யாக்கோபு 5:13-20

யாக்கோபு 5:13-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன். உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது. சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

யாக்கோபு 5:13-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உங்களில் யாராவது துன்பப்பட்டால், அவன் மன்றாடட்டும். யாராவது மகிழ்ச்சியாக இருந்தால், அவன் துதிப் பாடல்களைப் பாடட்டும். உங்களில் யாராவது வியாதிப்பட்டால், அவன் திருச்சபையின் தலைவர்களை அழைக்கட்டும், தலைவர்கள் கர்த்தருடைய பெயராலே எண்ணெய் பூசி, அவனுக்காக மன்றாடுவார்கள். விசுவாசத்துடன் செய்யப்படும் மன்றாட்டு நோயாளியைச் சுகமடையச் செய்யும்; கர்த்தர் அவனை எழுப்புவார். அவன் பாவம் செய்திருந்தால், அது அவனுக்கு மன்னிக்கப்படும். ஆகவே நீங்கள், உங்களுடைய பாவங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, நீங்கள் சுகமடைவதற்காக, ஒருவருக்காக ஒருவர் மன்றாடுங்கள். ஒரு நீதிமானின் மன்றாட்டு வல்லமையுடையதாகவும், பயனை விளைவிக்கிறதாகவும் இருக்கிறது. எலியா நம்மைப்போன்ற ஒரு மனிதனே. அவன் மழை பெய்யக்கூடாது என்று ஊக்கமாய் மன்றாடினான்; அதனால் அந்த நாட்டின்மேல் மூன்றரை வருடங்களாக மழை பெய்யவில்லை. எலியா மீண்டும் மன்றாடினான்; அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது. பூமியும் அதன் விளைச்சலைக் கொடுத்தது. எனக்கு பிரியமானவர்களே, உங்களில் யாராவது சத்தியத்தைவிட்டு வழிவிலகிப் போகும்போது, ஒருவன் அவனைத் திரும்பவும் நல்வழிக்குக் கொண்டுவந்தால், இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: ஒரு பாவியை அவனுடைய குற்றவழியிலிருந்து திரும்பச் செய்கிறவன், மரணத்திலிருந்து அவனை இரட்சித்து, அந்தப் பாவியின் ஏராளமான பாவங்கள் மன்னிக்கப்பட்டு, மூடப்படுவதற்கு வழிவகுக்கிறான்.

யாக்கோபு 5:13-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம் செய்யவேண்டும்; ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் சங்கீதம் பாடவேண்டும். உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைக்கவேண்டும்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் செய்யவேண்டும். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் நோயாளியை குணமாக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் குணமடையும்படிக்கு, உங்களுடைய குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்செய்யுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாக இருக்கிறது. எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனிதனாகயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாக ஜெபம்செய்தான், அப்பொழுது மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் பூமியின்மேல் மழைபெய்யவில்லை. மறுபடியும் ஜெபம்செய்தான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் கனியைத் தந்தது. சகோதரர்களே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திரும்ப வழிநடத்தினால், தவறான வழியிலிருந்து பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்திலிருந்து இரட்சித்து, அநேக பாவங்களை மூடுவானென்று அறிந்துகொள்ளட்டும்.

யாக்கோபு 5:13-20 பரிசுத்த பைபிள் (TAERV)

உங்களில் எவருக்கேனும் துன்பம் வந்தால் அவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். உங்களில் யாரேனும் மகிழ்ச்சியுடன் இருந்தால் அவர்கள் பாடவேண்டும். உங்களில் எவருக்கேனும் நோய் வந்தால் ஆலயத்தில் உள்ள மூப்பர்களை அழைக்கவேண்டும். அவர்கள் கர்த்தரின் பெயரால் எண்ணெயைத் தடவிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். விசுவாசத்தோடு செய்யப்படுகிற எந்தப் பிரார்த்தனையும் பயன் தரும். அது நோயைக் குணமாக்கும். நீங்கள் செய்த தவறுகளை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுங்கள். பிறகு ஒருவருக்காக ஒருவர் பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு செய்தால் தேவன் குணப்படுத்துவார். நல்லவர்கள் பிரார்த்தனை செய்தால் நன்மைகள் நிகழும். எலியாவும் நம்மைப்போன்ற ஒருவன் தான். மழை பெய்யக் கூடாது என்று பிரார்த்தனை செய்தான். எனவே மூன்றரை வருடங்களாக மழை இல்லாமல் இருந்தது. மழை வேண்டுமென எலியா பிரார்த்தனை செய்தான். எலியாவின் பிரார்த்தனைக்குப்பின் மழை வந்தது. பயிர்கள் செழித்தன. எனது சகோதர சகோதரிகளே, உங்களில் ஒருவன் உண்மையிலிருந்து விலகிப் போகலாம். இன்னொருவன் அவனைத் திரும்பவும் அழைத்து வரலாம். இதை நினைவிலிருத்திக்கொள்ளுங்கள். தவறான வழியிலிருந்து ஒரு பாவியைத் திருப்புகிற ஒருவன் அம்மனிதனின் ஆன்மாவைக் காப்பாற்றிப் பல பாவங்களை அழிக்கிறான்.

யாக்கோபு 5:13-20

யாக்கோபு 5:13-20 TAOVBSIயாக்கோபு 5:13-20 TAOVBSI