ஏசாயா 57:6-21

ஏசாயா 57:6-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

வெடிப்புகளின் வழுவழுப்பான கற்களின் இடையில் இருக்கும் விக்கிரங்களே உங்கள் பங்கு; அவை, அவைதான் உங்கள் பாகம். ஆம், அவைகளுக்கே நீங்கள் பானபலியை வார்த்து, தானியபலியையும் செலுத்தியிருக்கிறீர்கள். இவை வெளிப்படையாயிருக்க நான் உங்களுக்குக் கருணைகாட்ட வேண்டுமோ? நீ உயரமும், உன்னதமுமான குன்றின்மேல் உன் படுக்கையை விரித்தாய்; பலிகளைச் செலுத்துவதற்காக நீ மேலே போனாய். உனது கதவுகளுக்கும், உனது கதவு நிலைகளுக்கும் பின்னால் நீ உனது தெய்வச் சின்னங்களை வைத்தாய். என்னைக் கைவிட்டு உன் படுக்கையை விரித்தாய், அதிலேறி அதை அகலமாக்கினாய்; நீ எவர்களுடைய படுக்கையை விரும்பினாயோ அவர்களோடு ஒப்பந்தம் செய்தாய், நீ அவர்களுடைய நிர்வாணத்தைப் பார்த்தாய். நீ ஒலிவ எண்ணெயுடன் மோளேக் தெய்வத்திடம் போனாய்; நீ வாசனைத் தைலங்களை அதிகமாய்ப் பூசிக்கொண்டாய். நீ உனது தூதுவரை வெகுதூரத்திற்கு அனுப்பினாய்; அவர்களைப் பாதாளத்துக்குள்ளுங்கூட இறங்கப்பண்ணினாய்! உங்கள் எல்லா முயற்சிகளாலும் நீங்கள் களைத்துப்போனீர்கள், ஆயினும் நீங்கள், ‘அது பயனற்றது’ என்று சொல்லவில்லை. நீங்கள் கையில் புதிய பெலனை பெற்றபடியால் சோர்ந்துபோகவில்லை. “நீ யாருக்குப் பயந்து, நடுங்கி எனக்குப் பொய்யாய் நடந்தாய்? என்னை நினையாமலும் இதைப்பற்றி உன் இருதயத்தில் சிந்திக்காமலும் இருந்தாய்? நான் நெடுங்காலமாக அமைதியாய் இருந்தபடியினாலன்றோ நீ எனக்குப் பயப்படாது போனாய்? நான் உனது நீதியையும் உனது வேலைகளையும் உனது செயல்களையும் வெளிப்படுத்துவேன்; அவை உனக்கு உதவாது. நீ உதவிகேட்டு அழுகிறபோது, நீ சேகரித்த விக்கிரகங்கள் உன்னைக் காப்பாற்றட்டும்! காற்று அவைகளை அள்ளிக்கொண்டு போகுமே! வெறும் மூச்சே அவைகளை அடித்துக்கொண்டும். ஆனால் என்னை நம்பியிருக்கிறவர்களோ, நாட்டைத் தன் சொத்துரிமையாக்கி, எனது பரிசுத்த மலையையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.” அப்பொழுது: “கட்டுங்கள், கட்டுங்கள், வீதியை ஆயத்தம் பண்ணுங்கள்! எனது மக்களின் வழியிலுள்ள தடைகளை நீக்கிவிடுங்கள்” என்று சொல்லப்படும். உயர்ந்திருப்பவரும், உன்னதமானவரும், என்றென்றும் வாழ்பவருமான பரிசுத்தர் என்னும் பெயரையுடையவர் சொல்வதாவது: “இறைவனாகிய நான் உயரமான பரிசுத்த இடத்தில் வாழ்கிறேன். ஆனாலும் மனமுடைந்தவர்களுடனும், தாழ்மையான ஆவியுடையவர்களுடனும் இருக்கிறேன். ஆவியில் தாழ்மையுடையவர்களுக்குப் புத்துயிர் கொடுக்கவும், மனமுடைந்தவர்களின் இருதயத்தைத் திடப்படுத்தவும் நான் அவர்களுடன் இருக்கிறேன். நான் என்றென்றும் குற்றஞ்சாட்டமாட்டேன், எப்பொழுதும் கோபமாயிருக்கமாட்டேன். ஏனெனில் அப்பொழுது மனிதனின் ஆவி, என்னால் படைக்கப்பட்ட மனித சுவாசம், எனக்குமுன் சோர்வடைந்துவிடும். அவனுடைய பாவ பேராசையின் காரணமாக நான் அவன்மீது கடுங்கோபம் கொண்டேன், அவனைத் தண்டித்து கோபத்தில் என் முகத்தை மறைத்தேன், ஆனாலும் அவன் தன் மனம்போன போக்கிலேயே தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான். அவனுடைய வழிகளை நான் கண்டிருக்கிறேன்; ஆயினும் நான் அவனைச் சுகப்படுத்துவேன்; அவனை வழிநடத்தி, மீண்டும் அவனுக்கு ஆறுதல் அளிப்பேன்; நான் துயரப்படுகிறவர்களின் உதடுகளில் துதியைக் கொண்டுவருவேன். தொலைவிலும் அருகிலும் உள்ளவர்களுக்குச் சமாதானம், சமாதானம் என்றும், அவர்களை நான் சுகப்படுத்துவேன்” என்றும் யெகோவா சொல்கிறார். ஆனால் கொடியவர்களோ, கொந்தளிக்கும் கடலைப்போல் இருக்கிறார்கள்; அதற்கு அமைதியாய் இருக்கமுடியாது, அதன் அலைகள் சேற்றையும் சகதியையும் அள்ளிக்கொண்டுவரும். “கொடியவருக்கோ, மன அமைதி இல்லை” என்று என் இறைவன் சொல்கிறார்.

