ஏசாயா 60:1-11
ஏசாயா 60:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“எழும்பிப் பிரகாசி, ஏனெனில் உன் ஒளி வந்துவிட்டது, யெகோவாவின் மகிமை உன்மேல் உதிக்கிறது. இதோ, பூமியை இருள் மூடியிருக்கிறது, காரிருள் மக்கள் கூட்டங்களைச் சூழ்ந்திருக்கிறது. ஆனால் யெகோவா உன்மேல் உதிக்கிறார், அவரின் மகிமை உன்மேல் தோன்றுகிறது. பிறநாடுகள் உன் வெளிச்சத்திற்கும், அரசர்கள் உன்மேல் வரும் விடியற்காலையின் பிரகாசத்திற்கும் வருவார்கள். “உன் கண்களை உயர்த்தி சுற்றிலும் பார்; யாவரும் ஒன்றுகூடி உன்னிடம் வருகிறார்கள்; உன் மகன்கள் தொலைவிலிருந்து வருகிறார்கள், உன் மகள்கள் தோளில் சுமந்துகொண்டு வரப்படுகிறார்கள். அப்பொழுது நீ பார்த்து முகமலர்ச்சி அடைவாய்; உன் இருதயம் மகிழ்ந்து பூரிப்படையும்; கடல்களின் திரவியம் உனக்குக் கொண்டுவரப்படும்; நாடுகளின் செல்வமும் உன்னிடம் சேரும். ஒட்டகக் கூட்டம் நாட்டை நிரப்பும், மீதியா, ஏப்பாத் நாடுகளின் இளம் ஒட்டகங்கள் உன்னிடம் வரும். சேபாவிலிருந்து வரும் அனைவரும் தங்கமும் நறுமண தூபமும் கொண்டுவந்து, யெகோவாவின் புகழை அறிவிக்க வருவார்கள். கேதாரின் மந்தைகள் எல்லாம் உன்னிடம் சேர்க்கப்படும், நெபாயோத்தின் கடாக்கள் உனக்குப் பணிபுரியும்; அவை என் பலிபீடத்தில் பலிகளாக ஏற்றுக்கொள்ளப்படும், நான் என் மகிமையான ஆலயத்தை அலங்கரிப்பேன். “மேகங்களைப் போலவும், தம் கூட்டுக்குப் பறந்தோடும் புறாக்களைப்போலவும் பறக்கும் இவர்கள் யார்? தீவுகள் எனக்குக் காத்திருக்கின்றன; தர்ஷீசின் கப்பல்கள் முன்னணியில் வருகின்றன. தொலைவிலுள்ள உங்கள் மகன்களை அவர்களுடைய வெள்ளியோடும் தங்கத்தோடும் கொண்டுவருகின்றன. இஸ்ரயேலின் பரிசுத்தரும் உன் இறைவனுமாகிய யெகோவாவை கனம் பண்ணுவதற்காக இவை வருகின்றன. ஏனெனில் அவர் உன்னைச் சிறப்பால் அலங்கரித்திருக்கிறார். “அந்நியர் உன் மதில்களை மீண்டும் கட்டியெழுப்புவார்கள், அவர்களுடைய அரசர்கள் உனக்குப் பணிசெய்வார்கள். என் கோபத்தினால் நான் உன்னை அடித்தபோதிலும், தயவுடன் நான் உனக்குக் கருணை காட்டுவேன். உங்கள் வாசல்கள் எப்பொழுதும் திறந்தே இருக்கும், பகலோ இரவோ, அவை ஒருபோதும் மூடப்படுவதில்லை; நாடுகளின் செல்வத்தை மனிதர் கொண்டுவருகையில், அவைகளோடு அரசர்களை வெற்றிப் பவனியுடன் நடத்தி வருவதற்காகவே இவ்வாறு திறந்திருக்கும்.
ஏசாயா 60:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, யெகோவாவுடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் மக்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் யெகோவா உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். உன் வெளிச்சத்தினிடத்திற்கு தேசங்களும், உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள். சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லோரும் ஒன்றாகக்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் மகன்கள் தூரத்திலிருந்து வந்து, உன் மகள்கள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள். அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் பக்கமாகத் திரும்பும், தேசங்களின் பலத்த படை உன்னிடத்திற்கு வரும். ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான், ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் அனைவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, யெகோவாவின் துதிகளைப் பிரபலப்படுத்துவார்கள். கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கீகரிக்கப்பட்டதாக என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன். மேகத்தைப்போலவும், தங்கள் பலகணித்துவாரங்களுக்கு வேகமாகவருகிற புறாக்களைப்போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்? தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களுடன் அவர்கள் பொன்னையும், அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய யெகோவாவின் நாமத்துக்கென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும், தூரத்திலிருந்துகொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கனவே எனக்குக் காத்திருக்கும். அந்நியமக்கள் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு மனமிரங்கினேன். உன்னிடத்திற்கு தேசங்களின் பலத்த படையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும், உன் வாசல்கள் இரவும் பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.
