ஏசாயா 7:10-17

ஏசாயா 7:10-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மீண்டும் யெகோவா ஆகாஸிடம் பேசி, “இறைவனாகிய உன் யெகோவாவிடம் கடலின் ஆழத்திலிருந்தோ, உன்னதத்தின் உயரத்திலிருந்தோ அடையாளம் ஒன்றைக் கேள்” என்றார். ஆனால் ஆகாஸோ, “நான் கேட்கமாட்டேன், யெகோவாவை நான் பரீட்சை செய்யமாட்டேன்” என்றான். அப்பொழுது ஏசாயா, “தாவீதின் குடும்பத்தாரே, இப்பொழுது கேளுங்கள்! மனிதனின் பொறுமையைச் சோதித்தது போதாதோ? என் இறைவனின் பொறுமையையும் சோதிக்கப் போகிறீர்களோ? ஆகவே யெகோவா தாமே உங்களுக்கு வருங்காலத்தின் அடையாளம் ஒன்றைக் கொடுப்பார்: ஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெறுவாள். அவரை இம்மானுயேல் என அழைப்பார்கள். தீயதைத் தவிர்த்து நல்லதைத் தெரிந்துகொள்ள அறிவு வரும்போது, அவர் தேனும் தயிரும் சாப்பிடுவார். அந்தப் பிள்ளைக்கு தீயதை விலக்கி, நல்லதைத் தெரிவுசெய்வதற்கு போதிய அறிவு வருமுன்னே, நீ பயப்படுகிற அந்த இரண்டு அரசர்களின் நாடு பாழாக்கிவிடப்படும். எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள் முதல் இதுவரை, நீங்கள் காணாத கொடிய காலத்தை, யெகோவா உங்கள்மேலும், உங்கள் மக்கள்மேலும், உங்கள் தகப்பனின் குடும்பத்தார்மேலும் வரப்பண்ணுவார்; அவர் அசீரிய அரசனை உனக்கெதிராக வரப்பண்ணுவார்.”

ஏசாயா 7:10-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்னும் யெகோவா ஆகாசை நோக்கி: நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், வானத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்; ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் யெகோவாவைப் பரீட்சை செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனிதர்களை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள். தீமையை வெறுக்கவும் நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறியும் வயதுவரை அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார். அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும். எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் யெகோவா உன்மேலும், உன் மக்களின்மேலும், உன் தகப்பனுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரச்செய்வார்.

ஏசாயா 7:10-17 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு கர்த்தர் தொடர்ந்து ஆகாசோடு பேசினார். கர்த்தர், “இவையெல்லாம் உண்மை என்று உங்களுக்கு நிரூபிக்க ஒரு அடையாளத்தைக் கேளுங்கள், நீங்கள் விரும்புகிற எந்த அடையாளத்தையும் நீங்கள் கேட்கலாம். அந்த அடையாளம் பாதாளம் போன்ற ஆழமான இடத்தில் இருந்தும் வரலாம், அல்லது அந்த அடையாளம் வானம் போன்ற உயரமான இடத்திலிருந்தும் வரலாம்” என்றார். ஆனால் ஆகாஸ், “அதை நிரூபிக்க நான் அடையாளத்தைக் கேட்கமாட்டேன். நான் கர்த்தரைச் சோதிக்கமாட்டேன்” என்றான். பிறகு ஏசாயா, “தாவீதின் குடும்பமே, கவனமாகக் கேளுங்கள்! நீங்கள் ஜனங்கள் பொறுமையைச் சோதிக்கிறீர்கள். அது உங்களுக்கு முக்கியமாகப்படவில்லை. எனவே இப்பொழுது என் தேவனுடைய பொறுமையைச் சோதிக்கிறீர்கள். ஆனால் எனது தேவனாகிய ஆண்டவர் உனக்கு ஒரு அடையாளம் காட்டுவார். “இந்த இளம் கன்னிப் பெண்ணைப் பாரும். இவள் கர்ப்பமாக இருக்கிறாள். இவள் ஒரு குமாரனைப் பெறுவாள் அவள் அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள். இம்மானுவேல் வெண்ணெயையும் தேனையும் தின்பார், அவர் இவ்வாறு வாழ்வார், நல்லவற்றை எவ்வாறு செய்வது என்றும் பாவத்தை எவ்வாறு செய்யாமல் விடுவது என்றும் வாழ்ந்துக்காட்டுவார். ஆனால் அக்குழந்தை நன்மை தெரிந்து தீமையை வெறுக்க கற்றுக்கொள்ளும் வயது வரும் முன்னால், எப்பிராயீம் (இஸ்ரவேல்) மற்றும் ஆராம் நாடு காலியாகிவிடும். நீ இப்பொழுது அந்த இரண்டு நாட்டு ராஜாக்கள் பற்றியும் பயப்படுகிறாய். “ஆனால் நீ கர்த்தருக்குப் பயப்படவேண்டும். ஏனென்றால், கர்த்தர் உனக்கு துன்பக் காலங்களைக் கொண்டுவருவார். அத்துன்பங்கள் உனது ஜனங்களுக்கும் உன் தந்தையின் குடும்பத்து ஜனங்களுக்கும் ஏற்படும். தேவன் என்ன செய்வார்? தேவன் அசீரியாவின் ராஜாவை உனக்கு எதிராகப்போரிட அழைத்து வருவார்.

ஏசாயா 7:10-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னும் கர்த்தர் ஆகாசை நோக்கி: நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார். ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார். அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும். எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார்.