யாக்கோபு 3:5-18
யாக்கோபு 3:5-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதேபோலவே, நாவும் உடலின் ஒரு சிறு அங்கமாயிருக்கிறது; ஆனால் அது பெரும் அளவில் பெருமை பேசுகிறது. ஒரு சிறு நெருப்புப் பொறி எவ்வளவு பெரிய காட்டையும் எரித்துவிடுகிறது என்பதை எண்ணிப்பாருங்கள். நாவும் நெருப்பாக இருக்கிறது. நமது உடலின் அங்கங்களுக்குள்ளே, நாவு ஒரு தீமை நிறைந்த உலகம் என்றே சொல்லலாம். அது ஒருவனை முழுவதுமாகவே சீர்கெடுத்து, அவனுடைய வாழ்க்கை முழுவதையும் எரியும் நெருப்பாக்கி விடுகிறது. அதுவும் நரகத்தின் நெருப்பினால் மூட்டப்படுகிறது. எல்லா விதமான மிருகங்களும், பறவைகளும், ஊரும் பிராணிகளும், கடலில் வாழும் உயிரினங்களும் மனிதனால் அடக்கிக் கட்டுப்படுத்தப்படுகின்றன. அப்படிக் கட்டுப்படுத்தப்பட்டும் இருக்கின்றன. ஆனால் நாவையோ ஒருவனாலும் அடக்கிக் கட்டுப்படுத்த முடியாது. அது கட்டுக்கடங்காத கொடியது. மரணத்தை விளைவிக்கும் விஷம் நிறைந்ததாயிருக்கிறது. நாம் நாவினாலே நமது கர்த்தரையும், பிதாவையும் துதிக்கிறோம். அதே நாவினாலேயே இறைவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களைச் சபிக்கிறோம். ஒரே வாயிலிருந்து துதியும், சாபமும் வருகிறது. எனக்கு பிரியமானவர்களே, இவ்விதமாய் இருக்கக்கூடாதே. ஒரே ஊற்றிலிருந்து நல்ல தண்ணீரும் உப்புத் தண்ணீரும் சுரக்க முடியுமா? எனக்கு பிரியமானவர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சைக்கொடி அத்திப்பழங்களையும் விளைவிக்குமா? அதேபோல், உப்புத் தண்ணீர் ஊற்றிலிருந்து நல்ல தண்ணீர் வருவதுமில்லை. உங்களுக்குள்ளே ஞானம் உள்ளவன் யார்? அறிவுள்ளவன் யார்? அவன் தன்னுடைய நல்ல வாழ்க்கையினாலே அதைக் காண்பிக்கட்டும். ஞானத்திலிருந்து வரும் மனத்தாழ்மையினால் செயல்களைச் செய்து காண்பிக்கட்டும்; ஆனால், உங்களுடைய இருதயங்களிலே கசப்பான பொறாமையையும், சுயநல ஆசையையும் இருக்குமேயானால், அதைக்குறித்து பெருமைப்பட வேண்டாம், சத்தியத்திற்கு எதிராக பொய் பேசவேண்டாம். அப்படிப்பட்ட ஞானம் பரலோகத்திலிருந்து வரும் ஒன்றல்ல; இது உலக ஞானம். இது ஆவிக்குரிய தன்மையற்றது. இது பிசாசினிடத்திலிருந்து வருகிறது. ஏனெனில் எங்கே பொறாமையும் சுயநல ஆசையும் இருக்கின்றதோ, அங்கே ஒழுங்கீனமும் எல்லாவிதத் தீயசெயல்களும் இருக்கின்றன. ஆனால் பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ, முதலாவது தூய்மை உடையதாய் இருக்கிறது; அது சமாதானத்தை விரும்புகிறதும், தயவுடையதும், பணிவுடையதும், இரக்கம் நிறைந்ததும், நல்ல கனியினால் நிறைந்ததுமாய் இருக்கிறது; அது பாரபட்சமும் போலித்தன்மையற்றதுமாய் இருக்கிறது. சமாதானத்தை உண்டுபண்ணுகிறவர்கள் சமாதானத்தின் விதையை விதைத்து, நீதியை அறுவடை செய்கிறார்கள்.
