ஏசாயா 65:17-25

ஏசாயா 65:17-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“இதோ நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் உண்டாக்குவேன். முந்தியவைகள் நினைக்கப்படுவதுமில்லை, மனதில் தோன்றுவதுமில்லை. நான் உண்டாக்கப்போகிறதில் நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூருங்கள். ஏனெனில், எருசலேமை அது மகிழ்ச்சிக்குரியதாகவும், அதன் மக்களை சந்தோஷமாகவும் படைப்பேன். நானும் எருசலேமில் மகிழ்ந்து, எனது மக்களில் பெருமகிழ்ச்சியடைவேன்; அங்கு புலம்பலின் குரலும், அழுகையின் சத்தமும் இனி ஒருபோதும் கேட்பதில்லை. “ஒருசில நாட்கள் மட்டும் வாழும் குழந்தையோ, தனக்குரிய காலம்வரை வாழாத முதியவனோ ஒருபோதும் அங்கு இருக்கமாட்டார்கள். நூறு வயதில் இறக்கிறவன் வாலிபன் என்று எண்ணப்படுவான்; பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சபிக்கப்பட்டவன் என்று கருதப்படுவான். அவர்கள் வீடுகள் கட்டி அவைகளில் குடியிருப்பார்கள்; அவர்கள் திராட்சைத் தோட்டங்களையும் உண்டாக்கி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள். அவர்கள் கட்டும் வீடுகளில் இனிமேல் வேறெவரும் வாழமாட்டார்கள், அவர்கள் நடுகிறவைகளில் வேறொருவரும் சாப்பிடவுமாட்டார்கள். ஏனெனில் ஒரு மரத்தின் காலத்தைப்போலவே எனது மக்களின் வாழ்நாட்களும் இருக்கும். நான் தெரிந்துகொண்ட மக்களும் தங்கள் கைகளின் பலனில் நெடுநாளாய் மகிழ்ச்சிகொள்வார்கள். அவர்கள் வீணாக முயற்சி செய்யமாட்டார்கள், அவர்கள் அவலத்துக்குரிய பிள்ளைகளைப் பெறவுமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களாயிருப்பார்கள்; அவர்களுடன் அவர்களின் சந்ததிகளும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் கூப்பிடுமுன்னே நான் பதிலளிப்பேன்; அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் கேட்பேன். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்றுகூடி மேயும், சிங்கமும் எருதைப்போல் வைக்கோல் தின்னும், பாம்போ புழுதியைத் தின்னும். எனது பரிசுத்த மலையெங்கும் அவை ஒரு தீங்கையோ, அழிவையோ செய்யமாட்டாது” என்று யெகோவா சொல்கிறார்.

ஏசாயா 65:17-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் படைக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் மக்களை மகிழ்ச்சியாகவும் படைக்கிறேன். நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் மக்களின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை. அங்கே இனி குறைந்த ஆயுள் உள்ள சிறுவனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் இருக்கமாட்டார்கள்; நூறு வயதுசென்று மரணமடைகிறவனும் வாலிபனென்று கருதப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான். வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சைத்தோட்டங்களை ஏற்படுத்தி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் பழங்களைச் சாப்பிடுகிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் மரத்தின் நாட்களைப்போல என் மக்களின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நீண்டநாட்கள் அனுபவிப்பார்கள். அவர்கள் வீணாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதுமில்லை; அவர்களும், அவர்களுடன்கூட அவர்களுடைய வாரிசும் யெகோவாவாலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள். அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுமொழி கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன். ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி பாம்பிற்கு இரையாகும்; என் பரிசுத்த மலையெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடு உண்டாக்குவதுமில்லையென்று யெகோவா சொல்கிறார்.

ஏசாயா 65:17-25 பரிசுத்த பைபிள் (TAERV)

“நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைப்பேன். ஜனங்கள் கடந்த காலத்தை நினைக்கமாட்டார்கள். அவற்றில் எதையும் அவர்கள் நினைக்கமாட்டார்கள். எனது ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்கள் என்றும் என்றென்றும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். நான் என்ன செய்யப்போகிறேன்? நான் மகிழ்ச்சி நிறைந்த ஒரு எருசலேமை உருவாக்குவேன். அவர்களை மகிழ்ச்சி நிறைந்த ஜனங்கள் ஆக்குவேன். “பிறகு, நான் எருசலேமோடு மகிழ்ச்சியாக இருப்பேன். நான் என் ஜனங்களோடு மகிழ்ச்சியாக இருப்பேன். அந்த நகரத்தில் மீண்டும் அழுகையும் துக்கமும் இராது. இனி ஒருபோதும் ஒரு குழந்தை பிறந்தவுடன் மரிக்காது. இனி நகரத்தில் எவரும் குறுகிய வாழ்வுடன் மரிக்கமாட்டார்கள். ஒவ்வொரு குழந்தையும் நீண்ட காலம் வாழும். ஒவ்வொரு வயோதிகனும் நீண்ட காலம் வாழ்வான். 100 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவன் இளைஞன் என்று அழைக்கப்படுவான். பாவம் செய்தவன் 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்வு முழுவதும் துன்பத்தை அடைவான். “அந்த நகரத்தில், ஒருவன் வீடுகட்டினால் அவன் அங்கே வாழ்வான். ஒருவன் திராட்சைத் தோட்டத்தை வைத்தால், அவன் அந்தத் தோட்டத்திலிருந்து திராட்சைகளை உண்பான். மீண்டும் ஒருவன் வீடுகட்ட இன்னொருவன் அதில் குடியேறமாட்டான். மீண்டும் ஒருவன் திராட்சைத் தோட்டத்தை அமைக்க இன்னொருவன் பழம் உண்ணமாட்டான். எனது ஜனங்கள் மரங்கள் வாழும்மட்டும் வாழ்வார்கள். நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தாங்கள் செய்தவற்றை அனுபவித்து மகிழ்வார்கள். பெறும் குழந்தை மரித்துப்போவதற்காக இனிமேல் பெண்கள் பிரசவிக்கமாட்டார்கள். பிரசவத்தின்போது என்ன ஆகுமோ என்று பெண்கள் இனிமேல் பயப்படமாட்டார்கள். எனது அனைத்து ஜனங்களும் அவர்களது பிள்ளைகளும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். அவர்கள் கேட்பதற்கு முன்பே அவர்களுக்கு என்ன தேவை என்று நான் அறிவேன். அவர்கள் கேட்டு முடிப்பதற்குள்ளாக நான் அவர்களுக்கு உதவுவேன். ஓநாயும் ஆட்டுக் குட்டிகளும் சேர்ந்து புல்மேயும். சிங்கங்கள் மாடுகளோடு சேர்ந்து வைக்கோலை உண்ணும். எனது பரிசுத்தமான மலையில் தரையில் உள்ள பாம்பு யாரையும் பயப்படுத்தாது. அது எவரையும் தீண்டாது” கர்த்தர் இவை அனைத்தையும் கூறினார்.

ஏசாயா 65:17-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன். நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை. அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான். வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள். அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன். ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்