நியாயாதிபதிகள் 21:20-25
நியாயாதிபதிகள் 21:20-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர்கள் பென்யமீன் புத்திரரை நோக்கி: நீங்கள் போய், திராட்சத்தோட்டங்களிலே பதிவிருந்து, சீலோவின் குமாரத்திகள் கீதவாத்தியத்தோடே நடனம் பண்ணுகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் காணும்போது, திராட்சத்தோட்டங்களிலிருந்து புறப்பட்டு, உங்களில் அவரவர் சீலோவின் குமாரத்திகளில் ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள். அவர்களுடைய தகப்பன்மாராகிலும், சகோதரராகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி: எங்கள் நிமித்தம் அவர்களுக்குத் தயவு செய்யுங்கள்; நாங்கள் யுத்தம் பண்ணி, அவனவனுக்கு மனைவியை வாங்கிக்கொடுக்கவில்லை; உங்கள்மேல் குற்றமுண்டாக இப்போது நீங்கள் அவர்களுக்கு மனைவிகளைக் கொடுக்கவும் இல்லை என்போம் என்று சொன்னார்கள். பென்யமீன் புத்திரர் அப்படியே செய்து, நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள். இஸ்ரவேல் புத்திரரும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள். அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்து வந்தான்.
நியாயாதிபதிகள் 21:20-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எனவே அவர்கள் எஞ்சியிருந்த பென்யமீனியரிடம் அறிவுறுத்திச் சொன்னதாவது: “நீங்கள் போய் திராட்சைத் தோட்டத்திற்குள் மறைந்திருந்து பாருங்கள்; அங்கே சீலோவிலே உள்ள பெண்கள் வெளியே நடனமாட வருவதைக் காண்பீர்கள்; அப்பொழுது திராட்சைத் தோட்டத்திலிருந்து நீங்கள் விரைவாக வெளியே வந்து, ஒவ்வொருவரும் உங்களுக்கேற்ற சீலோவியப் பெண்ணை மனைவியாக்கும்படி தூக்கிக்கொண்டு உங்கள் பென்யமீன் நாட்டிற்குத் திரும்பி ஓடிப்போங்கள். பின்பு அப்பெண்களின் தகப்பன்மாரோ, சகோதரரோ வந்து எங்களிடம் முறையிட்டால், நாங்கள் அவர்களிடம், ‘அவர்களை மன்னியுங்கள். நாங்கள் போர்முனையில் மனைவியரை எடுப்பது போலவே செய்திருக்கிறார்கள். நீங்களோ அவர்களுக்குப் பெண் கொடுக்கவில்லை. அதனால் நீங்கள் குற்றமற்றவர்கள்’ எனச் சொல்வோம்” என்றார்கள். எனவே அவ்வாறே பென்யமீனியர் செய்தார்கள். பெண்கள் நடனமாடிக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு பெண்ணை தனக்கு மனைவியாக்கும்படி தூக்கிச்சென்றான். அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச்சென்று தங்கள் பட்டணங்களைத் திரும்பவும் கட்டி அங்கே வாழ்ந்துவந்தனர். அந்த நேரத்தில் இஸ்ரயேலரும் அவரவர் கோத்திரங்களின்படியும், வம்சங்களின்படியும் தங்கள் சொந்த இடங்களிலுள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள். அந்நாட்களில் இஸ்ரயேலில் அரசன் இருக்கவில்லை. ஒவ்வொருவனும் தன் பார்வைக்குச் சரியானதையே செய்து வந்தான்.