ஏசாயா 57:6-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது; அவைகள், அவைகளே உன் வீதம்; அவைகளுக்கு நீ பானபலியை ஊற்றி, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகளின்மேல் பிரியப்படுவேனோ? நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் படுக்கையை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய். கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்; நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய்; ஏறிப்போய் உன் படுக்கையை அகலமாக்கி, அவர்களுடன் உடன்படிக்கைசெய்தாய்; அவர்களுடைய படுக்கையைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய். நீ தைலத்தைப் பூசிக்கொண்டு மொளேக் என்கிற விக்கிர தெய்வத்திடம் போகிறாய்; உன் வாசனைத்திரவியங்களை மிகுதியாக்கி, உன் பிரதிநிதிகளைத் தூரத்திற்கு அனுப்பி, உன்னைப் பாதாளம்வரை தாழ்த்துகிறாய். வழிதூரமானதால் சோர்ந்துபோகிறாய்; அது வீணென்று நீ சொல்கிறதில்லை; உன் கைபெலத்தைக் கண்டுபிடித்தாய்; ஆகையால் நீ பெலவீனமடையவில்லை. நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய், நீ பொய்சொல்கிறாயே; நீ என்னை நினைக்காமலும், உன் மனதிலே வைக்காமலும்போகிறாய்; நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய். உன் நீதியையும் உன் செயல்களையும் நான் வெளிப்படுத்துவேன், அவைகள் உனக்கு உதவாது. நீ கூப்பிடும்போது, உன் தெய்வச்சிலைகளின் கூட்டம் உன்னைக் காப்பாற்றட்டும்; காற்று அவைகளையெல்லாம் பறக்கடித்து, மாயை அவைகளைக் கொண்டுபோகும்; என்னை நம்பியிருக்கிறவனோ தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, என் பரிசுத்த மலையிலே என்னை ஆராதிக்கிறவனாயிருப்பான். வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, தடைகளை என் மக்களின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும். நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்கிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்செய்கிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்செய்கிறேன். நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாக இருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் படைத்த ஆத்துமாக்களும், என் முகத்திற்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே. நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தின்காரணமாக கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாக நடந்தார்களே. அவர்களுடைய வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் கொடுப்பேன். தூரமாயிருக்கிறவர்களுக்கும் அருகில் இருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனை படைக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் என்று யெகோவா சொல்கிறார். துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமைதலாயிருக்கமுடியாமல், அதின் தண்ணீர் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்கிறார்.

