ஏசாயா 5:1-11
ஏசாயா 5:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு. அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது. எருசலேமின் குடிகளே, யூதாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங்கள். நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன? இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோகும். அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களை கொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார். சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு. தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ! சேனைகளின் கர்த்தர் என் செவி கேட்கச் சொன்னது: மெய்யாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும். பத்தேர் நிலமாகிய திராட்சத்தோட்டம் ஒரேபடி ரசம் தரும்; ஒரு கல விதை ஒரு குறுணி விளையும். சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!
ஏசாயா 5:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் அன்புக்குரியவருக்காக அவருடைய திராட்சைத் தோட்டத்தைப்பற்றி ஒரு பாட்டுப் பாடுவேன்: என் அன்புக்குரியவருக்கு செழிப்பான குன்றின்மேல் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. அவர் அதைக் கொத்தி கற்களை நீக்கிப் பண்படுத்தினார்; உயர்ந்தரக திராட்சைக் கொடிகளை அங்கு நட்டார். அவர் அதற்கு நடுவிலே காவற்கோபுரம் ஒன்றைக் கட்டி, திராட்சை இரசம் பிழியும் ஆலையொன்றையும் அமைத்தார். அது நல்ல திராட்சைப் பழங்களைத் தருமென்று எதிர்பார்த்தார், ஆனால் அதுவோ புளிப்பான பழங்களையே கொடுத்தது. “எருசலேம் நகரில் வசிப்போரே, யூதா மனிதர்களே, இப்போது நீங்களே எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையில் நியாயந்தீருங்கள். என் திராட்சைத் தோட்டத்திற்கு நான் செய்ததைவிடக் கூடுதலாக என்ன செய்திருக்கலாம்? நல்ல திராட்சைப் பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது ஏன் புளிப்பான பழங்களைக் கொடுத்தது? ஆகவே நான் என் திராட்சைத் தோட்டத்திற்கு இப்போது செய்யப்போவதைச் சொல்வேன்: அதன் வேலியை நீக்கிவிடுவேன், அது அழிந்துவிடும். அதன் மதில்களை உடைத்துவிடுவேன், அது மிதிக்கப்படும். அதன் கிளைகளை நறுக்காமலும், களையைக் கொத்தி எடுக்கப்படாமலும் அதைப் பாழ்நிலமாக விட்டுவிடுவேன். முட்செடிகளும் நெருஞ்சில் செடிகளும் அங்கு வளரும். அங்கு மழை பெய்யாதபடி நான் மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்.” எல்லாம் வல்ல யெகோவாவின் திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பமே. யூதாவின் மனிதர்தான் அவரின் மகிழ்ச்சியின் தோட்டம். அவர் நீதியை எதிர்பார்த்தார், ஆனால் இரத்தம் சிந்துதலையே கண்டார்; நியாயத்தை எதிர்பார்த்தார், ஆனால் முறைப்பாட்டையே கேட்டார். நாட்டில் பிறருக்கு இடம் இல்லாமல் தாங்கள்மட்டும், வீட்டுடன் வீட்டைச் சேர்த்து, வயலுடன் வயலை இணைத்து வாழ்கிறவர்களே, உங்களுக்கு ஐயோ! எல்லாம் வல்ல யெகோவா என் காது கேட்க அறிவித்ததாவது: “நிச்சயமாகவே அந்த பெரும் வீடுகள் பாழாகும், அழகிய மாளிகைகள் குடியிருப்பாரின்றி விடப்படும். பத்து ஏக்கர் திராட்சைத் தோட்டம் ஒரு குடம் திராட்சை இரசத்தையே உற்பத்தி செய்யும். பத்து கலம் விதை விதைத்தால் ஒரு கலம் அளவு தானியத்தை மட்டுமே கொடுக்கும்.” அதிகாலையில் எழுந்து மதுபானத்தை நாடி அலைந்து, இரவுவரை தரித்திருந்து வெறிக்கும்வரை குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஐயோ, கேடு!