நியாயாதிபதிகள் 21:20-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர்கள் பென்யமீன் மனிதர்களை நோக்கி: நீங்கள் போய், திராட்சைத் தோட்டங்களிலே மறைந்திருந்து, சீலோவின் பெண்பிள்ளைகள் கீதவாத்தியத்தோடு நடனம் செய்கிறவர்களாகப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் பார்க்கும்போது, திராட்சைத் தோட்டங்களிலிருந்து விரைந்து, உங்களில் அவரவர் சீலோவின் பெண்பிள்ளைகளில் ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள். அவர்களுடைய தகப்பன்மார்களாகிலும், சகோதரர்களாகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி: எங்களுக்காக அவர்களுக்குத் தயவு செய்யுங்கள்; நாங்கள் யுத்தம் செய்து, அவனவனுக்கு மனைவியைப் பிடித்துக்கொடுக்கவில்லை; உங்கள்மேல் குற்றமுண்டாக, இப்போது நீங்கள் அவர்களுக்கு உங்கள் மகள்களைக் கொடுக்கவும் இல்லை என்போம் என்று சொன்னார்கள். பென்யமீன் மக்கள் அப்படியே செய்து, நடனம்செய்கிறவர்களிலே தங்கள் எண்ணிக்கைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள். இஸ்ரவேல் மக்களும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்திற்கும் தங்கள் குடும்பத்திற்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள். அந்த நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்னுடைய பார்வைக்குச் சரியானபடி செய்து வந்தான்.
நியாயாதிபதிகள் 21:20-25 பரிசுத்த பைபிள் (TAERV)
எனவே தலைவர்கள் பென்யமீன் கோத்திரத்திற்கு தங்கள் யோசனையைத் தெரிவித்தனர். அவர்கள், “போய் திராட்சைத் தோட்டங்களில் மறைந்துகொள்ளுங்கள். பண்டிகைச் சமயத்தில் நடனமாடும்படி சீலோ நகர இளம் பெண்கள் வருகிற சமயத்தைப் பார்த்துக் கொண்டே இருங்கள். அப்போது திராட்சைத் தோட்டங்களில் உங்கள் மறைவிடங்களில் இருந்து ஓடி வாருங்கள். உங்களில் ஒவ்வொருவரும் சீலோ நகரத்து கன்னிகைகளில் ஒருத்தியை எடுத்துக்கொள்ளலாம். அந்த கன்னிகைகளை பென்யமீன் தேசத்திற்குக் கொண்டு சென்று மணந்துகொள்ளுங்கள். அந்த கன்னிகைகளின் தந்தையாரோ, சகோதரரோ வந்து எங்களிடம் முறையிடுவார்கள். ஆனால் நாங்கள், ‘பென்யமீன் மனிதரிடம் இரக்கம் காட்டுங்கள். அப்பெண்களை அவர்கள் மணந்துகொள்ளட்டும். அவர்கள் உங்கள் பெண்களைத்தானே கொண்டு சென்றார்கள். அவர்கள் உங்களோடு போர் தொடுக்கவில்லை. அவர்களே கன்னிகைகளை எடுத்துச்சென்றதால், நீங்கள் தேவனுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறவில்லை. நீங்கள் பென்யமீன் ஆட்களுக்கு உங்கள் பெண்களை மணம் முடித்து வைப்பதில்லை என்றுதானே வாக்குறுதி அளித்தீர்கள். நீங்களே பென்யமீன் ஆட்களுக்குப் பெண்களைக் கொடுக்கவில்லை. அவர்களே உங்களிடமிருந்து பெண்களை எடுத்துச்சென்றார்கள். எனவே நீங்கள் உங்கள் வாக்குறுதியை மீறவில்லை’ என்போம்” என்றார்கள். அவ்வாறே பென்யமீன் ஆட்கள் செய்தார்கள். அந்த கன்னிகைகள் நடனமாடி வரும்போது, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பெண்னைப் பிடித்துக் கொண்டான். அவர்கள் அப்பெண்களைக் கவர்ந்து சென்று, மணந்து கொண்டார்கள். அவர்கள் தங்கள் தேசத்திற்குப் போனார்கள். அத்தேசத்தில் மீண்டும் நகரங்களை கட்டி, அந்நகரங்களில் குடியேறினார்கள். பின் இஸ்ரவேலர் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினார்கள். அவர்கள் தங்கள் தேசத்திற்கும் கோத்திரங்களுக்கும் சென்றனர். அந்நாட்களில் இஸ்ரவேலருக்கு ராஜா இருக்கவில்லை. எனவே ஒவ்வொருவனும் தனக்கு சரியெனக் கருதியதைச் செய்தான்.