ஏசாயா 57:6-21 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆறுகளில் உள்ள வழு வழுப்பான கற்களை நீங்கள் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள். அவற்றைத் தொழுதுகொள்ள அவற்றின் மீது திராட்சைரசத்தை ஊற்றுகிறீர்கள். அவற்றிற்கு நீங்கள் பலி கொடுக்கிறீர்கள். ஆனால், அந்தப் பாறைகளே நீ பெற்றுக்கொள்ளும் எல்லாம் ஆகும். இவை என்னை மகிழ்ச்சிப்படுத்தும் என்று நினைக்கிறாயா? இல்லை. இவை என்னை மகிழ்ச்சிப்படுத்தாது. ஒவ்வொரு மலையிலும் குன்றுகளிலும் உனது படுக்கையை நீ அமைக்கிறாய். அந்த இடங்களுக்கு நீ ஏறிப்போய் பலிகளைத் தருகிறாய். பிறகு நீ அந்தப் படுக்கையைப் பெற்று எனக்கு எதிராக, அந்தத் தெய்வங்களை நேசித்து பாவம் செய்கிறாய். அந்தத் தெய்வங்களை நேசிக்கிறாய். அவற்றின் நிர்வாண உடல்களைப் பார்த்து நீ சந்தோஷப்படுகிறாய். நீ என்னோடு இருந்தாய். ஆனால் என்னைவிட்டு அவற்றோடு இருக்கிறாய். என்னை நினைவுப்படுத்துகிறவற்றை நீ மறைத்துவிடுகிறாய். கதவுகளுக்கும், நிலைகளுக்கும் பின்னால் அவற்றை மறைக்கிறாய். பிறகு, நீ அந்தப் பொய்த் தெய்வங்களிடம் சென்று அவற்றோடு ஒப்பந்தம் செய்துகொள்கிறாய். நீ உனது தைலத்தையும், வாசனைப் பொருட்களையும் பயன்படுத்தி மோளேகுக்காக அழகுபடுத்துகிறாய். தொலைதூர நாடுகளுக்கு உனது தூதுவர்களை அனுப்பினாய். உன் செய்கை உன்னை மரண இடமான பாதாளம்வரை கொண்டுபோய்விடும். இவற்றைச் செய்ய நீங்கள் கடுமையாக உழைத்திருக்கவேண்டும். ஆனால், நீ எப்பொழுதும் சோர்வடைந்ததில்லை. நீ புதிய பலத்தைக் கண்டுகொண்டாய். ஏனென்றால், நீ அவற்றில் மகிழ்ச்சியடைந்தாய். என்னை நீ நினைக்கவில்லை. என்னை நீ கண்டுகொள்ளவும் இல்லை. எனவே யாரைப்பற்றி நீ கவலைப்பட்டாய்? நீ யாருக்கு அஞ்சிப் பயப்பட்டாய்? நீ ஏன் பொய் சொன்னாய்? கவனி! நான் நீண்ட காலமாக அமைதியாக இருக்கிறேன். நீ என்னை மகிமைப்படுத்தவில்லை. உனது நல்ல வேலைகளைப்பற்றி நான் சொல்ல முடிந்தது. நீ செய்த மதத் தொடர்பானவற்றையும் சொல்ல முடிந்தது. ஆனால், அவை பயனற்றவை. உனக்கு உதவி தேவைப்படும்போது, அந்தப் பொய்த் தெய்வங்களிடம் கதறுகிறாய். அவை உன்னைச் சுற்றியுள்ளன. அவை உனக்கு உதவட்டும். ஆனால், நான் உனக்குக் கூறுகிறேன். அவற்றைக் காற்று அடித்துப்போகும். உன்னிடமிருந்து இவற்றையெல்லாம் சிறு காற்று கொண்டுபோகும். ஆனால், என்னைச் சார்ந்திருக்கிற ஒருவன் நான் வாக்குப்பண்ணின பூமியைப் பெறுவான். அப்படிப்பட்டவன் எனது பரிசுத்தமான மலையைப் பெறுவான்.” சாலைகளைச் சுத்தம் செய்க! சாலைகளைச் சுத்தம் செய்க! எனது ஜனங்களுக்கு வழி தெளிவாக இருக்கும்படி தடைகளை நீக்குங்கள்! தேவன் உயர்ந்தவர்! உன்னதமானவர், தேவன் என்றென்றும் ஜீவிக்கிறார். தேவனுடைய நாமம் பரிசுத்தமானது. தேவன் கூறுகிறார், “நான் உயர்ந்த பரிசுத்தமான இடத்தில் வாழ்கிறேன். ஆனால், அதோடு துக்கமும் பணிவும்கொண்ட ஜனங்களோடும் வாழ்கிறேன். நான் உள்ளத்தில் பணிவுள்ள ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுப்பேன். நான் தங்கள் இருதயங்களில் துக்கமுள்ள ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுப்பேன். நான் என்றென்றும் தொடர்ந்து போரிடமாட்டேன். நான் எப்பொழுதும் கோபமாய் இருக்கமாட்டேன். நான் தொடர்ந்து கோபமாக இருந்தால், எனக்கு முன்பாக மனிதனின் ஆவியும், நான் அவர்களுக்குத் கொடுத்த