ஏசாயா 52:1-12

ஏசாயா 52:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

விழித்தெழு சீயோனே, விழித்தெழு, உன்னைப் பெலத்தினால் உடுத்திக்கொள்! எருசலேமே, பரிசுத்த நகரமே, உன்னுடைய மகத்துவத்தின் உடைகளை உடுத்திக்கொள். விருத்தசேதனம் செய்யாதவர்களும், அசுத்தரும் இனி உனக்குள் வரமாட்டார்கள். எருசலேமே, உன்னிலிருக்கும் தூசியை உதறிப் போடு; நீ எழுந்து அரியணையில் அமர்ந்திரு. சிறைபட்ட சீயோன் மகளே, உன் கழுத்தில் இருக்கும் கட்டுகளைக் கழற்றி, உன்னை விடுவித்துக்கொள். யெகோவா கூறுவது இதுவே: நீ பணம் எதுவும் பெறாமல் விற்கப்பட்டாயே, “நீ பணமின்றி மீட்கப்படுவாய்.” ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ஆரம்பத்தில் எனது மக்கள் எகிப்திலே வாழ்வதற்காகப் போனார்கள்; பின்னர் அசீரியர் அவர்களை ஒடுக்கினார்கள். “இப்பொழுதோ இங்கு எனக்கு என்ன இருக்கிறது?” என்று யெகோவா கேட்கிறார். “எனது மக்கள் காரணமில்லாமல் கொண்டுசெல்லப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அலறச் செய்கிறார்கள், எனது பெயரும் நாளெல்லாம் தொடர்ந்து தூஷிக்கப்படுகிறது” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஆகையால், எனது மக்கள் எனது பெயரை அறிந்துகொள்வார்கள்; அந்த நாளிலே, அதை முன்னறிவித்தவர் நானே என்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். ஆம், அவர் நானே.” நற்செய்தியைக் கொண்டுவருவோரின் பாதங்கள் மலைகளின்மீது எவ்வளவு அழகாக இருக்கின்றன! அவர்கள் சமாதானத்தைப் பிரசித்தப்படுத்தி, நல்ல செய்திகளைக் கொண்டுவருவார்கள். இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி, சீயோனிடம், “உங்கள் இறைவனே ஆளுகை செய்கிறார்” என்று சொல்வார்கள். கேளுங்கள், உங்களுடைய காவலர் தங்கள் குரல்களை எழுப்புகிறார்கள்; அவர்கள் ஒன்றுசேர்ந்து ஆனந்த சத்தமிடுகிறார்கள். யெகோவா சீயோனுக்குத் திரும்பும்போது, அதை அவர்கள் தங்கள் சொந்தக் கண்களால் காண்பார்கள். எருசலேமின் பாழிடங்களே, நீங்கள் ஒன்றுசேர்ந்து மகிழ்ச்சியின் கீதம் பாடுங்கள். ஏனெனில் யெகோவா தனது மக்களைத் தேற்றி, எருசலேமை மீட்டுக்கொண்டார். யெகோவா எல்லா ஜனங்களின் பார்வையிலும் தம் பரிசுத்த கரத்தை நீட்டுவார். அப்பொழுது பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாம் நமது இறைவனின் இரட்சிப்பைக் காணுவார்கள். புறப்படுங்கள், புறப்படுங்கள், அங்கிருந்து வெளியேறுங்கள்! அசுத்தமான எதையும் தொடாதேயுங்கள்! யெகோவாவின் பாத்திரங்களைச் சுமக்கும் நீங்கள் அங்கிருந்து வெளியேறி சுத்தமாயிருங்கள். ஆனால், நீங்கள் அவசரமாய் வெளியேறப்போவதில்லை, தப்பியோடிப்போகிறவர்கள் போல ஓடிப்போவதில்லை. ஏனெனில், யெகோவா உங்கள்முன் செல்வார், இஸ்ரயேலின் இறைவனே உங்களுக்குப் பின்னால் காவலாகவும் இருப்பார்.

ஏசாயா 52:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையை அணிந்துகொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார உடைகளை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை. தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன மகளாகிய சீயோனே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு. விலையின்றி விற்கப்பட்டீர்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று யெகோவா சொல்கிறார். முற்காலத்தில் என் மக்கள் தங்கும்படி எகிப்திற்குப் போனார்கள்; அசீரியனும் காரணமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று யெகோவாவாகிய ஆண்டவர் சொல்கிறார். இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் மக்கள் வீணாகக் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை பரிகாசம் செய்கிறார்கள்; எப்போதும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று யெகோவா சொல்கிறார். இதினிமித்தம், என் மக்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச் சொல்கிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று யெகோவா சொல்கிறார். சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாக அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் செய்கிறாரென்று சீயோனுக்குச் சொல்கிற நற்செய்தியாளனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாகக் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், யெகோவா சீயோனைத் திரும்பிவரச்செய்யும்போது, அதைக் கண்ணாரக் காண்பார்கள். எருசலேமின் பாழான இடங்களே, முழங்கி ஏகமாகக் கெம்பீரித்துப் பாடுங்கள்; யெகோவா தம்முடைய மக்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார். எல்லா தேசங்களின் கண்களுக்கு முன்பாகவும் யெகோவா தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லோரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள். புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; யெகோவாவுடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள். நீங்கள் துரிதமாகப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; யெகோவா உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பின்னே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.

