நியாயாதிபதிகள் 2:1-16

நியாயாதிபதிகள் 2:1-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவின் தூதனானவர் கில்காலில் இருந்து போகீமுக்குப் போய் சொன்னதாவது: “நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்து உங்கள் முற்பிதாக்களுக்குத் தருவேன் என்று நான் வாக்களித்த நாட்டிற்கு, நான் உங்களை வழிநடத்தி வந்தேன். நான் உங்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறமாட்டேன் என்றும், இந்நாட்டு மக்களோடு எந்த உடன்படிக்கையையும் நீங்கள் செய்யவேண்டாம் என்றும், அவர்களுடைய பலிபீடங்களை உடைத்துப்போடும்படியும் நான் உங்களுக்குச் சொன்னேன். ஆனால் நீங்களோ அதற்கு கீழ்ப்படியவில்லை. நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள்? அதனால் இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்களுக்கு முன்பாக நான் அவர்களைத் துரத்தமாட்டேன்; அவர்கள் உங்கள் விலாக்களுக்கு, குத்தும் முள்ளாக இருப்பார்கள். அவர்களின் தெய்வங்கள் உங்களுக்கு கண்ணியாகவும் இருக்கும்.” யெகோவாவின் தூதனானவர் இவற்றை எல்லா இஸ்ரயேலர்களிடமும் சொன்னபோது மக்கள் சத்தமிட்டு அழுதார்கள். அவர்கள் அந்த இடத்தை போகீம் என்று அழைத்தார்கள். அங்கேயே அவர்கள் யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்தினார்கள். முன்பு யோசுவா இஸ்ரயேலரைப் போக அனுமதித்தபோது, அவர்கள் அந்த நாட்டை உரிமையாக்கிக்கொள்ளும்படி போனார்கள். ஒவ்வொருவரும் தங்கள் உரிமைச்சொத்தைப் பெறும்படி போனார்கள். மக்கள் யோசுவாவின் வாழ்நாள் முழுவதும் யெகோவாவுக்குப் பணிசெய்தனர். யெகோவா இஸ்ரயேலருக்காகச் செய்த எல்லாப் பெரிய செயல்களையும் கண்டிருந்த, யோசுவாவுக்குப் பின் வாழ்ந்த சபைத்தலைவர்களின் காலத்திலும் மக்கள் யெகோவாவுக்கு சேவை செய்தார்கள். யெகோவாவின் அடியவனும், நூனின் மகனுமான யோசுவா நூற்றுப்பத்து வயதில் இறந்தான். அவர்கள் திம்னாத் ஏரேஸில் அவனுடைய உரிமைச்சொத்தான நிலத்தில் அவனுடைய உடலை அடக்கம்பண்ணினார்கள். இது காயாஸ் மலைக்கு வடக்கே எப்பிராயீம் மலைநாட்டில் இருக்கிறது. அதன்பின்பு அந்த எல்லா தலைமுறையினரும் தங்கள் தந்தையருடன் சேர்க்கப்பட்டபின், யெகோவாவையும் அவர் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்தவற்றையும் அறியாத வேறு ஒரு தலைமுறை தோன்றியது. அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்து, பாகால் தெய்வங்களுக்குப் பணிசெய்தனர். அவர்கள் தங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த தங்கள் முற்பிதாக்களின் யெகோவாவாகிய இறைவனை கைவிட்டார்கள். தங்களைச் சுற்றியிருந்த மக்களின் பலவிதமான தெய்வங்களைப் பின்பற்றி வணங்கினார்கள். யெகோவாவுக்கு கோபமூட்டினார்கள். அவர்கள் யெகோவாவைக் கைவிட்டு பாகாலுக்கும், அஸ்தரோத்துக்கும் பணிசெய்ததினாலேயே யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள். இஸ்ரயேலருக்கு விரோதமாக யெகோவா கோபங்கொண்டு அவர் அவர்களைக் கொள்ளைக்காரரிடத்தில் ஒப்படைக்க, அவர்களும் அவர்களைக் கொள்ளையடித்தார்கள். அவர் அவர்களைச் சுற்றிலுமிருந்த அவர்களுடைய பகைவர்களுக்கு விற்றுப்போட்டார், அந்தப் பகைவர்களைத் தொடர்ந்து அவர்களால் எதிர்க்க முடியவில்லை. இஸ்ரயேலர் சண்டையிடப் போகும்போதெல்லாம், யெகோவா அவர்களுக்கு ஆணையிட்டபடி யெகோவாவின் கரம் அவர்களுக்கெதிராக இருந்து அவர்களைத் தோல்வியுறச் செய்தது. அவர்கள் பெரும் துயரத்திற்குள்ளானார்கள். அக்காலத்தில் யெகோவா நீதிபதிகளை நியமித்தார். அவர்கள் இஸ்ரயேல் மக்களை கொள்ளையரின் கைகளிலிருந்து மீட்டுக்கொண்டார்கள்.

