ஏசாயா 9:1-7

ஏசாயா 9:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆயினும் முன்பு துயரப்பட்டவர்களுக்கு இனிமேல் பயங்கரம் இராது. முந்தின நாட்களில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் அவர் தாழ்த்தினார். ஆனால், வருங்காலத்திலே மத்திய தரைக்கடலிலிருந்து, யோர்தான் அருகேயுள்ள, பிறநாட்டினர் வாழும் கலிலேயாவை மேன்மைப்படுத்துவார். இருளில் நடக்கும் மக்கள் ஒரு பேரொளியைக் கண்டார்கள்; மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. நீர் நாட்டைப் பெருகச்செய்து அவர்களுக்கு மகிழ்ச்சியையும் அதிகமாய் கொடுத்திருக்கிறீர். அறுவடையின்போது மக்கள் மகிழ்வதைப்போல, அவர்கள் உமது முன்னிலையில் மகிழ்கிறார்கள். கொள்ளையைப் பங்கிடும்போதும் மனிதர் மகிழ்வதுபோல, அவர்கள் மகிழ்கிறார்கள். மீதியானியர் தோற்கடிக்கப்பட்ட நாளில் செய்ததுபோல, நீர் அவர்களுக்குப் பாரமாயிருந்த நுகத்தை உடைத்துப்போட்டீர். அவர்களுடைய தோள்களின் அழுத்திய பாரத்தையும், அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலையும் அகற்றிப்போட்டீர். ஒவ்வொரு வீரரும் போரில் பயன்படுத்திய காலணியும், இரத்தத்தில் தோய்ந்த உடைகள் அனைத்தும் நெருப்புக்கு இரையாக சுட்டெரிக்கப்படும். ஏனெனில், “நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளார், நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டார், அரசாட்சி அவர் தோளின்மேல் இருக்கும். அவர் அதிசயமான ஆலோசகர், வல்லமையுள்ள இறைவன், நித்திய தகப்பன், சமாதானப்பிரபு” என அழைக்கப்படுவார். அவருடைய ஆட்சியின் பெருக்கத்திற்கும் சமாதானத்திற்கும் முடிவே இராது. அவர் தாவீதின் சிங்காசனத்தையும் அவனது அரசையும் நிலைநாட்டுவார். இதுமுதற்கொண்டு அதை என்றென்றைக்கும் நீதியோடும் நேர்மையோடும் நிலைநிறுத்தி உறுதிப்படுத்துவார். எல்லாம் வல்ல யெகோவாவினுடைய வைராக்கியம் இதை நிறைவேற்றும்.

ஏசாயா 9:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாக துன்பப்படுத்தின ஆரம்ப காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் மத்திய தரைக் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள அந்நியமக்களுடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார். இருளில் நடக்கிற மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. அந்த மக்களைப் பெருகச்செய்து, அதற்கு மகிழ்ச்சியையும் பெருகச்செய்தீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளும்போது களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள். மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்களுடைய தோளின்மேலிருந்த மரத்துண்டையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர். தீவிரமாகப் போர்செய்கிற வீரர்களுடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்டஆடைகள் நெருப்பிற்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும். நமக்காக ஒரு குழந்தை பிறந்தது; நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் பெயர் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய அரசாட்சியையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்துவதற்காக அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்திற்கும், அதின் சமாதானத்திற்கும் முடிவில்லை; சேனைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

ஏசாயா 9:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

கடந்த காலத்தில், ஜனங்கள் செபுலோன் நாட்டையும் நப்தலி நாட்டையும் முக்கியமானதாகக் கருதவில்லை. ஆனால் பிற்காலத்தில், அந்த நாட்டை தேவன் மேம்படுத்துவார். அது கடலுக்கு அருகில் உள்ள நாடும், யோர்தான் நதிக்கு அப்புறத்திலுள்ள நாடும், யூதரல்லாதவர்கள் வாழும் கலிலேயா நாடும் சேர்ந்ததாகும். இப்போது இருளில் வாழ்கின்றனர். அவர்கள் பெரும் வெளிச்சத்தைப் பார்ப்பார்கள். அவர்கள் ஓரிடத்தில் வாழ்கின்றனர். அது மரண இருளைபோன்ற இடம். ஆனால் அவர்கள் மேல் பெரிய வெளிச்சம் உதிக்கும். தேவனே, நாட்டை வளரும்படிச் செய்ய வேண்டும். ஜனங்களை நீர் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். ஜனங்கள் தம் மகிழ்ச்சியை உம்மிடம் காட்டுவார்கள். அது அறுவடை காலத்தின் மகிழ்ச்சியைப்போன்று இருக்கும். போரில் வென்று ஜனங்கள் தம் பங்கைப் பகிர்ந்துகொள்ளும்போதுள்ள மகிழ்ச்சியைப்போன்று அது இருக்கும். ஏனென்றால், நீர் அவர்களின் மிகுந்த பாரத்தை நீக்குவீர். ஜனங்களின் முதுகில் இருக்கும் பெரிய நுகத்தடியை நீக்குவீர். உமது ஜனங்களைப் பகைவர்கள் தண்டிக்கப் பயன்படுத்திய கோலையும் விலக்கி விடுவீர். இது நீங்கள் மீதியானியரைத் தோற்கடித்த காலத்தைப்போன்று இருக்கும். போர் செய்வதற்காக நடந்து சென்ற ஒவ்வொரு காலணியும் அழிக்கப்படும். இரத்தம் தோய்ந்த ஒவ்வொரு சீருடையும் அழிக்கப்படும். அவை நெருப்பிலே வீசப்படும். விசேஷித்த குமாரன் பிறக்கும்போது இவைகளெல்லாம் நடைபெறும். தேவன் நமக்கு ஒரு குமாரனைக் கொடுப்பார். இவரே ஜனங்களை வழிநடத்திச் செல்லும் பொறுப்புள்ளவராக இருப்பார். அவரது நாமமானது “ஆலோசகர், வல்லமை மிக்க தேவன், நித்திய பிதா, அதிசயமுள்ளவர், சமாதானத்தின் இளவரசர்” என்று இருக்கும். அவரது அரசாங்கத்தில் பலமும் சமாதானமும் இருக்கும். தாவீதின் குடும்பத்திலிருந்து வரும் இந்த ராஜா நன்மையையும் நீதியையும் பயன்படுத்தி தமது அரசாங்கத்தை என்றென்றைக்கும் ஆண்டு வருவார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தம் ஜனங்களிடம் ஆழ்ந்த அன்பு கொண்டவர். அந்தப் பலமான அன்பு இவற்றையெல்லாம் செய்யக் காரணமாய் இருக்கின்றது.

ஏசாயா 9:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார். இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக் கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள். மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர். அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும். நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

ஏசாயா 9:1-7

ஏசாயா 9:1-7 TAOVBSI