நியாயாதிபதிகள் 7:1-8

நியாயாதிபதிகள் 7:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதிகாலையில் கிதியோன் என்னும் யெருபாகாலும் அவனுடைய எல்லா மக்களும் ஆரோத் என்னும் நீரூற்றின் அருகில் முகாமிட்டார்கள். மீதியானியரின் முகாமோ இவர்களுக்கு வடக்கே, மோரே மலைக்கு அருகே பள்ளத்தாக்கில் இருந்தது. யெகோவா கிதியோனிடம், “நான் மீதியானியரை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பதற்கு நீ அளவுக்கதிகமானவர்களை வைத்திருக்கிறாய். நாங்கள் எங்கள் பெலத்தில் எங்களை மீட்டுக்கொண்டோம் என்று இஸ்ரயேலர் எனக்கெதிராக பெருமைபாராட்டக் கூடுமே. ஆகையால் நீ மக்களுக்கு, ‘உங்களுக்குள் பயத்தினால் நடுங்குபவர்கள் இருந்தால் கீலேயாத் மலையை விட்டுப் போய்விடலாம்’ என்று அறிவி” என்றார். எனவே இருபத்து இரண்டாயிரம்பேர் கீலியாத் மலையை விட்டுப் போனார்கள். பத்தாயிரம் பேர் மட்டும் எஞ்சியிருந்தார்கள். தொடர்ந்து யெகோவா கிதியோனிடம், “மனிதர் இன்னும் அளவுக்கதிகமாயிருக்கிறார்கள். அவர்களை தண்ணீர் அருகே கொண்டுபோ; நான் அங்கே அவர்களை சோதித்துப் பார்ப்பேன்; நான் ஒருவனை, ‘இவன் உன்னுடன் வரலாம்’ என்றால் அவன் உன்னுடன் வரட்டும். நான் ஒருவனை, ‘இவன் உன்னுடன் வரக்கூடாது’ என்றால் அவன் வரக்கூடாது” என்றார். எனவே கிதியோன் அந்த மனிதரைத் தண்ணீர் அருகே அழைத்துச் சென்றான். அப்பொழுது யெகோவா அவனிடம், “நாக்கால் நக்கி நாயைப்போல் தண்ணீர் குடிப்போரை ஒரு பக்கமும், முழங்கால்களை ஊன்றி தண்ணீர் குடிப்போரை மற்ற பக்கமுமாக நிறுத்திவை” என்றார். அவ்வாறு தண்ணீரை தங்கள் கைகளால் அள்ளி நாயைப்போல நாக்கால் நக்கி குடித்தவர்கள் முந்நூறுபேர். எஞ்சியோர் தங்கள் முழங்கால்களை ஊன்றி வாயைத் தண்ணீரில் வைத்துக் குடித்தனர். யெகோவா கிதியோனிடம், “நக்கிக் குடித்த முந்நூறுபேருடனே நான் உங்களை மீட்டு மீதியானியரை உங்கள் கையில் தருவேன். மற்றெல்லோரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகட்டும்” என்றார். எனவே கிதியோனும், முந்நூறுபேரும் உணவுப் பொருட்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டு, எஞ்சியிருந்த இஸ்ரயேலரை அவர்களுடைய கூடாரத்திற்கு அனுப்பிவிட்டார்கள். அப்பொழுது மீதியானியரின் முகாம் கீழே பள்ளத்தாக்கில் இருந்தது.

நியாயாதிபதிகள் 7:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீரூற்றின் அருகில் முகாமிட்டார்கள்; மீதியானியர்களின் முகாம் அவனுக்கு வடக்கில் மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது. அப்பொழுது யெகோவா கிதியோனை நோக்கி: நான் மீதியானியர்களை உன்னோடிருக்கிற மக்களின் கையில் ஒப்புக்கொடுப்பதற்கு அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்; என்னுடைய கை என்னை காப்பாற்றியது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீண்பெருமைகொள்ள வாய்ப்புண்டாகும். ஆகையால் பயமும் நடுக்கமும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து வேகமாக ஓடிப்போகட்டும் என்று, நீ மக்களின் காதுகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது மக்களில் 22,000 பேர் திரும்பிப் போய்விட்டார்கள்; 10,000 பேர் மீதியாக இருந்தார்கள். யெகோவா கிதியோனை நோக்கி: மக்கள் இன்னும் அதிகம், அவர்களைத் தண்ணீரின் அருகே இறங்கிப்போகச்செய்; அங்கே அவர்களை சோதித்துப் பார்ப்பேன்; உன்னோடு வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடு வரட்டும்; உன்னோடு வரக்கூடாது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடு வராதிருக்கவேண்டும் என்றார். அப்படியே அவன் மக்களைத் தண்ணீரின் அருகே இறங்கிப்போகச்செய்தான்; அப்பொழுது யெகோவா கிதியோனை நோக்கி: தண்ணீரை ஒரு நாய் நக்குவதுபோல அதைத் தன்னுடைய நாவினாலே நக்குகிறவன் எவனோ அவனைத் தனியாகவும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிகிறவன் எவனோ, அவனைத் தனியாகவும் நிறுத்து என்றார். தங்கள் கைகளால் அள்ளி, தங்கள் வாய்க்கு எடுத்து, நக்கிக்கொண்டவர்களின் எண்ணிக்கை 300 பேர்; மற்ற மக்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள். அப்பொழுது யெகோவா கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த 300 பேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியர்களை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற மக்களெல்லோரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகவேண்டும் என்றார். அப்பொழுது மக்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; மற்ற இஸ்ரவேலர்கள் எல்லோரையும் தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அனுப்பிவிட்டு, அந்த 300 பேரைமட்டும் வைத்துக்கொண்டான்; மீதியானியர்களின் படை அவனுக்குத் தாழ்விடமான பள்ளத்தாக்கில் இருந்தது.