ஆத்துமாவும் சாகும். இந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்தனர். அது எனக்குக் கோபமூட்டியது. எனவே, நான் இஸ்ரவேலைத் தண்டித்தேன். நான் அவனிடமிருந்து திரும்பினேன். ஏனென்றால் நான் கோபமாக இருந்தேன். இஸ்ரவேல் என்னைவிட்டு விலகியது. இஸ்ரவேல் முரட்டாட்டம் செய்து, தனக்கு இஷ்டமானதை செய்தது. இஸ்ரவேல் எங்கு சென்றாலும் நான் பார்த்தேன். எனவே, நான் அவனைக் குணப்படுத்துவேன். (மன்னிப்பேன்) நான் அவனை நடத்தி அவனுக்கு ஆறுதல் கூறுவேன். அவன் சமாதானம் அடையுமாறு வார்த்தைகளைச் சொல்வேன். பிறகு, அவனும் அவனது ஜனங்களும் துக்கத்தை உணரமாட்டார்கள். நான் அவர்களுக்குச் ‘சமாதானம்’ எனும் புதிய வார்த்தையைக் கற்றுத் தருவேன். என்னருகிலே உள்ள ஜனங்களுக்குச் சமாதானத்தைத் தருவேன். தொலை தூரத்திலுள்ள ஜனங்களுக்கும் சமாதானத்தைத் தருவேன். நான் அந்த ஜனங்களைக் குணப்படுத்துவேன் (மன்னிப்பேன்).” கர்த்தர் தாமே இவற்றைச் சொன்னார். ஆனால் தீய ஜனங்கள் கொந்தளிப்பான கடலைப்போன்றவர்கள். அவர்களால் அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்கமுடியாது. அவர்கள் கோபத்தோடு மண்ணைக் கலக்கும் கடலைப்போன்று உள்ளனர். “தீய ஜனங்களுக்கு சமாதானம் இல்லை” என்று என் தேவன் கூறுகிறார்.

ஏசாயா 57:6-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது; அவைகள், அவைகளே உன் வீதம்; அவைகளுக்கு நீ பானபலியை வார்த்து, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகளின்மேல் பிரியப்படுவேனோ? நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய். கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்; நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய்; ஏறிப்போய் உன் மஞ்சத்தை அகலமாக்கி, அவர்களோடே உடன்படிக்கைபண்ணினாய்; அவர்களுடைய மஞ்சத்தைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய். நீ தைலத்தைப் பூசிக்கொண்டு ராஜாவினிடத்தில் போகிறாய்; உன் பரிமளங்களை மிகுதியாக்கி, உன் ஸ்தானாபதிகளைத் தூரத்துக்கு அனுப்பி, உன்னைப் பாதாளமட்டும் தாழ்த்துகிறாய். வழிதூரமானதால் உழன்றுபோகிறாய்; அது விருதாவென்று நீ சொல்லுகிறதில்லை; உன் கைபெலத்தைக் கண்டுபிடித்தாய்; ஆகையால் நீ ஆயாசப்படவில்லை. நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய், நீ பொய்சொல்லுகிறாயே; நீ என்னை நினையாமலும், உன் மனதிலே வைக்காமலும்போகிறாய்; நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய். உன் நீதியையும் உன் கிரியைகளையும் நான் வெளிப்படுத்துவேன், அவைகள் உனக்கு உதவாது. நீ கூப்பிடும்போது, உன் கணங்கள் உன்னைத் தப்புவிக்கட்டும்; காற்று அவைகளையெல்லாம் பறக்கடித்து, மாயை அவைகளைக் கொண்டுபோகும்; என்னை நம்பியிருக்கிறவனோ தேசத்தைச் சுதந்தரித்து, என் பரிசுத்த பர்வதத்திலே காணியாட்சிக்காரனாயிருப்பான். வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, இடறல்களை என் ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும். நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன். நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே. நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாய் நடந்தார்களே. அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன். தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.