யாக்கோபு 3:13-18

யாக்கோபு 3:13-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது. வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.

யாக்கோபு 3:13-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உங்களுக்குள்ளே ஞானம் உள்ளவன் யார்? அறிவுள்ளவன் யார்? அவன் தன்னுடைய நல்ல வாழ்க்கையினாலே அதைக் காண்பிக்கட்டும். ஞானத்திலிருந்து வரும் மனத்தாழ்மையினால் செயல்களைச் செய்து காண்பிக்கட்டும்; ஆனால், உங்களுடைய இருதயங்களிலே கசப்பான பொறாமையையும், சுயநல ஆசையையும் இருக்குமேயானால், அதைக்குறித்து பெருமைப்பட வேண்டாம், சத்தியத்திற்கு எதிராக பொய் பேசவேண்டாம். அப்படிப்பட்ட ஞானம் பரலோகத்திலிருந்து வரும் ஒன்றல்ல; இது உலக ஞானம். இது ஆவிக்குரிய தன்மையற்றது. இது பிசாசினிடத்திலிருந்து வருகிறது. ஏனெனில் எங்கே பொறாமையும் சுயநல ஆசையும் இருக்கின்றதோ, அங்கே ஒழுங்கீனமும் எல்லாவிதத் தீயசெயல்களும் இருக்கின்றன. ஆனால் பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ, முதலாவது தூய்மை உடையதாய் இருக்கிறது; அது சமாதானத்தை விரும்புகிறதும், தயவுடையதும், பணிவுடையதும், இரக்கம் நிறைந்ததும், நல்ல கனியினால் நிறைந்ததுமாய் இருக்கிறது; அது பாரபட்சமும் போலித்தன்மையற்றதுமாய் இருக்கிறது. சமாதானத்தை உண்டுபண்ணுகிறவர்கள் சமாதானத்தின் விதையை விதைத்து, நீதியை அறுவடை செய்கிறார்கள்.

யாக்கோபு 3:13-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உங்களில் ஞானியும் விவேகியுமாக இருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடு தன் செயல்களை நல்ல நடக்கையினாலே காண்பிக்கவேண்டும். உங்களுடைய இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டவேண்டாம்; சத்தியத்திற்கு விரோதமாகப் பொய் சொல்லாமலிருங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாக இல்லாமல், உலக சம்பந்தமானதும், ஜென்ம சுபாவத்திற்குரியதாகவும், பேய்த்தனத்திற்குரியதுமாகவும் இருக்கிறது. வைராக்கியமும், விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் எல்லாத் தீயச்செய்கைகளுமுண்டு. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாகவும், பின்பு சமாதானமும் சாந்தமும், அன்புமிக்கதாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாகவும், பட்சபாதமில்லாததாகவும், மாயமில்லாததாகவும் இருக்கிறது. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.

யாக்கோபு 3:13-18 பரிசுத்த பைபிள் (TAERV)

உங்களில் ஞானமும், விவேகமும் பொருந்திய ஒருவன் இருந்தால் தன் நன்னடத்தையின் மூலம் பணிவோடு நற்காரியங்களைச் செய்து அதை அவன் புலப்படுத்தட்டும். உங்கள் இதயத்தில் கசப்பான பொறாமையும் சுயநலமும் இருந்தால், உங்கள் ஞானத்தைப்பற்றி நீங்கள் பெருமைப்பட முடியாது. அப்பெருமைப் பாராட்டுதல் உண்மையை மறைக்கிற ஒரு பொய்யாகவே இருக்கும். அவ்வித ஞானம் சொர்க்கத்தில் இருந்து வருவதில்லை. சுயநல வேட்கைகளிலிருந்தும், பேய்த்தனத்திலிருந்தும் உருவாகும் இந்த உலகத்திலிருந்து அது வருகிறது. எங்கே பொறாமையும், சுயநலமும் உள்ளதோ அங்கே குழப்பமும் எல்லா வகைப் பாவங்களும் இருக்கும். ஆனால் மேலிருந்து வருகிற ஞானம் முதலாவதாகத் தூய்மையாக இருக்கிறது. பிறகு சமாதானமாகவும், இணக்கமுள்ளதாகவும், எளிதில் மகிழ்ச்சிப்படுத்த முடிந்ததாகவும், கருணை நிறைந்ததாகவும் பல நற்செயல்களை உருவாக்குவதாகவும் இருக்கிறது. பாரபட்சமற்றதாகவும் போலித்தன்மையற்றதாகவும் கூட இருக்கிறது. சமாதானமான வழியிலே சமாதானத்துக்காக உழைக்கிற மக்கள் நீதியாகிய வாழ்வின் பலனைப் பெறுகின்றார்கள்.

யாக்கோபு 3:13-18

யாக்கோபு 3:13-18 TAOVBSIயாக்கோபு 3:13-18 TAOVBSIயாக்கோபு 3:13-18 TAOVBSI