ஏசாயா 52:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

எழும்பு, சீயோனே எழும்பு, மகிமையான ஆடைகளை அணிந்துகொள்! பலத்தை எடுத்துக்கொள்! பரிசுத்தமான எருசலேமே எழுந்து நில்! தேவனைப் பின்பற்ற ஒப்புக்கொள்ளாத ஜனங்கள் மீண்டும் உனக்குள் நுழைய முடியாது! அந்த ஜனங்கள் சுத்தமும் பரிசுத்தமும் இல்லாதவர்கள். தூசியை உதறுங்கள்! உங்கள் அற்புதமான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள்! எருசலேமே, சீயோனின் மகளே, நீங்கள் சிறையில் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது, உங்கள் கழுத்தில் சுற்றிக்கிடந்த சங்கிலிகளில் இருந்து விடுதலை அடைந்தீர்கள்! கர்த்தர் கூறுகிறார், “நீங்கள் காசுக்காக விற்கப்படவில்லை. எனவே, நான் உன்னை விடுதலை செய்ய பணத்தைப் பயன்படுத்தமாட்டேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார் “என் ஜனங்கள் முதலில் எகிப்துக்கு வாழச் சென்றனர். பிறகு, அவர்கள் அடிமைகளானார்கள். பின்னர், அசீரியா அவர்களை அடிமைப்படுத்தினான். இப்போது என்ன நடந்தது என்று பார்! இன்னொரு நாடு எனது ஜனங்களை எடுத்துக்கொண்டது. என் ஜனங்களை எடுத்துக்கொள்ள அவர்கள் எதையும் கொடுக்கவில்லை. இந்த நாடு என் ஜனங்களை ஆளுகின்றனர், அவர்களைப் பார்த்து நகைக்கின்றனர். அந்த ஜனங்கள் எப்பொழுதும் என்னையும் என் நாமத்தையும் ஏளனம் செய்கிறார்கள்.” கர்த்தர் கூறுகிறார், “இது நடந்திருக்கிறது. எனவே, என் ஜனங்கள் என்னைப்பற்றி கற்றுக்கொள்வார்கள். நான் யாரென்று என் ஜனங்கள் அறிவார்கள். என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள். பிறகு அவர்கள் இதைச் சொல்கிறவர் நானே அவரென்று அறிவார்கள்.” ஒரு தூதுவன் நற்செய்தியோடு மலைக்கு மேல் வருவதைப் பார்ப்பது அற்புதமான ஒன்று. தூதுவன், “அங்கே சமாதானம் உள்ளது. நாம் காப்பாற்றப்பட்டிருக்கிறோம். சீயோனே, உங்கள் தேவனே ராஜா” என்று கூறுவதைக் கேட்பது அற்புதமான ஒன்று. நகரக் காவலர்கள் சத்தமிடத் தொடங்கினார்கள். அவர்கள் கூடிக் களித்தனர். ஏனென்றால், அவர்களில் ஒவ்வொருவரும் கர்த்தர் சீயோனுக்குத் திரும்புவதைப் பார்க்கின்றனர். எருசலேமே, உனது அழிக்கப்பட்ட கட்டிடங்கள் மீண்டும் மகிழும். நீங்கள் கூடிக் களிப்பீர்கள். ஏனென்றால், கர்த்தர் எருசலேமிடம் தயவோடு உள்ளார். கர்த்தர் அவரது ஜனங்களை மீட்பார். அனைத்து நாடுகளிலும் கர்த்தர் தமது பரிசுத்தமான பலத்தைக் காட்டுவார். கர்த்தர் அவரது ஜனங்களை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதைத் தொலைதூர நாடுகள் எல்லாம் பார்க்கும். நீங்கள் பாபிலோனை விட்டுப்போங்கள். அந்த இடத்தை விடுங்கள்! ஆசாரியர்களே, தொழுகைக்குரிய பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். உங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். சுத்தமற்ற எதையும் தொடாதீர்கள். நீங்கள் பாபிலோனை விடுவீர்கள். ஆனால், அவர்கள் உங்களை அவசரப்படுத்தி வெளியேற்ற முடியாது. நீங்கள் வெளியே ஓடும்படி அவர்கள் உங்களைப் பலவந்தப்படுத்த முடியாது. நீங்கள் வெளியேறி நடப்பீர்கள், கர்த்தர் உங்களோடு நடப்பார். கர்த்தர் உங்கள் முன்னால் இருப்பார். இஸ்ரவேலின் தேவன் உங்கள் பின்பக்கமும் இருப்பார்.

ஏசாயா 52:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை. தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு. விலையின்றி விற்கப்பட்டீர்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். பூர்வத்தில் என் ஜனங்கள் தங்கும்படி எகிப்துக்குப் போனார்கள்; அசீரியனும் முகாந்தரமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள்; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார். இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச் சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரீகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாய்க் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், கர்த்தர் சீயோனைத் திரும்பிவரப்பண்ணும்போது, அதைக் கண்ணாரக்காண்பார்கள். எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார். எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள். புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள். நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.