நியாயாதிபதிகள் 6:7-16

நியாயாதிபதிகள் 6:7-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மீதியானியரின் கொடுமையால் இஸ்ரயேலர் யெகோவாவிடம் அழுதபோது, அவர் ஒரு இறைவாக்கினனை அனுப்பினார். அவன் அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: நான் உங்களை அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து கொண்டுவந்தேன். அத்துடன் எகிப்தியரின் வல்லமையிலிருந்தும், ஒடுக்குபவர்கள் எல்லோரினது கையினின்றும் நானே உங்களைப் பிரித்தெடுத்தேன். அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு அவர்களின் நாட்டை உங்களுக்குத் தந்தேன். நான் உங்களிடம், ‘நானே யெகோவா, உங்கள் இறைவனாகிய யெகோவா. இப்பொழுது நீங்கள் வாழும் நாட்டிலுள்ள எமோரியரின் தெய்வங்களை வணங்கவேண்டாம்’ என உங்களுக்குச் சொல்லியிருந்தேன். ஆனால் நீங்களோ எனக்குச் செவிகொடுக்கவில்லை” என்றான். அதற்கு பின்பு யெகோவாவின் தூதனானவர் வந்து அபியேஸ்ரியனான யோவாசிற்கு சொந்தமான ஒப்ராவிலிருக்கும் கர்வாலி மரத்திற்குக்கீழ் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது அவனுடைய மகன் கிதியோன், மீதியானியருக்குத் தெரியாமல் திராட்சை இரச ஆலையில் கோதுமை அடித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் கிதியோனின் முன்தோன்றி, “வலிமைமிக்க வீரனே! யெகோவா உன்னுடன் இருக்கிறார்” என்றார். அதற்குக் கிதியோன், “ஐயா, யெகோவா எங்களோடிருந்தால் ஏன் எங்களுக்கு இவையெல்லாம் சம்பவிக்கின்றன? எகிப்தியரின் கையினின்று யெகோவா எங்களை விடுவிக்கவில்லையா! என்று எங்கள் முற்பிதாக்கள் கூறிய அந்த அதிசயங்கள் எங்கே? இப்பொழுதோ யெகோவா எங்களைக் கைவிட்டு மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்து விட்டாரே!” என்றான். யெகோவா கிதியோனைத் திரும்பிப்பார்த்து, “உனக்கிருக்கும் பெலத்துடன் நீ போய் இஸ்ரயேல் மக்களை மீதியானியர் கையினின்று காப்பாற்று. உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா!” என்றார். அதற்கு கிதியோன், “யெகோவாவே! மனாசே கோத்திரத்தில் எனது வம்சம் வலுக்குறைந்தது; என் குடும்பத்திலும் நானே சிறியவனாயிருக்கிறேன். இஸ்ரயேலரைக் காப்பாற்ற எப்படி என்னால் முடியும்?” என்று கேட்டான். அதற்கு யெகோவா, “நான் உன்னுடனே இருப்பேன்; மீதியானியர் எல்லோரையும் ஒரு மனிதனை முறியடிப்பதுபோலவே நீ முறியடிப்பாய்” என்றார்.

நியாயாதிபதிகள் 6:7-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினாலே யெகோவாவை நோக்கி முறையிட்டபோது, யெகோவா ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமையாக இருந்த வீட்டிலிருந்து புறப்படவும் செய்து, எகிப்தியர்கள் கைகளிலிருந்தும், உங்களை ஒடுக்கின எல்லோருடைய கைகளிலிருந்தும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து, நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோரியர்களுடைய தெய்வங்களுக்குப் பயப்படாமல் இருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என்னுடைய சொல்லைக் கேட்காமல் போனீர்கள் என்கிறார் என்று சொன்னான். அதற்குப்பின்பு யெகோவாவுடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய மகன் கிதியோன் கோதுமையை மீதியானியர்களின் கைக்குத் தப்புவிக்க, ஆலைக்கு அருகில் அதைப் போரடித்தான். யெகோவாவுடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பெலசாலியே யெகோவா உன்னோடு இருக்கிறார் என்றார். அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவரே, யெகோவா எங்களோடு இருந்தால், இவைகளெல்லாம் எங்களுக்கு ஏன் சம்பவித்தது? யெகோவா எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்களுடைய பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது யெகோவா எங்களைக் கைவிட்டு, மீதியானியர்களின் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான். அப்பொழுது யெகோவா அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பெலத்தோடு போ; நீ இஸ்ரவேலை மீதியானியர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றுவாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார். அதற்கு அவன்: ஆ என்னுடைய ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே காப்பாற்றுவேன்; இதோ, மனாசேயில் என்னுடைய குடும்பம் மிகவும் எளியது; என்னுடைய தகப்பன் வீட்டில் நான் எல்லோரிலும் சிறியவன் என்றான். அதற்குக் யெகோவா: நான் உன்னோடு இருப்பேன்; ஒரே மனிதனை முறியடிப்பதுபோல நீ மீதியானியர்களை முறியடிப்பாய் என்றார்.

