ஏசாயா 55:1-9

ஏசாயா 55:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள். நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும். உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன். இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாதிருந்த ஜாதியை வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த ஜாதி உன் தேவனாகிய கர்த்தரின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மேன்மைப்படுத்தியிருக்கிறார். கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார். என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.

ஏசாயா 55:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ஓ! தாகமாய் இருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் நீங்கள் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள், வாங்கி உட்கொள்ளுங்கள். வாருங்கள், பணமுமின்றி விலையுமின்றி திராட்சரசமும் பாலும் வாங்குங்கள். உணவுக்கு உதவாதவற்றின்மேல் பணத்தை ஏன் செலவிடுகிறீர்கள்? திருப்தி அளிக்காதவற்றின்மேல் ஏன் பிரயாசப்படுகிறீர்கள்? கேளுங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள், நல்லதையே சாப்பிடுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுமையான உணவின் நிறைவுகளினால் மகிழும். காது கொடுத்துக் கேளுங்கள், என்னிடம் வாருங்கள்; உங்கள் ஆத்துமா வாழ்வதற்காக நான் சொல்வதைக் கேளுங்கள். நான் உங்களுடன் ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்வேன்; நான் தாவீதுக்கு வாக்களித்த எனது உண்மையான அன்பை உங்களுக்குக் கொடுப்பேன். இதோ, நான் அவனை மக்கள் கூட்டங்களுக்கு ஒரு சாட்சியாகவும், மக்கள் கூட்டங்களுக்குத் தலைவனாகவும், தளபதியாகவும் அவனை வைத்தேன். ஆகையால் நிச்சயமாகவே நீங்கள் அறியாத நாடுகளுக்கு அழைப்பாய், உங்களை அறியாத பிறநாடுகள் உங்களிடம் விரைந்து வருவார்கள். ஏனெனில் இஸ்ரயேலின் பரிசுத்தரும் இறைவனுமான உங்கள் யெகோவா உங்களைச் சிறப்பினால் அலங்கரித்துள்ளார்.” அவரைக் கண்டுகொள்ள வாய்ப்புள்ள வேளையில் யெகோவாவைத் தேடுங்கள்; அவர் அருகிலிருக்கையில் அவரைக் கூப்பிடுங்கள். கொடியவன் தன் வழிகளையும், தீயவன் தன் எண்ணங்களையும் கைவிடட்டும்; அவன் யெகோவாவிடம் திரும்பட்டும், அவர் அவனுக்கு இரக்கம் காட்டுவார், எங்கள் இறைவனிடம் திரும்பட்டும், அவர் அவனை தாராளமாக மன்னிப்பார். “என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்களல்ல; உங்கள் வழிகள் என் வழிகளுமல்ல” என்று யெகோவா சொல்லுகிறார். “பூமியைப் பார்க்கிலும் வானங்கள் உயர்ந்தனவாய் இருக்கின்றது போலவே, என் வழிகளும் உங்கள் வழிகளைப் பார்க்கிலும் உயர்ந்தவையாய் இருக்கின்றன. என் எண்ணங்களும் உங்கள் எண்ணங்களிலும் மேலானவை.

ஏசாயா 55:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களிடம் வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சைரசமும் பாலும் வாங்கிக்கொள்ளுங்கள். நீங்கள் உண்மையான உணவு அல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் ஏன் செலவழிக்கவேண்டும்? நீங்கள் எனக்குக் கவனமாகச் செவிகொடுத்து, சிறப்பானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பொருட்களினால் மகிழ்ச்சியாகும். உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதிற்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன். இதோ, அவரை மக்கள்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், மக்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாதிருந்த தேசத்தை வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த தேசம் உன் தேவனாகிய யெகோவாவின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மேன்மைப்படுத்தியிருக்கிறார்; யெகோவாவைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் அருகிலிருக்கும்போது அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்புவானாக; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்புவானாக; அவர் மன்னிக்கிறதற்கு மிகுந்த தயையுள்ளவர். என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று யெகோவா சொல்கிறார். பூமியைக்காட்டிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைக்காட்டிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைக்காட்டிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.