நியாயாதிபதிகள் 2:1-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவுடைய தூதன் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்து, உங்களுடைய பிதாக்களுக்கு வாக்குக்கொடுத்த தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடு செய்த என்னுடைய உடன்படிக்கையை நான் ஒருபோதும் முறித்துப்போடுவதில்லை என்றும், நீங்கள் இந்த தேசத்தில் குடியிருக்கிறவர்களோடு உடன்படிக்கைசெய்யாமல், அவர்களுடைய பலிபீடங்களை இடித்துவிடவேண்டும் என்றும் சொன்னேன்; ஆனாலும் என்னுடைய சொல்லைக் கேட்காமல்போனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்? ஆகவே, நான் அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார். யெகோவாவுடைய தூதன் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் மக்கள் அனைவரிடமும் சொல்லும்போது, மக்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள். அந்த இடத்திற்கு போகீம் என்று பெயரிட்டு, அங்கே யெகோவா வுக்குப் பலிசெலுத்தினார்கள். யோசுவா இஸ்ரவேல் மக்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாகத்திற்குப் போனார்கள். யோசுவாவின் எல்லா நாட்களிலும் யெகோவா இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய செயல்களையெல்லாம் பார்த்தவர்களும், யோசுவாவிற்குப் பின்பு உயிரோடு இருந்தவர்களுமாகிய மூப்பர்களின் எல்லா நாட்களிலும் மக்கள் யெகோவாவைத் தொழுது கொண்டார்கள். நூனின் மகனான யோசுவா என்னும் யெகோவாவின் ஊழியக்காரன் 110 வயதுள்ளவனாக இறந்துபோனான். அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கில் இருக்கிற அவனுடைய சுதந்திரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்செய்தார்கள். அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களோடு சேர்க்கப்பட்டப்பின்பு, யெகோவாவையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த செய்கைகளையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின்பு எழும்பியது. அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்கு தீமையானதைச் செய்து, பாகால்களைத் தொழுது, தங்களுடைய முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச் செய்த அவர்களுடைய தேவனாகிய யெகோவாவைவிட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற மக்களுடைய தெய்வங்களாகிய அந்நிய தெய்வங்களைப் பின்பற்றிப்போய், அவைகளைத் தொழுதுகொண்டு, யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள். அவர்கள் யெகோவாவைவிட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் தொழுதுகொண்டார்கள். அப்பொழுது யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபம்கொண்டவராகி, அவர்கள் அதற்குப்பின்பு தங்கள் எதிரிகளுக்கு முன்பாக நிற்கமுடியாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர்களுடைய கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்களுடைய எதிரிகளின் கையில் ஒப்புக்கொடுத்தார். யெகோவா அவர்களுக்கு வாக்கு செய்தபடி, அவர்கள் புறப்பட்டுப்போகிற இடங்களெல்லாம் யெகோவாவுடைய கரம் தீமைக்கென்றே அவர்களுக்கு எதிராக இருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள். யெகோவா நியாயாதிபதிகளை எழும்பச்செய்தார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை விலக்கி காப்பாற்றினார்கள்.

நியாயாதிபதிகள் 2:1-16 பரிசுத்த பைபிள் (TAERV)

