள்” என்று பெரிய சத்தமிட்டார்கள். ஒவ்வொருவனும் முகாமைச் சுற்றி தன் நிலையில் நின்றான். அப்பொழுது மீதியானியர் எல்லோரும் கதறிக்கொண்டு தப்பியோடினார்கள். முந்நூறுபேரும் எக்காளங்களை ஒலித்துக் கொண்டிருந்தபோதே யெகோவா முகாம் முழுவதிலும் உள்ள மனிதர் ஒருவரையொருவர் தாக்கும்படி செய்தார். செரேராவை நோக்கி பெத் சித்தாவுக்கும் சாபாத்திற்கும், தேபாவுக்கும் அருகேயுள்ள ஆபேல் மெகொலாவின் எல்லைவரைக்கும் மீதியானியரின் யுத்தபடை தப்பி ஓடியது.

நியாயாதிபதிகள் 7:16-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்த முந்நூறுபேரை மூன்று படையாக பிரித்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து, அவர்களை நோக்கி: நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள். இதோ, நான் முகாமின் முன்பகுதியில் வந்திருக்கும்போது, நான் எப்படிச் செய்கிறேனோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும். நானும் என்னோடு இருக்கும் அனைவரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் முகாமைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, யெகோவாவுடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிடுவீர்களாக என்று சொன்னான். நடுஇரவின் துவக்கத்தில், இரவுக்காவலர்களை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடு இருந்த 100 பேரும் அந்த இரவின் துவக்கத்திலே முகாமின் முன்பகுதியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள். மூன்று படைகளின் மனிதர்களும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, யெகோவாவுடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு, முகாமைச் சுற்றிலும் அவரவர் தங்கள் இடத்திலே நின்றார்கள்; அப்பொழுது முகாமில் இருந்தவர்கள் எல்லோரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள். 300 பேரும் எக்காளங்களை ஊதும்போது, யெகோவா முகாமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு எதிராக ஓங்கச்செய்தார்; ராணுவமானது சேரோத்திலுள்ள பெத்சித்தாவரை, தாபாத்திற்கு அருகிலுள்ள ஆபேல் மெகொலாவின் எல்லைவரை ஓடிப்போனது.

நியாயாதிபதிகள் 7:16-22 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்பு கிதியோன் 300 பேரையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்தான். கிதியோன் ஒவ்வொருவருக்கும் ஒரு எக்காளத்தையும் ஒரு வெறுமையான ஜாடியையும் கொடுத்தான். ஒவ்வொரு ஜாடியினுள்ளும் ஒரு எரியும் தீப்பந்தம் இருந்தது. கிதியோன் அம்மனிதரைப் பார்த்து, “என்னைக் கூர்ந்து கவனித்து நான் செய்வதைச் செய்யுங்கள். பகைவரின் முகாம்வரைக்கும் என்னைத் தொடர்ந்து வாருங்கள். பகைவர்களது முகாமின் ஓரத்தை நான் அடைந்ததும் நான் செய்வதையே நீங்களும் செய்யுங்கள். நீங்கள் எல்லோரும் பகைவரின் முகாம்களைச் சூழ்ந்து கொள்ளுங்கள். நானும் என்னோடிருக்கும் ஆட்களும் எக்காளங்களை ஊதுவோம். நாங்கள் எக்காளங்களை ஊதியதும் நீங்களும் உங்கள் எக்காளங்களை ஊதுங்கள். உடனே சத்தமாக இவ்வாறு கூறுங்கள்: ‘கர்த்தருக்காகவும் கிதியோனுக்காகவும்!’ என்று கூறுங்கள்” என்றான். கிதியோனும் அவனோடிருந்த 100 மனிதர்களும் பகைவரது முகாமின் ஓரத்தை அடைந்தார்கள். பகைவர்கள் இரவுக் காவலாளரை மாற்றினதும் அவர்கள் அங்கு வந்தடைந்தனர். அது நள்ளிரவு ஜாமக்காவலின்போது நடந்தது. கிதியோனும் அவனது மனிதர்களும் எக்காளங்களை ஊதி, அவர்களுடைய ஜாடிகளை உடைத்தனர். உடனே எல்லாக் குழுவினரும் எக்காளங்களை ஊதி ஜாடிகளை உடைத்தார்கள். அம்மனிதர்கள் தீப்பந்தங்களை இடது கைகளிலும், எக்காளங்களை வலது கைகளிலும் ஏந்திக் கொண்டனர். அவர்கள் எக்காளங்களை ஊதியதும், “கர்த்தருக்கென்று ஒரு பட்டயம், கிதியோனுக்கென்று ஒரு பட்டயம்!” எனச் சத்தமிட்டனர். கிதியோனின் மனிதர்கள் தாங்கள் நின்ற இடத்திலேயே நின்றுக்கொண்டனர். முகாமிற்குள் மீதியானின் மனிதர்கள் கதறிக் கொண்டே ஓட ஆரம்பித்தனர். கிதியோனின் 300 மனிதர்களும் எக்காளங்களை ஊதியபொழுது, மீதியானியர் ஒருவரையொருவர் தங்கள் வாள்களால் கொல்லும்படியாக கர்த்தர் செய்தார். சேரோ நகரத்திற்கு அருகேயுள்ள பெத்சித்தா என்னும் நகரத்திற்கு பகைவரின் படைகள் ஓட்டம் எடுத்தனர். தாபாத் நகரத்தின் அருகேயுள்ள ஆபேல்மேகொலா நகரத்தின் எல்லை வரைக்கும் அவர்கள் ஓடிச் சென்றார்கள்.

நியாயாதிபதிகள் 7:16-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்த முந்நூறுபேரை மூன்று படையாக வகுத்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து, அவர்களை நோக்கி: நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள். இதோ, நான் பாளயத்தின் முன்னணியில் வந்திருக்கும்போது, நான் எப்படிச் செய்கிறேனோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும். நானும் என்னோடே இருக்கும் சகலமானபேரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் பாளயத்தைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்பீர்களாக என்று சொன்னான். நடுஜாமத்தின் துவக்கத்தில், ஜாமக்காரரை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளயத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள். மூன்று படைகளின் மனுஷரும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு, பாளயத்தைச் சுற்றிலும் அவரவர் தங்கள் நிலையிலே நின்றார்கள்; அப்பொழுது பாளயத்தில் இருந்தவர்கள் எல்லாரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள். முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்; சேனையானது சேரோத்திலுள்ள பெத்சித்தாமட்டும், தாபாத்திற்குச் சமீபமான ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று.