ஏசாயா 54:1-17

ஏசாயா 54:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; பிரசவ வேதனைப்படாதவளே, ஆர்ப்பரித்துப் பாடி ஆனந்த சத்தமிடு, ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனுடன் வாழ்கிறவளுடைய பிள்ளைகளைவிட அதிகமாயிருப்பார்கள்” என்று யெகோவா சொல்கிறார். “உனது கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு, உனது குடியிருப்புகளின் திரையை நன்கு அகலமாக விரி; இவற்றைச் செய்ய பின்வாங்காதே. கயிறுகளை தாராளமாக நீட்டி, முளைகளை உறுதிப்படுத்து. ஏனெனில் நீ வலது புறமாகவும், இடது புறமாகவும் பரவியிருப்பாய்; உன்னுடைய சந்ததிகள் நாடுகளை வெளியேற்றி, அவர்களுடைய பாழடைந்த பட்டணங்களில் குடியேறுவார்கள். “பயப்படாதே, நீ வெட்கப்படமாட்டாய்; அவமானத்திற்குப் பயப்படாதே, நீ தாழ்த்தப்படமாட்டாய். நீ உன் வாலிப காலத்தின் வெட்கத்தை மறந்துபோவாய், விதவைக்கால நிந்தனையையும் இனி ஒருபோதும் நினைக்கமாட்டாய். ஏனெனில், உன்னைப் படைத்தவரே உன் நாயகர்; சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர், இஸ்ரயேலின் பரிசுத்தரே உனது மீட்பர்; அவர் பூமி முழுவதற்கும் இறைவன் என்னப்படுவார். கைவிடப்பட்டு உள்ளத்தில் துக்கங்கொண்ட ஒரு மனைவியை அழைப்பதுபோலவும், இளமையில் திருமணம் செய்தும் விலக்கப்பட்ட மனைவியைத் திரும்பவும் அழைப்பதுபோலவும் யெகோவா உன்னைத் திரும்பவும் அழைப்பார்” என்று உனது இறைவன் சொல்கிறார். “நான் ஒரு நொடிப்பொழுது உன்னைக் கைவிட்டேன், ஆனால் ஆழ்ந்த இரக்கத்துடன் நான் உன்னைத் திரும்பவும் ஏற்றுக்கொள்வேன். என் கோபம் பொங்கி எழுந்ததால், உன்னிடமிருந்து என் முகத்தை ஒரு நொடிப்பொழுதே மறைத்தேன்; ஆனால், நித்திய தயவுடன் நான் உன்னில் இரக்கங்கொள்வேன்” என்று, உன் மீட்பராகிய யெகோவா சொல்கிறார். “இது எனக்கு நோவாவின் நாட்களில் நடந்ததுபோல் இருக்கின்றது; நோவாவின் நாட்களில் வந்த பெருவெள்ளம் இனி ஒருபோதும் பூமியை மூடமாட்டாது என்று நான் ஆணையிட்டேன். ஆகவே இப்பொழுதோ உங்களுடன் கோபங்கொள்ளவோ, அல்லது இனி ஒருபோதும் உங்களைக் கண்டிக்கவோ மாட்டேன் என்று நான் ஆணையிட்டிருக்கிறேன். மலைகள் அசைக்கப்பட்டாலும், குன்றுகள் அகற்றப்பட்டாலும் உன்மீதுள்ள என் நேர்மையான அன்பு அசைக்கப்படமாட்டாது; என் சமாதானத்தின் உடன்படிக்கை அகற்றப்படமாட்டாது” என்று உன்னில் இரக்கமுள்ள யெகோவா சொல்கிறார். “துன்புறுத்தப்பட்டிருக்கும் பட்டணமே, புயல்காற்றினால் அடிக்கப்பட்டு, தேற்றப்படாமல் இருக்கும் பட்டணமே, நான் உன்னை நீல இரத்தினக் கற்களாலும், உன் அஸ்திபாரங்களை இரத்தினக் கற்களாலும் கட்டுவேன். உனது கொத்தளங்களை சிவப்புக் கற்களாலும், உனது வாசல்களை மினுமினுக்கும் கற்களாலும், உனது மதில்கள் எல்லாவற்றையும் மாணிக்கக் கற்களாலும் கட்டுவேன். உன் பிள்ளைகள் யாவரும் யெகோவாவினால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; அவர்களுடைய சமாதானமும் பெரிதாயிருக்கும். நீ நீதியில் நிலைநாட்டப்படுவாய்: கொடுமை உன்னைவிட்டுத் தூரமாகும்; நீ பயப்படுவதற்கு எதுவுமிராது. பயங்கரம் உன்னைவிட்டுத் தூரமாய் அகற்றப்படும்; அது உனக்குக் கிட்டவராது. உன்னை யாராவது தாக்கினால் அது எனது செயல் அல்ல; உன்னைத் தாக்குகிறவன் எவனும் உன்னிடம் சரணடைவான். “இதோ நானே நெருப்புத் தணலை ஊதி வேலைக்கேற்ற ஆயுதங்களைச் செய்யும் கொல்லனை படைத்தேன். பாழாக்கும் அழிவுகாரனையும் நானே படைத்தேன். ஆகவே உனக்கு எதிராகச் செய்யப்படும் ஆயுதம் எதுவும் வெற்றிகொள்ளாது, உன்னைக் குற்றம் சாட்டும் ஒவ்வொரு நாவிற்கும் நீ அதன் பிழையைக் காட்டுவாய். யெகோவாவின் ஊழியருக்கு என்னிடமிருந்து கிடைக்கும் அவர்களுக்குரிய நியாயப்படுத்துதல் இதுவே, என்னிடமிருந்து கிடைக்கும் சொத்துரிமையும் இதுவே” என்று யெகோவா சொல்லுகிறார்.