நியாயாதிபதிகள் 6:7-16 பரிசுத்த பைபிள் (TAERV)

மீதியானியர் எல்லாத் தீயகாரியங்களையும் செய்தனர். எனவே இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டினார்கள். எனவே கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார். அத்தீர்க்கதரிசி இஸ்ரவேலரிடம், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுவே: ‘நீங்கள் எகிப்தில் அடிமைகளாயிருந்தீர்கள். நான் உங்களை விடுவித்து அந்தத் தேசத்திலிருந்து அழைத்து வந்தேன். நான் எகிப்தின் பலமுள்ள ஜனங்களிடமிருந்து உங்களை மீட்டேன். பின்னர் கானானியர் உங்களைத் துன்புறுத்தினார்கள். நான் மீண்டும் உங்களைக் காப்பாற்றினேன். அத்தேசத்தில் இருந்தே அவர்களைப் போகும்படி செய்தேன். அவர்கள் தேசத்தை நான் உங்களுக்குக் கொடுத்தேன்.’ பின் உங்களிடம், ‘நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், எமோரியரின் தேசத்தில் வாழ்வீர்கள். ஆனால் அவர்களின் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ளாதீர்கள்’ என்றேன். ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை” என்றார். அப்போது கர்த்தருடைய தூதன் கிதியோன் என்னும் பெயருள்ளவனிடம் வந்தான். ஓப்ரா என்னுமிடத்தில் ஒரு கர்வாலி மரத்தின் கீழே கர்த்தருடைய தூதன் வந்து உட்கார்ந்தான். அந்த கர்வாலி மரம் யோவாஸ் என்பவனுக்குச் சொந்தமாயிருந்தது. யோவாஸ் அபியேசேரின் குடும்பத்தைச் சேர்ந்தவன். யோவாஸ் என்பவன் கிதியோனின் தந்தை. திராட்சை ஆலையில் கிதியோன் கோதுமையை அடித்துக்கொண்டிருந்தான். கர்த்தருடைய தூதன், கிதியோனுக்கருகே உட்கார்ந்தான். மீதியானியர் கோதுமையைப் பார்த்துவிடக் கூடாதென்று கிதியோன் மறைத்துவைக்க முயன்றான். கர்த்தருடைய தூதன் கிதியோனுக்குக் காட்சி தந்து, அவனிடம், “பெரும் வீரனே! கர்த்தர் உன்னோடிருக்கிறார்!” என்றான். அப்போது கிதியோன், “கர்த்தர் எங்களோடிருந்தால் எங்களுக்கு ஏன் இத்தனைத் துன்பங்கள் நேருகின்றன? எங்கள் முற்பிதாக்களுக்கு அவர் அற்புதமானக் காரியங்களைச் செய்தார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். கர்த்தர், தங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்ததாக எங்கள் முற்பிதாக்கள் கூறினார்கள். ஆனால் கர்த்தர் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். மீதியானியர் எங்களைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார்” என்றான். கர்த்தர் கிதியோனைப் பார்த்து, “உனது வல்லமையைப் பயன்படுத்து, மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலரைக் காப்பாற்று. அவர்களைக் காப்பாற்ற நான் உன்னை அனுப்புகிறேன்!” என்றார். ஆனால் கிதியோன் அவருக்குப் பதிலாக, “என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா, நான் எவ்வாறு இஸ்ரவேலரை காப்பாற்றுவேன். மனாசே கோத்திரத்தில் எங்கள் குடும்பமே மிகவும் எளியது. எங்கள் குடும்பத்தில் நான் இளையவன்” என்றான். கர்த்தர் கிதியோனிடம், “நான் உன்னோடிருக்கிறேன்! எனவே மீதியானியரை நீ தோற்கடிக்க முடியும்! ஒரே மனிதனை எதிர்த்துப் போரிடுவது போலவே உனக்குத் தோன்றும்” என்றார்.

நியாயாதிபதிகள் 6:7-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டபோது, கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமைத்தன வீட்டிலிருந்து புறப்படவும் செய்து, எகிப்தியர் கையினின்றும், உங்களை ஒடுக்கின யாவருடைய கையினின்றும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோரியருடைய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என் சொல்லைக் கேளாதேபோனீர்கள் என்கிறார் என்று சொன்னான். அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான். கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார். அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான். அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்