யாக்கோபு 4:5-17

யாக்கோபு 4:5-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அல்லது, நம்மில் வாழும்படி இறைவன் நமக்குக் கொடுத்த பரிசுத்த ஆவியானவர், நாம் தமக்குரியவர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்று வைராக்கிய வாஞ்சையுடையவராய் இருக்கிறார் என்ற வேதவசனம் காரணமில்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆனால் இறைவனோ நமக்கு அதிக கிருபையைக் கொடுக்கிறார். அதனால்தான் வேதவசனம்: “பெருமையுள்ளவர்களை இறைவன் எதிர்க்கிறார். ஆனால், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையைக் கொடுக்கிறார்” என்று சொல்லுகிறது. எனவே இறைவனுக்குக் அடங்கியிருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். இறைவனுக்கு அருகில் வாருங்கள், அவரும் உங்களருகே வருவார். பாவிகளே, உங்கள் கைகளைக் கழுவுங்கள். இருமனம் உள்ளவர்களே, உங்கள் இருதயங்களைச் சுத்திகரித்துக் கொள்ளுங்கள். துக்கப்பட்டு அழுது புலம்புங்கள். உங்கள் நகைப்பு அழுகையாகவும், உங்கள் மகிழ்ச்சியைத் துக்கமாகவும் மாற்றிக்கொள்ளுங்கள். கர்த்தருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள். அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். பிரியமானவர்களே, ஒருவரையொருவர் அவதூறாய் பேசாதிருங்கள். யாராவது தனது சகோதரனுக்கு எதிராகப் பேசினால், அல்லது அவனைக் குற்றவாளியாகத் தீர்த்தால், அவன் இறைவனுடைய சட்டத்திற்கு எதிராய்ப் பேசுகிறவனாகவும், இறைவனுடைய சட்டத்தை குற்றப்படுத்துகிறவனாகவும் இருக்கிறான். நீங்கள் இறைவனுடைய சட்டத்தைக் குற்றப்படுத்துகிறபோது, நீங்கள் அதைக் கைக்கொள்கிறவர்களாய் இல்லாமல், மோசேயின் சட்டத்தை நியாயந்தீர்க்க, அதற்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கிறவர்களாய் இருக்கிறீர்கள். இறைவன் ஒருவரே சட்டத்தைக் கொடுத்தவரும், நியாயந்தீர்ப்பவருமாய் இருக்கிறார். அவரே நம்மை இரட்சிக்கவும், அழிக்கவும் வல்லவராய் இருக்கிறார். அப்படியிருக்க, உங்கள் அயலவனை நியாயந்தீர்க்க நீங்கள் யார்? “இன்று அல்லது நாளை இந்தப் பட்டணத்திற்கு அல்லது அந்தப் பட்டணத்திற்கு போவோம். அங்கு ஒரு வருடம் தங்கியிருந்து, வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்போம்” என்று சொல்லுகிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு உங்களுக்கு என்ன நிகழும் என்றுகூட உங்களுக்குத் தெரியாதே. உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது? அது சற்று நேரத்திற்குத் தோன்றி மறைகின்ற மூடுபனியைப்போல் இருக்கின்றதே. எனவே, “கர்த்தருக்கு சித்தமானால், நாங்கள் உயிரோடிருந்து இதையோ, அதையோ செய்வோம்” என்றே நீங்கள் சொல்லவேண்டும். இப்பொழுதோ நீங்கள் அகந்தைகொண்டு, பெருமையாகப் பேசுகிறீர்கள். இவ்விதம் பெருமையாக பேசுவது யாவும் தீமையானது. ஆகவே நன்மைசெய்ய ஒருவருக்கு, அறிந்திருந்தும், அதைச் செய்யாவிட்டால் அது பாவம்.

யாக்கோபு 4:5-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நம்மில் வாசமாக இருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாக இருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாகச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா? அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் சேருவார். பாவிகளே, உங்களுடைய கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்களுடைய இருதயங்களைப் பரிசுத்தம் செய்யுங்கள். நீங்கள் துயரப்பட்டுப் புலம்பி அழுங்கள்; உங்களுடைய சிரிப்பு புலம்பலாகவும், உங்களுடைய சந்தோஷம் துயரமாகவும் மாறட்டும். கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். சகோதரர்களே, ஒருவருக்கொருவர் விரோதமாகப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்தினால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாக இல்லாமல், அதற்கு நியாயாதிபதியாக இருப்பாய். நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவரும் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இந்த பட்டணத்திற்குச் சென்று, அங்கே ஒரு வருடம் தங்கி, வியாபாரம் செய்து, பணம் சம்பாதிப்போம் என்று சொல்லுகிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்களுடைய ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம்தோன்றி, பின்பு காணாமற்போகிற புகையைப்போல இருக்கிறதே. ஆதலால்: தேவனுக்கு விருப்பமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும். இப்பொழுது உங்களுடைய பிடிவாதங்களில் பெருமைகொள்கிறீர்கள்; இப்படிப்பட்ட பெருமையெல்லாம் தீமையாக இருக்கிறது. ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாக இருந்தும், அதைச் செய்யாமல்போனால், அது அவனுக்குப் பாவமாக இருக்கும்.

