ஏசாயா 58:3-7

ஏசாயா 58:3-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

‘நாங்கள் உபவாசித்தோம், என்று அவர்கள் கேட்கிறார்கள். நீர் அதைக் காணவில்லையா? நாங்கள் ஏன் எங்களைத் தாழ்த்தினோம்; நீர் அதைக் கவனிக்கவில்லையா?’ “நீங்கள் உபவாசிக்கும் நாளில் நீங்கள் விரும்பியதையே செய்து, உங்கள் வேலைக்காரரையும் கடுமையாய் நடத்துகிறீர்கள். உங்கள் உபவாசம் வாக்குவாதத்திலும், சண்டையிலும், கொடுமையான கைகளினால் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வதிலுமே முடிகிறது. நீங்கள் இன்று உபவாசம் செய்வதுபோல் உபவாசித்தால், உங்கள் குரல் பரலோகத்திற்கு எட்டுமென எதிர்பார்க்க முடியாதே. இப்படியான உபவாசத்தையா நான் தெரிந்துகொண்டேன்? அது ஒருவன் தன்னைத் தாழ்த்திக்கொள்ளுவதற்கான நாள் மட்டுமோ? உபவாசம் என்பது துக்கவுடையில், சாம்பலில் கிடந்து நாணல் புல்லைப்போல் தலைகுனிவது மட்டுமா? இதையா யெகோவா ஏற்றுக்கொள்ளும் உபவாசம் என்றும் அவருக்கு ஏற்ற நாள் என்றும் சொல்கிறீர்கள். “நான் தெரிந்துகொண்ட உபவாசம் என்பது: அநீதியின் சங்கிலிகளைத் தளர்த்துவதும், நுகத்தின் கயிறுகளை அவிழ்ப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலையாக்குவதும், ஒவ்வொரு நுகத்தையும் உடைத்துப் போடுவதும் அல்லவோ? பசியுற்றோருடன் உங்கள் உணவைப் பகிர்ந்துகொள்வதும், வீடற்ற ஏழைகளுக்கு இருப்பிடம் கொடுப்பதும், உடையில்லாதவனைக் கண்டால் அவனுக்கு உடை கொடுப்பதும், உன் சொந்த உறவினர்களிடமிருந்து உன் முகத்தைத் திருப்பிக்கொள்ளாதிருப்பதும் அல்லவோ?

ஏசாயா 58:3-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நாங்கள் உபவாசிக்கும்போது நீர் கவனிக்காமல் இருக்கிறதென்ன? நாங்கள் எங்களுடைய ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் ஆசையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாகச் செய்கிறீர்கள். இதோ, வழக்குக்கும் தர்க்கத்திற்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்களுடைய கூக்குரலை உயரத்திலே கேட்கச்செய்வதற்காக, இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசிக்காதீர்கள். மனிதன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் சணல் ஆடையிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் யெகோவாவுக்குப் பிரியமான நாளென்றும் சொல்வாய்? அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணைப்புகளை தளர்த்துகிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் உணவைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்தப்பட்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்கிறதும், ஆடையில்லாதவனைக் கண்டால் அவனுக்கு ஆடை கொடுக்கிறதும், உன் உறவினனுக்கு உன்னை மறைக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்குப் பிரியமான உபவாசம்.

ஏசாயா 58:3-7 பரிசுத்த பைபிள் (TAERV)

இப்போது, அந்த ஜனங்கள், “உமக்கு மரியாதை செலுத்துவதற்காக நாங்கள் சாப்பிடுவதை நிறுத்துகிறோம். எங்களை ஏன் பார்க்கவில்லை? நாங்கள் உமக்கு மரியாதை செலுத்த எங்கள் உடலைக் காயப்படுத்துகிறோம். நீர் ஏன் எங்களைக் கண்டுகொள்ளவில்லை?” என்று கூறுகின்றனர். ஆனால் கர்த்தர் கூறுகிறார்: “நீங்கள் உங்களையே திருப்திப்படுத்திக்கொள்ள சிறப்பு நாட்களில் சாப்பிடாமல் இருக்கிறீர்கள். நீங்கள் சொந்த உடல்களை அல்ல, உங்கள் வேலைக்காரர்களையே தண்டிக்கிறீர்கள். நீங்கள் பசியோடு இருக்கிறீர்கள். ஆனால், உணவுக்காக அன்று. நீங்கள் வாதம் செய்யவும் சண்டை செய்யவும் பசியாய் இருக்கிறீர்கள், அப்பத்துக்காக அல்ல. உங்கள் தீய கைகளால் ஜனங்களை அடிக்கப் பசியாய் இருக்கிறீர்கள். நீங்கள் உணவு உண்டதை நிறுத்துவது, எனக்காக அல்ல. நீங்கள் உங்கள் குரலைப் பயன்படுத்தி என்னைத் துதிக்க விரும்புவதில்லை. அந்தச் சிறப்பான நாட்களில் சாப்பிடாமல் இருந்து ஜனங்கள் தம் உடலை வருத்திக் கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஜனங்கள் சோகமாகத் தோற்றமளிப்பதை விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா? ஜனங்கள் வாடிய செடிகளைப்போன்று தலை குனிந்து துக்கத்துக்கான ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா? ஜனங்கள் தம் துக்கத்தைக் காட்ட சாம்பலில் உட்கார்ந்திருப்பதை நான் விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா? இதையே உங்கள் சிறப்பான உபவாச நாட்களில் நீங்கள் செய்கிறீர்கள். கர்த்தர் இதைத்தான் விரும்புகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? “நான் விரும்புகின்ற சிறப்பான ஒரு நாளை உங்களுக்குச் சொல்வேன். ஜனங்களை விடுதலை பெறச்செய்யும் நாள். ஜனங்களின் சுமைகளை நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஒரு நாளை நான் விரும்புகிறேன். துன்பப்படுகிற ஜனங்களை நீங்கள் விடுதலை செய்யும் நாளை சிறப்பானதாக விரும்புகிறேன். அவர்களின் தோள்களிலிருந்து சுமையை எடுத்துவிடும் ஒரு நாளை நான் விரும்புகிறேன். நீங்கள் உங்கள் உணவை பசித்தவர்களோடு பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் வீடற்ற ஏழை ஜனங்களைக் கண்டுபிடித்து, அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதை நான் விரும்புகிறேன். ஆடையில்லாத ஒரு மனிதனை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் ஆடைகளை அவனுக்குக் கொடுங்கள். அவர்களுக்கு உதவாமல் ஒளிந்துகொள்ளாதீர்கள். அவர்கள் உங்களைப்போன்றவர்களே.”

ஏசாயா 58:3-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள். இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள். மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்? அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.