கில்கால் நகரத்திலிருந்து கர்த்தருடைய தூதன் போகீம் நகரத்திற்குச் சென்றான். தூதன் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியை இஸ்ரவேலருக்குக் கூறினான். இதுவே அந்த செய்தி: “நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். உங்கள் முற் பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த தேசத்திற்கு உங்களை வழிநடத்தினேன். உங்களோடு செய்த உடன்படிக்கையை ஒருபோதும் மீறமாட்டேன் என்று உங்களுக்குக் கூறினேன். ஆனால் அதற்குப் பதிலாக, நீங்கள் அந்த நிலத்தில் வாழும் ஜனங்களோடு எந்த ஒப்பந்தமும் செய்யக் கூடாது. அவர்களின் பலிபீடங்களை நீங்கள் அழிக்க வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்லியிருந்தேன். நீங்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லை! “இப்போது நான் உங்களுக்கு இதைக் கூறுகிறேன், ‘இவ்விடத்தை விட்டுப் போகும்படியாக அங்குள்ள ஜனங்களை இனிமேலும் நான் வற்புறுத்தமாட்டேன். இந்த ஜனங்கள் எப்போதும் உங்களுக்குப் பிரச்சனையாய் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு கண்ணியைப் போன்றிருப்பார்கள். உங்களைப் பிடிப்பதற்கு விரிக்கப்படும் வலையைப்போன்று அவர்களின் பொய்த் தெய்வங்கள் அமைவார்கள்.’” கர்த்தரிடமிருந்து இந்தச் செய்தியைத் தூதன் இஸ்ரவேலருக்குக் கூறியபின், ஜனங்கள் உரத்தக்குரலில் அழுதனர். அவர்கள் அங்கே அழுதபடியால், அதனைப் போகீம் என்று அழைத்தார்கள். போகீமில் இஸ்ரவேலர் கர்த்தருக்குப் பலிகளைச் செலுத்தினார்கள். பின் யோசுவா ஜனங்களை வீட்டிற்குப் போகச் சொன்னான். எனவே ஒவ்வொரு கோத்திரத்தினரும் தேசத்தில் அவரவருக்குரிய பகுதியை வாழ்வதற்காக எடுத்துக்கொள்ளச் சென்றனர். யோசுவா உயிரோடிருக்கும்வரை இஸ்ரவேலர் கர்த்தரை சேவித்தனர். யோசுவா மரித்தபின்னரும் மூத்த தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் கர்த்தரைத் தொடர்ந்து சேவித்தனர். இஸ்ரவேல் ஜனங்களுக்காக கர்த்தர் செய்த எல்லா மகத்தான செயல்களையும் இந்த மூத்த மனிதர்கள் பார்த்திருந்தார்கள். நூனின் குமாரனும், கர்த்தருடைய தாசனுமாகிய யோசுவா 110 வயதானபோது மரணமடைந்தான். இஸ்ரவேலர் யேசுவாவை அவனுக்குக் கொடுத்திருந்த நிலத்திலேயே அடக்கம் செய்தனர். அது காயாஸ் மலைக்கு வடக்கே, எப்பிராயீம் மலை நாட்டில், திம்னாத் ஏரேஸ் என்ற இடத்தில் இருந்தது. அந்தத் தலைமுறையினர் மரித்தபின், அடுத்த தலைமுறையினர் வளர்ந்து வந்தனர். புதிய தலைமுறையினர் கர்த்தரைக் குறித்தும் அவர் இஸ்ரவேலருக்குச் செய்தவற்றைக் குறித்தும் அறிந்திருக்கவில்லை. எனவே இஸ்ரவேலர் தீயவற்றைச் செய்து பொய் தேவனான பாகாலை சேவிக்கத் தொடங்கினார்கள். ஜனங்கள் இந்த தீயகாரியத்தைச் செய்வதை கர்த்தர் கண்டார். கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வந்திருந்தார். இந்த ஜனங்களின் முற்பிதாக்கள் கர்த்தரை ஆராதித்தனர். ஆனால் இஸ்ரவேலரோ கர்த்தரைப் பின்பற்றுவதை விட்டு விலகி, தங்களைச் சுற்றிலும் வாழ்ந்த ஜனங்களின் பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். அது கர்த்தரை கோபத்திற்குள்ளாக்கிற்று. இஸ்ரவேலர் கர்த்தரை ஆராதிப்பதை விட்டு விட்டுப் பாகாலையும் அஸ்தரோத்தையும் தொழுது கொள்ளத் தொடங்கினார்கள். கர்த்தர் இஸ்ரவேலரிடம் கோபங்கொண்டார். பகைவர்கள் இஸ்ரவேலரை எதிர்த்து அவர்களுடைய உடமைகளைக் கைப்பற்றிக்கொள்ள கர்த்தர் அனுமதித்தார். பகைவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இஸ்ரவேலரால் முடியவில்லை. இஸ்ரவேலர் போருக்குச் சென்ற போதெல்லாம், தோல்வியே கண்டனர். கர்த்தர் அவர்களோடு இல்லாதபடியால் அவர்கள் தோற்றனர். தங்களைச் சுற்றிலும் வாழ்கின்ற ஜனங்களின் பொய்த் தெய்வங்களைத் தொழுதால் அவர்கள் தோற்று விடுவார்கள் என்று கர்த்தர் அவர்களை ஏற்கெனவே எச்சரித்திருந்தார். இஸ்ரவேலர் மிகவும் துன்புற்றார்கள். பிறகு கர்த்தர் நியாயாதிபதிகள் என்று அழைக்கப்பட்ட தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார். இஸ்ரவேலரின் உடமைகளைக் கைப்பற்றிக் கொண்ட பகைவர்களிடமிருந்து அவர்களை இந்தத் தலைவர்கள் மீட்டார்கள்.

நியாயாதிபதிகள் 2:1-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தருடைய தூதனானவர் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் ஒருக்காலும் முறித்துப்போடுவதில்லை என்றும், நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணாமல், அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக்கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்? ஆகையால் நான் அவர்களை உங்கள் முகத்திற்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார். கர்த்தருடைய தூதனானவர் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் எல்லாரோடும் சொல்லுகையில், ஜனங்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள். அவ்விடத்திற்குப் போகீம் என்று பேரிட்டு, அங்கே கர்த்தருக்குப் பலியிட்டார்கள். யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர் தங்கள்தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள். யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள். நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான். அவனை எப்பிராயீமின் மலைதேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கேயிருக்கிற அவனுடைய சுதந்தரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்பண்ணினார்கள். அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து, தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள். அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள். அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார். கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள். கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்