ஏசாயா 54:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாகப் பாடி ஆனந்த சத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், தனியாக இருக்கும் பெண்ணுடைய பிள்ளைகள் அதிகம் என்று யெகோவா சொல்கிறார். உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் குடியிருப்புகளின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து. நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் தேசங்களைச் சொந்தமாக்கிக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள். பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; வெட்கப்படாதே, நீ அவமானமடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினைக்காமலிருப்பாய். உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் யெகோவா என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். கைவிடப்பட்டு மனம்நொந்தவளான பெண்ணைப்போலவும், இளம்பிராயத்தில் திருமணம்செய்து விவாகரத்து செய்யப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் யெகோவா அழைத்தார் என்று உன் தேவன் சொல்கிறார். இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன். அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று யெகோவாவாகிய உன் மீட்பர் சொல்கிறார். இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போல் இருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபம்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன். மலைகள் விலகினாலும், மலைகள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற யெகோவா சொல்கிறார். சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவு இல்லாதவளே, இதோ, நான் உன் கற்களைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி, உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் விலையுயர்ந்த கற்களுமாக்குவேன். உன் பிள்ளைகளெல்லோரும் யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும். நீதியினால் உறுதியாக்கப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை. இதோ, உனக்கு விரோதமாகக் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாகக் கூடுகிறார்களோ, அவர்கள் உன் ஆளுகைக்குள்ளாக வருவார்கள். இதோ, கரிநெருப்பை ஊதி, தன் வேலைக்கான ஆயுதத்தை உண்டாக்குகிற கொல்லனையும் நான் படைத்தேன்; கெடுத்து நாசமாக்குகிறவனையும் நான் படைத்தேன். உனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காமல்போகும்; உனக்கு விரோதமாக நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது யெகோவாவுடைய ஊழியக்காரரின் உரிமையும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று யெகோவா சொல்கிறார்.

ஏசாயா 54:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)