ஏசாயா 55:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

“தாகமாயுள்ள ஜனங்களே! தண்ணீரைக் குடிக்க வாருங்கள்! உங்களிடம் பணம் இல்லாவிட்டால் வருந்தவேண்டாம். வாருங்கள் உங்கள் வயிறு நிறையும்வரை குடியுங்கள், உண்ணுங்கள்! பாலுக்கும் திராட்சைரசத்திற்கும் விலையில்லை. உண்மையான உணவாக இல்லாதவற்றுக்காக ஏன் நீ உன் பணத்தை வீணடிக்கிறாய்? உன்னை உண்மையாகவே திருப்தி செய்யாத வேலைகளை ஏன் நீ செய்கிறாய்? என்னை மிக நெருக்கமாக கவனி! நீ மிக நல்ல உணவை உண்பாய். உன் ஆத்துமாவைத் திருப்திப்படுத்தும் உணவை உண்டு மகிழலாம். நான் சொல்லுகிறவற்றை நெருக்கமாகக் கவனி. என்னைக் கவனி. அதனால் உன் ஆத்துமா வாழும். என்னிடம் வா. நான் என்றென்றும் தொடரும் ஒரு உடன்படிக்கையை உன்னோடு செய்வேன். நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையைப்போன்று அது இருக்கும். நான் அவனை நேசிப்பேன், என்றென்றும் அவனுக்கு வேண்டியவனாக இருப்பேன் என்று தாவீதுக்கு வாக்குறுதிச் செய்தேன். நீ அந்த உடன்படிக்கையை நம்பலாம். அனைத்து நாடுகளுக்கும் எனது வல்லமையின் சாட்சியாக நான் தாவீதைப் படைத்தேன். பல நாடுகளுக்கு அவன் ஒரு தலைவனாகவும், தளபதியாகவும் வருவான் என்று நான் வாக்களித்தேன்.” உனக்குத் தெரியாத நாடுகள் பல உள்ளன. ஆனால் அந்த நாடுகளை அழைப்பாய். அந்த நாடுகள் உன்னை அறியாது. ஆனால் அவை உன்னிடம் ஓடிவரும். இது நடக்கும், ஏனென்றால், உனது தேவனாகிய கர்த்தர் இதை விரும்புகிறார். இது நடக்கும், ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன்னை மகிமைப்படுத்துகிறார். இது மிக தாமதமாவதற்கு முன்னால் நீ கர்த்தரைத் தேட வேண்டும். அவர் அருகில் இருக்கும்போதே, இப்பொழுது நீ அவரை அழைக்கவேண்டும். கெட்டவர்கள் கெட்ட வழியில் செல்வதை நிறுத்தவேண்டும். அவர்கள் தீயவற்றை நினைப்பதை நிறுத்தவேண்டும். அவர்கள் மீண்டும் கர்த்தரிடம் வரவேண்டும். பிறகு கர்த்தர் அவர்களுக்கு ஆறுதல் தருவார். அந்த ஜனங்கள் கர்த்தரிடம் வருவார்கள் ஏனென்றால், நமது தேவன் அவர்களை மன்னிக்கிறார். கர்த்தர் கூறுகிறார், “உங்களது சிந்தனைகள் எனது சிந்தனைகளைப்போன்று இல்லை. உனது வழிகள் எனது வழிகளைப்போன்றில்லை. வானங்கள் பூமியைவிட உயரமானவை. அதேபோன்று, என் வழிகள் உன் வழிகளைவிட உயர்வானவை. என் சிந்தனைகள் உன் சிந்தனைகளைவிட உயர்வானவை” கர்த்தர் தாமே இவற்றைக் கூறினார்.

ஏசாயா 55:1-9

ஏசாயா 55:1-9 TAOVBSIஏசாயா 55:1-9 TAOVBSI