நியாயாதிபதிகள் 7:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

அதிகாலையில் யெருபாகாலும் (கிதியோன்) அவனது ஆட்களும் ஆரோத்திலுள்ள நீருற்றினருகில் தம் முகாம்களை ஏற்படுத்திக்கொண்டனர், மோரே என்னும் மலையடிவாரத்திலுள்ள பள்ளத்தாக்கில் மீதியானியர் முகாமிட்டுத் தங்கி இருந்தனர். இப்பகுதி, கிதியோனும் அவனது ஆட்களும் தங்கி இருந்த பகுதிக்கு வடக்கில் இருந்தது. கர்த்தர் கிதியோனை நோக்கி, “மீதியானியரை வெல்வதற்கு உனது ஜனங்களுக்கு உதவப்போகிறேன். ஆனால் அவ்வேலைக்கு தேவையான எண்ணிக்கைக்கு அதிகமான வீரர்கள் உன்னோடிருக்கிறார்கள். இஸ்ரவேலர் என்னை மறந்து தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொண்டதாக எண்ணுவதை நான் விரும்பவில்லை. எனவே இப்போது உன் வீரர்களுக்கு இதனை அறிவித்துவிடு. அவர்களிடம், ‘பயப்படுகிற எவனும் கீலேயாத் மலையை விட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்’ என்று கூறு” என்றார். அப்போது 22,000 பேர் கிதியோனை விட்டு வீடுகளுக்குத் திரும்பினார்கள். ஆனாலும் 10,000 பேர் மீதி இருந்தனர். அப்போது கர்த்தர் கிதியோனை நோக்கி, “இப்போதும் ஆட்கள் மிகுதியாக இருக்கிறார்கள், அவர்களை தண்ணீரருகே அழைத்துச் செல். உனக்காக அவர்களை அங்கு பரிசோதிப்பேன். ‘இந்த மனிதன் உன்னோடு செல்வான்’ என்று நான் கூறினால் அவன் போவான். ‘அவன் உன்னோடு செல்லமாட்டான்’ என்று நான் கூறினால் அவன் போகமாட்டான்” என்றார். எனவே கிதியோன் அவர்களை தண்ணீரருகே அழைத்துச் சென்றான். அங்கு கர்த்தர் கிதியோனை நோக்கி, “உனது ஆட்களில் நாயைப்போல் தண்ணீரை நக்கிக் குடிப்போரை ஒரு குழுவாகவும், மண்டியிட்டு தண்ணீரை குடிப்போரை மற்றொரு குழுவாகவும் பிரித்து விடு” என்றார். கைகளால் தண்ணீரை அள்ளி நாயைப் போல் நக்கிப் பருகியோர் 300 பேர். மற்ற எல்லோரும் மண்டியிட்டுத் தண்ணீரைப் பருகினார்கள். கர்த்தர் கிதியோனை நோக்கி, “நாயைப் போல் தண்ணீரை நக்கிய 300 பேரையும் நான் பயன்படுத்துவேன். நீ மீதியானியரை முறியடிக்கும்படி செய்வேன். பிறர் வீடுகளுக்குத் திரும்பட்டும்” என்றார். எனவே கிதியோன் பிற இஸ்ரவேலரைத் திருப்பி அனுப்பிவிட்டான். 300 மனிதரை மட்டும் கிதியோன் தன்னோடு இருக்கச் செய்தான். வீட்டிற்குச் சென்றவர்களது பொருட்களையும், எக்காளங்களையும் அந்த 300 பேரும் வைத்துக் கொண்டனர். கிதியோனின் முகாமிற்குக் கீழேயுள்ள பள்ளத்தாக்கில் மீதியானியர் முகாமிட்டுத் தங்கி இருந்தனர்.

நியாயாதிபதிகள் 7:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த ஜனங்கள் யாவரும் காலமே எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீருற்றின் கிட்டப் பாளயமிறங்கினார்கள்; மீதியானியரின் பாளயம் அவனுக்கு வடக்கே மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது. அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; என் கை என்னை இரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும். ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப்போகக்கடவன் என்று, நீ ஜனங்களின் செவிகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது ஜனத்தில் இருபத்தீராயிரம்பேர் திரும்பிப் போய்விட்டார்கள்; பதினாயிரம்பேர் மீதியாயிருந்தார்கள். கர்த்தர் கிதியோனை நோக்கி: ஜனங்கள் இன்னும் அதிகம், அவர்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப்பண்ணு; அங்கே அவர்களைப் பரீட்சித்துக்காட்டுவேன்; உன்னோடேகூட வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடேகூட வரக்கடவன்; உன்னோடேகூட வரலாகாது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடேகூட வராதிருக்கக்கடவன் என்றார். அப்படியே அவன் ஜனங்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப்பண்ணினான்; அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: தண்ணீரை ஒரு நாய் நக்கும்பிரகாரமாக அதைத் தன் நாவினாலே நக்குகிறவன் எவனோ அவனைத் தனியேயும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக்குனிகிறவன் எவனோ, அவனைத் தனியேயும் நிறுத்து என்றார். தங்கள் கையால் அள்ளி, தங்கள் வாய்க்கெடுத்து, நக்கிக்கொண்டவர்களின் இலக்கம் முந்நூறுபேர்; மற்ற ஜனங்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள். அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார். அப்பொழுது ஜனங்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; மற்ற இஸ்ரவேலரெல்லாரையும் தங்கள்தங்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டு, அந்த முந்நூறுபேரை மாத்திரம் வைத்துக்கொண்டான்; மீதியானியரின் சேனை அவனுக்குத் தாழ்விடமான பள்ளத்தாக்கில் இருந்தது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்