“பெண்களே மகிழ்ச்சியோடு இருங்கள்! உங்களுக்கு எந்தப் பிள்ளைகளும் இல்லை. ஆனால், நீங்கள் மிக மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்!” கர்த்தர் கூறுகிறார், “தனியாக இருக்கும் பெண் கணவனோடு இருக்கும் பெண்ணைவிட மிகுதியான பிள்ளைகளைப் பெறுவாள்.” “உனது கூடாரத்தைப் பெரிதாக்கு. உனது கதவுகளை அகலமாகத் திற. உன் வீட்டில் சேர்த்துக்கொள்வதை நிறுத்தாதே. உனது கூடாரத்தைப் பெரிதாகவும் பலமாகவும் செய். ஏனென்றால், நீ மிகவும் வளருவாய். உனது பிள்ளைகள் பல நாடுகளிலிருந்து ஜனங்களைப் பெறுவார்கள். உனது பிள்ளைகள், அழிந்துபோன இந்த நகரத்தில் மீண்டும் வாழ்வார்கள். அஞ்சாதே! நீ ஏமாற்றம் அடையமாட்டாய். உனக்கு எதிராக ஜனங்கள் தீயவற்றைச் சொல்லமாட்டார்கள். நீ இலச்சையடைவதில்லை. நீ இளைஞனாக இருந்து அவமானத்தை உணர்ந்தாய். ஆனால், இப்போது அந்த அவமானத்தை மறந்துவிட்டாய். நீ உன் கணவனை இழந்தபோது அடைந்த அவமானத்தை இப்போது நினைக்கமாட்டாய். ஏனென்றால், உன் கணவனாகிய ஒருவரே (தேவன்) உன்னைச் செய்தவர். அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர். இஸ்ரவேலைக் காப்பாற்றுகிறவர் அவர் ஒருவரே. அவர் இஸ்ரவேலின் பரிசுத்தமானவர். அவர் பூமி முழுவதற்குமான தேவன் என்று அழைக்கப்படுவார். “கணவனால் கைவிடப்பட்ட பெண்ணைப்போன்று நீ இருந்தாய். உன் ஆவியில் மிகவும் துக்கமுடையவளாக இருந்தாய். ஆனால், கர்த்தர் அவருடையவளாக உன்னை அழைத்தார். இளம் வயதில் திருமணம் செய்து, கணவனால் கைவிடப்பட்ட பெண்ணைப்போன்று நீ இருந்தாய். ஆனால், தேவன் உன்னை அவருடையவளாக அழைத்தார்.” தேவன் கூறுகிறார், “நான் உன்னை விட்டு விலகினேன். ஆனால், அது கொஞ்சக் காலத்திற்குத்தான். நான் மீண்டும் உன்னை என்னிடம் கூட்டிக்கொள்வேன். நான் உன்னிடம் பெருங்கருணையைக் காட்டுவேன். நான் மிகவும் கோபம்கொண்டேன். கொஞ்ச காலத்திற்கு உன்னிடமிருந்து மறைந்திருந்தேன். ஆனால் என்றென்றும் உன்னைத் தயவுடன் ஆறுதல்படுத்துவேன்” உனது மீட்பரான கர்த்தர் இதனைக் கூறினார். தேவன் கூறுகிறார், “நினைவுகொள்! நோவாவின் காலத்தில் நான் உலகத்தை வெள்ளத்தால் தண்டித்தேன். ஆனால், நான் மீண்டும் இந்த உலகத்தை வெள்ளத்தால் அழிக்கமாட்டேன் என்று நோவாவிற்கு வாக்குறுதி அளித்தேன்! இதே வழியில், நான் மீண்டும் கோபங்கொண்டு உன்னைக் கடிந்துகொள்வதில்லை என்று வாக்களிக்கிறேன்.” கர்த்தர் கூறுகிறார், “மலைகள் மறைந்து போகலாம்! குன்றுகள் புழுதி (தூள்) ஆகலாம்! ஆனால், எனது தயவு உன்னைவிட்டு விலகாது! நான் உன்னோடு சமாதானம் செய்துகொள்வேன். அது எப்பொழுதும் முடிவுபெறாது” கர்த்தர் உன்மீது இரக்கம் காட்டுகிறார். இவற்றையெல்லாம் சொன்னவர் அவர் ஒருவரே. “ஏழை நகரமே! பகைவர்கள் புயலைப்போன்று உனக்கு எதிரே வந்தார்கள். எவரும் உனக்கு ஆறுதல் அளிக்கவில்லை. ஆனால், நான் உன்னை மீண்டும் கட்டுவேன். நான் ஒரு அழகான கல்லை உனது சுவர்களுக்கு வைப்பேன். நான் நீல ரத்தினக் கற்களைப் பயன்படுத்தி அஸ்திபாரம் அமைப்பேன். சுவர்களின் உச்சியில் இரத்தினங்களால் செய்த கற்களை வைப்பேன். நான் வாசல்களுக்கு மாணிக்கக் கற்களைப் பயன்படுத்துவேன். உன்னைச் சுற்றி சுவர்கள் கட்ட விலையுயர்ந்த கற்களைப் பயன்படுத்துவேன். உனது பிள்ளைகள் தேவனைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கு அவர் கற்பிப்பார். உனது பிள்ளைகள் உண்மையான சமாதானத்தை அடைவார்கள். நீ நன்மையால் கட்டப்படுவாய். எனவே நீ கொடுமை மற்றும் அச்சத்திலிருந்து காப்பாற்றப்படுவாய். உனக்குப் பயப்படுவதற்கு எதுவுமில்லை. உன்னை எதுவும் பாதிக்காது. உனக்கு எதிராக எந்தப் படையும் போரிடாது. எந்தப் படையாவது உன்னைத் தாக்க முயன்றால், நீ அந்தப் படையைத் தோற்கடிப்பாய்.” “பார், நான் கொல்லனைப் படைத்தேன். அவன் நெருப்பை ஊதி மேலும் சூடாக்குகிறான். பிறகு, அவன் சூடான இரும்பை எடுத்து அவனது விருப்பம்போல் கருவிகளைச் செய்கிறான். அதே வழியில் பொருள்களை அழிக்கின்ற அழிவுக்காரனையும் படைத்தேன். “ஜனங்கள் உனக்கு எதிராகப்போரிட ஆயுதங்களைச் செய்வார்கள். ஆனால், அந்த ஆயுதங்கள் உங்களைத் தோற்கடிக்காது. சிலர் உங்களுக்கு எதிராகச் சிலவற்றை சொல்வார்கள். ஆனால் ஒவ்வொரு மனிதனும் உனக்கு எதிராகப் பேசும்போது அது தவறு என்று காட்டப்படும்.” கர்த்தர் கூறுகிறார், “கர்த்தருடைய ஊழியர்கள் எதைப் பெறுவார்கள்? என்னிடமிருந்து வரும் நியாயமான நன்மை மட்டும் பெறுவார்கள்.”

ஏசாயா 54:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்த சத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார். உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து. நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள். பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய். உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார். இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன். அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார். இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன். மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார். சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி, உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன். உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும். நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை. இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள். இதோ, கரிநெருப்பை ஊதி, தன் கிரியைக்கான ஆயுதத்தை உண்டுபண்ணுகிற கொல்லனையும் நான் சிருஷ்டித்தேன்; கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனையும் நான் சிருஷ்டித்தேன். உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.