ஏசாயா 60:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)
“எருசலேமே! என் வெளிச்சமே! எழு! உனது வெளிச்சம் (தேவன்) வந்துகொண்டிருக்கிறது. கர்த்தருடைய மகிமை உன் மேல் ஒளிவீசும். இப்போது பூமியை இருள் மூடியிருக்கிறது. ஜனங்கள் இருளில் உள்ளனர். ஆனால் கர்த்தர் உன்மேல் ஒளிவீசுகிறார். அவரது மகிமை உன்மேல் தோற்றம் தரும். தேசங்கள், உனது வெளிச்சத்திடம் (தேவன்) வரும். ராஜாக்கள், உனது பிரகாசமான வெளிச்சத்திடம் வருவார்கள். உன்னைச் சுற்றிப் பார்! ஜனங்கள் ஒன்றுகூடி உன்னிடம் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் உனது குமாரர்கள், வெகு தொலைவிலிருந்து வருகிறார்கள். உனது குமாரத்திகளும் அவர்களோடு வருகிறார்கள். “இது எதிர்காலத்தில் நடைபெறும். அப்போது, நீ உனது ஜனங்களைக் காண்பாய். உனது முகம் மகிழ்ச்சியுடன் பிரகாசிக்கும். முதலில் நீ பயப்படுவாய்! ஆனால் பிறகு நீ கிளர்ச்சியடைவாய். கடல்களைத் தாண்டி வரும் ஜனங்களின் கூட்டம் உன் முன் இருக்கும். பலநாட்டு ஜனங்களும் உன்னிடம் வருவார்கள். மீதியான் ஏப்பாத் நாடுகளில் உள்ள ஒட்டகக் கூட்டங்கள் உனது நாட்டைக் கடக்கும். சேபாவிலிருந்து நீள வரிசையாக ஒட்டகங்கள் வரும். அவர்கள் பொன்னையும் நறுமணப் பொருட்களையும் கொண்டுவருவார்கள். ஜனங்கள் கர்த்தரைத் துதித்துப் பாடுவார்கள். கேதாரிலுள்ள அனைத்து ஆடுகளையும் சேகரித்து ஜனங்கள் உன்னிடம் தருவார்கள். நெபாயோத்திலிருந்து அவர்கள் ஆட்டுக் கடாக்களைக் கொண்டுவருவார்கள். எனது பலிபீடத்தில் அந்த மிருகங்களை நீங்கள் பலியிடுவீர்கள். நான் அவற்றை ஏற்றுக்கொள்வேன். எனது அற்புதமான ஆலயத்தை மேலும் நான் அழகுபடுத்துவேன். ஜனங்களைப் பாருங்கள்! மேகங்கள் விரைவாக வானத்தைக் கடப்பதுபோன்று அவர்கள் உன்னிடம் விரைந்து வருகின்றனர். புறாக்கள் தம் கூடுகளுக்குப் பறந்து போவதுபோல் போகின்றனர். எனக்காகத் தொலைதூர நாடுகள் எல்லாம் காத்திருக்கின்றன. பெரிய சரக்குக் கப்பல்களும் பயணத்திற்குத் தயாராக உள்ளன. அக்கப்பல்கள் தொலை தூர நாடுகளிலிருந்து, உனது பிள்ளைகளைக் கொண்டுவரத் தயாராக உள்ளன. அவர்கள் பொன்னையும், வெள்ளியையும் தங்களோடு எடுத்து வந்து உங்கள் தேவனாகிய கர்த்தரும், இஸ்ரவேலின் பரிசுத்தருமானவரை மகிமைப்படுத்துவார்கள். கர்த்தர் உனக்காக அற்புதச் செயல்களைச் செய்கிறார். மற்ற நாடுகளில் உள்ள பிள்ளைகள், உனது சுவர்களை மீண்டும் கட்டுவார்கள். அவர்களின் ராஜாக்கள் உனக்குச் சேவைசெய்வார்கள். “நான் கோபமாக இருந்தபோது, நான் உன்னைக் காயப்படுத்தினேன். ஆனால் இப்போது, நான் உன்னிடம் தயவாயிருக்க விரும்புகிறேன். எனவே உனக்கு நான் ஆறுதல் செய்வேன். உனது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். அவை, இரவு அல்லது பகல் எவ்வேளையிலும் மூடப்படாதவை. நாடுகளும் ராஜாக்களும் தங்கள் செல்வங்களை உனக்குக் கொண்டுவருவார்கள்.
ஏசாயா 60:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள். சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள். அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாகத் திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும். ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள். கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கிகரிக்கப்பட்டதாய் என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன். மேகத்தைப்போலவும், தங்கள் பலகணித்துவாரங்களுக்குத் தீவிரிக்கிற புறாக்களைப்போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்? தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களோடேகூட அவர்கள் பொன்னையும், அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய கர்த்தரின் நாமத்துக்கென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும், தூரத்திலிருந்துகொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கெனவே எனக்குக் காத்திருக்கும். அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன். உன்னிடத்துக்கு ஜாதிகளின் பலத்த சேனையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும், உன் வாசல்கள் இரவும் பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.