யாக்கோபு 5:13-16

யாக்கோபு 5:13-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உங்களில் யாராவது துன்பப்பட்டால், அவன் மன்றாடட்டும். யாராவது மகிழ்ச்சியாக இருந்தால், அவன் துதிப் பாடல்களைப் பாடட்டும். உங்களில் யாராவது வியாதிப்பட்டால், அவன் திருச்சபையின் தலைவர்களை அழைக்கட்டும், தலைவர்கள் கர்த்தருடைய பெயராலே எண்ணெய் பூசி, அவனுக்காக மன்றாடுவார்கள். விசுவாசத்துடன் செய்யப்படும் மன்றாட்டு நோயாளியைச் சுகமடையச் செய்யும்; கர்த்தர் அவனை எழுப்புவார். அவன் பாவம் செய்திருந்தால், அது அவனுக்கு மன்னிக்கப்படும். ஆகவே நீங்கள், உங்களுடைய பாவங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, நீங்கள் சுகமடைவதற்காக, ஒருவருக்காக ஒருவர் மன்றாடுங்கள். ஒரு நீதிமானின் மன்றாட்டு வல்லமையுடையதாகவும், பயனை விளைவிக்கிறதாகவும் இருக்கிறது.

யாக்கோபு 5:13-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம் செய்யவேண்டும்; ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் சங்கீதம் பாடவேண்டும். உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைக்கவேண்டும்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் செய்யவேண்டும். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் நோயாளியை குணமாக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் குணமடையும்படிக்கு, உங்களுடைய குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்செய்யுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாக இருக்கிறது.

யாக்கோபு 5:13-16 பரிசுத்த பைபிள் (TAERV)

உங்களில் எவருக்கேனும் துன்பம் வந்தால் அவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். உங்களில் யாரேனும் மகிழ்ச்சியுடன் இருந்தால் அவர்கள் பாடவேண்டும். உங்களில் எவருக்கேனும் நோய் வந்தால் ஆலயத்தில் உள்ள மூப்பர்களை அழைக்கவேண்டும். அவர்கள் கர்த்தரின் பெயரால் எண்ணெயைத் தடவிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். விசுவாசத்தோடு செய்யப்படுகிற எந்தப் பிரார்த்தனையும் பயன் தரும். அது நோயைக் குணமாக்கும். நீங்கள் செய்த தவறுகளை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுங்கள். பிறகு ஒருவருக்காக ஒருவர் பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு செய்தால் தேவன் குணப்படுத்துவார். நல்லவர்கள் பிரார்த்தனை செய்தால் நன்மைகள் நிகழும்.

யாக்கோபு 5:13-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன். உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

யாக்கோபு 5:13-16

யாக்கோபு 5:13-16 TAOVBSIயாக்கோபு 5:13-16 TAOVBSI