யாக்கோபு 3:5-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்படியே, நாக்கானதும் சிறிய உறுப்பாக இருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது! நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது! எல்லாவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நீரில்வாழும் உயிரினங்கள் ஆகிய இவைகள் மனிதர்களால் அடக்கப்படும், அடக்கப்பட்டதும் உண்டு. நாக்கை அடக்க ஒரு மனிதனாலும் முடியாது; அது அடங்காத பொல்லாங்கு உள்ளதும், மரணத்திற்கு ஏதுவான விஷம் நிறைந்ததுமாக இருக்கிறது. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனிதர்களை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரர்களே, இப்படி இருக்ககூடாது. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? என் சகோதரர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சைச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான தண்ணீரைக் கொடுக்காது. உங்களில் ஞானியும் விவேகியுமாக இருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடு தன் செயல்களை நல்ல நடக்கையினாலே காண்பிக்கவேண்டும். உங்களுடைய இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டவேண்டாம்; சத்தியத்திற்கு விரோதமாகப் பொய் சொல்லாமலிருங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாக இல்லாமல், உலக சம்பந்தமானதும், ஜென்ம சுபாவத்திற்குரியதாகவும், பேய்த்தனத்திற்குரியதுமாகவும் இருக்கிறது. வைராக்கியமும், விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் எல்லாத் தீயச்செய்கைகளுமுண்டு. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாகவும், பின்பு சமாதானமும் சாந்தமும், அன்புமிக்கதாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாகவும், பட்சபாதமில்லாததாகவும், மாயமில்லாததாகவும் இருக்கிறது. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.
யாக்கோபு 3:5-18 பரிசுத்த பைபிள் (TAERV)
நமது நாக்கும் அப்படித்தான். அது சரீரத்தின் ஒரு சிறிய உறுப்பு. ஆனால் அது பெரிய காரியங்களைச் செய்வதைப்பற்றிப் பெருமை பேசுகிறது. மேலும் சிறிய ஒரு நெருப்புப் பொறி எப்படி ஒரு முழுக் காட்டையே எரித்துவிட முடியும் என்பதைப் பற்றி எண்ணுங்கள். மேலும் நாக்கு உண்மையில் நெருப்புப் பொறியாக இருக்கிறது. நம் சரீர உறுப்புகளின் நடுவில் தீமைகளை மூட்டிவிடுகிறது. நாக்கு தன் தீமையை சரீரம் முழுக்கப் பரப்பி நம் முழு வாழ்வையும் சிக்கலாக்கி வைக்கிறது. நரகத்திலுள்ள நெருப்பால் நாக்கு கொழுத்தப்படுகிறது. மக்கள் எல்லாவகையான மிருகங்கள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன ஆகியவற்றையெல்லாம் அடக்கும் வலிமை பெற்றவர்கள். ஆனால் நாவானது அடங்காததும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாக இருக்கிறது. அந்த நாவால் தான் நம் பிதாவாகிய கர்த்தரைத் துதிக்கிறோம். அவர் சாயலில் உருவாக்கப்பட்ட மனிதர்களையும் பழிக்கிறோம். துதித்தலும் பழித்தலும் ஒரே வாயில் இருந்துதான் வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, அப்படி நடக்கக் கூடாது. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து இனிப்பும், கசப்புமான நீர் சுரக்க முடியாது. என் சகோதர சகோதரிகளே, அத்திமரம் ஒலிவப் பழங்களையும், திராட்சைச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அவ்வாறே உவர்ப்பான நீரூற்று இனிப்பான நீரைக் கொடுக்காது. உங்களில் ஞானமும், விவேகமும் பொருந்திய ஒருவன் இருந்தால் தன் நன்னடத்தையின் மூலம் பணிவோடு நற்காரியங்களைச் செய்து அதை அவன் புலப்படுத்தட்டும். உங்கள் இதயத்தில் கசப்பான பொறாமையும் சுயநலமும் இருந்தால், உங்கள் ஞானத்தைப்பற்றி நீங்கள் பெருமைப்பட முடியாது. அப்பெருமைப் பாராட்டுதல் உண்மையை மறைக்கிற ஒரு பொய்யாகவே இருக்கும். அவ்வித ஞானம் சொர்க்கத்தில் இருந்து வருவதில்லை. சுயநல வேட்கைகளிலிருந்தும், பேய்த்தனத்திலிருந்தும் உருவாகும் இந்த உலகத்திலிருந்து அது வருகிறது. எங்கே பொறாமையும், சுயநலமும் உள்ளதோ அங்கே குழப்பமும் எல்லா வகைப் பாவங்களும் இருக்கும். ஆனால் மேலிருந்து வருகிற ஞானம் முதலாவதாகத் தூய்மையாக இருக்கிறது. பிறகு சமாதானமாகவும், இணக்கமுள்ளதாகவும், எளிதில் மகிழ்ச்சிப்படுத்த முடிந்ததாகவும், கருணை நிறைந்ததாகவும் பல நற்செயல்களை உருவாக்குவதாகவும் இருக்கிறது. பாரபட்சமற்றதாகவும் போலித்தன்மையற்றதாகவும் கூட இருக்கிறது. சமாதானமான வழியிலே சமாதானத்துக்காக உழைக்கிற மக்கள் நீதியாகிய வாழ்வின் பலனைப் பெறுகின்றார்கள்.
யாக்கோபு 3:5-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது! நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நீர்வாழும் ஜெந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு. நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்று தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது. உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது. வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.