யாக்கோபு 4:5-17 பரிசுத்த பைபிள் (TAERV)

அல்லது “தேவன் நமக்குள் வசிக்க வைத்த ஆவியானவர் நம்மில் வைராக்கியத்தோடு இருக்கிறார்” என்று வேதவாக்கியத்தில் எழுதப்பட்டிருப்பதைப் பொருளற்றது என நீங்கள் எண்ணுகிறீர்களா? ஆனால் நம்மீதான அவரது கிருபை மிகவும் உயர்ந்தது. வேதவாக்கியத்தில் எழுதப்பட்டிருப்பது போல், “பெருமை பாராட்டுபவர்களுக்கு எதிராக தேவன் இருக்கிறார். ஆனால் அவர் பணிவான மக்களுக்குக் கிருபையை வழங்குகிறார்.” எனவே, உங்களையே தேவனிடம் ஒப்படையுங்கள். சாத்தானை எதிர்த்து நில்லுங்கள். அவன் ஓடிவிடுவான். தேவனை நெருங்கி வாருங்கள். தேவன் உங்களிடம் நெருங்கி வருவார். நீங்கள் பாவிகள். எனவே, உங்கள் வாழ்விலிருந்து பாவத்தை அப்புறப்படுத்துங்கள். நீங்கள் தேவனையும் உலகத்தையும் ஒரே நேரத்தில் பின்பற்ற முயல்கிறீர்கள். உங்கள் சிந்தனைகளைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். சோகமாயிருங்கள்; வருத்தமாய் இருங்கள். உங்கள் சிரிப்பை அழுகையாக மாற்றுங்கள். உங்கள் மகிழ்ச்சியை சோகமாக மாற்றுங்கள். தேவனின் முன் பணிவோடு வணங்குங்கள். அவர் உங்களை உயர்த்துவார். சகோதர சகோதரிகளே, தீயகாரியங்களைப் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்துங்கள். கிறிஸ்துவில் உன் சகோதரனை அவமானப்படுத்துவது அல்லது அவனை நியாயம் தீர்ப்பது என்பது அவன் பின்பற்றுகிற சட்டத்தை அவமானப்படுத்துவதற்கு சமமாகும். உன் சகோதரனை நியாயம் தீர்த்தால் அவன் பின்பற்றிக்கொண்டிருந்த சட்டத்தையே நியாயம் தீர்க்கிறாய் என்பதே அதன் பொருளாகும். சட்டத்தை உருவாக்கியவர் ஒரே ஒருவரே இருக்கிறார். அவர் தேவனாவார். சட்டத்தையே கேள்விக்குட்படுத்தினால், சட்டத்திற்குக் கட்டுப்பட்ட குடிமகனாக இருப்பதை விட்டு நீ நீதிபதியாகிறாய் என்பது பொருளாகும். சட்டத்தைக் காப்பாற்றவும், அழிக்கவும் அதிகாரம் கொண்டவர் அவர் ஒருவரே. எனவே உன் சகோதரனையும் சகோதரியையும் நீ தான் நியாயம் தீர்க்க வேண்டும் என நினைக்க நீ யார்? “இன்று அல்லது நாளை நாம் ஒரு நகரத்திற்குப் போவோம். அங்கே ஓராண்டு தங்குவோம். வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்போம்” என்று உங்களில் சிலர் கூறுகிறார்கள். கவனியுங்கள். “நாளை என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. உங்கள் வாழ்க்கை பனி புகையைப் போன்றது. கொஞ்ச காலத்திற்கே உங்களால் பார்க்கமுடியும். ஆனால் பிறகு மறைந்துவிடும்” என்பதை நினைத்துப்பாருங்கள். எனவே, “தேவனின் விருப்பம் இருந்தால் நாம் வாழ்வோம். இதை அல்லது அதைச் செய்வோம்” என்று எண்ணுங்கள். ஆனால், இப்போது நீங்கள் செய்யத் திட்டமிட்டிருக்கிற பெரிய காரியங்கள் எல்லாவற்றைப்பற்றியும் பெருமை பாராட்டிக்கொள்கிறீர்கள். அது தவறாகும். எனவே இப்போது கவனம் செலுத்துங்கள். ஒருவனுக்கு நன்மை செய்யத் தெரிந்திருந்தும் அதைச் செய்யாமல் போனால், அவன் ஒரு பாவியாகிறான்.

யாக்கோபு 4:5-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா? அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய். நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும். இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது. ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்