ஏசாயா 5:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சைத்தோட்டத்தைக்குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சைத்தோட்டம் உண்டு. அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களை அகற்றி, அதிலே உயர்ந்தரக திராட்சைச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டாக்கி, அது நல்ல திராட்சைப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது. எருசலேமின் குடிமக்களே, யூதாவின் மனிதர்களே, எனக்கும் என் திராட்சைத்தோட்டத்திற்கும் நியாயந்தீருங்கள். நான் என் திராட்சைத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சைப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன? இப்போதும் நான் என் திராட்சைத்தோட்டத்திற்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதிக்கப்பட்டுப்போகும். அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களை கொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார். சேனைகளின் யெகோவாவுடைய திராட்சைத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனிதர்களே; அவர் நியாயத்திற்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறையிடுதல். தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகும்வரை, வீட்டுடன் வீட்டைச் சேர்த்து, வயலுடன் வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ, சேனைகளின் யெகோவா என் காது கேட்கச் சொன்னது: உண்மையாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும். பத்து ஏர் நிலமாகிய திராட்சைத்தோட்டம் ஒரேபடி ரசம் தரும்; ஒரு கல விதை ஒரு குறுணி விளையும். சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி அமர்ந்திருந்து, இருட்டிப்போகும்வரை குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ
ஏசாயா 5:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)
இப்பொழுது, நான் எனது நண்பருக்காக (தேவன்) ஒரு பாடல் பாடுவேன். இப்பாடல் என் நண்பர் திராட்சைத் தோட்டத்தின் (இஸ்ரவேல்) மேல் வைத்த அன்பைப்பற்றியது. எனது நண்பருக்கு வளமான வெளியில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. எனது நண்பர் அதனைச் சுத்தப்படுத்தினார். அதில் சிறந்த திராட்சைக் கொடிகளை நட்டார். அதன் நடுவில் ஒரு கோபுரம் அமைத்தார். அதில் நல்ல திராட்சை வளரும் என்று நம்பினார் ஆனால் அதில் கெட்ட திராட்சைகளே இருந்தன. எனவே தேவன் சொன்னார், “எருசலேமில் வாழும் ஜனங்களே யூதாவில் உள்ள மனிதர்களே என்னையும் என் திராட்சைத் தோட்டத்தையும் எண்ணிப் பாருங்கள். எனது திராட்சைத் தோட்டத்திற்காக நான் இன்னும் என்ன செய்ய முடியும்? என்னால் முடிந்தவற்றை நான் செய்துவிட்டேன். நல்ல திராட்சை வளரும் என்று நம்பினேன். ஆனால் கெட்ட திராட்சைகளே உள்ளன. ஏன் இவ்வாறு ஆயிற்று? இப்பொழுது, எனது திராட்சைத் தோட்டத்தில் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வேன். நான் முட்புதர்களை விலக்குவேன். அவை வயலைக் காக்கின்றன. அவற்றை எரித்துப்போடுவேன். கற்சுவர்களை இடித்துப்போடுவேன். அது மிதியுண்டு போகும். என் திராட்சைத் தோட்டத்தை காலியாக வைப்பேன். எவரும் கொடிகளைப்பற்றி கவலைப்படமாட்டார்கள். எவரும் தோட்டத்தில் வேலை செய்யமாட்டார்கள். முட்களும், புதர்களும் வளரும். தோட்டத்தில் மழைபொழியவேண்டாம் என்று நான் மேகங்களுக்குக் கட்டளை இடுவேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கான திராட்சைத் தோட்டம் என்பது இஸ்ரவேல் நாட்டைக் குறிக்கும். கர்த்தருடைய மனமகிழ்ச்சியின் செடியானது யூதாவின் ஜனங்களே. கர்த்தர் நியாயத்துக்குக் காத்திருந்தார். ஆனால் கொலைகளே நடைபெற்றன. கர்த்தர் நீதிக்காகக் காத்திருந்தார். ஆனால் அழுகைகளே இருந்தன. மோசமாக நடத்தப்பட்வர்கள் முறையிட்டார்கள். ஜனங்களாகிய நீங்கள் மிக நெருங்கி வாழ்கிறீர்கள். வேறு எவருக்கும் இடமில்லாதபடி உங்கள் வீடுகளை கட்டுங்கள். ஆனால் கர்த்தர் உங்களைத் தண்டிப்பார். உங்களைத் தனித்து வாழும்படி செய்வார். முழு நாட்டில் நீங்கள் மட்டும் தனியாக வாழுவீர்கள்! சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதை என்னிடம் சொன்னார். அவர் அவரிடம், “இப்பொழுது ஏராளமான வீடுகள் உள்ளன. உறுதியாகச் சொல்கிறேன், எல்லா வீடுகளும் அழிக்கப்படும். இப்பொழுது அழகான பெரிய வீடுகள் உள்ளன. ஆனால் அவை காலியாகிப்போகும். அப்போது, பத்து ஏக்கர் அளவுள்ள பெரிய திராட்சைத் தோட்டம் குறைந்த திராட்சை ரசத்தை தரும். பல மூட்டை நிறைந்த விதைகள் சிறிய அளவு தானியங்களையே விளைவிக்கும்.” ஜனங்களாகிய நீங்கள் அதிகாலையில் எழுந்து, மதுபானம் குடிக்கப்போகிறீர்கள். இரவு நெடுநேரம் தூங்காமல் மதுவைக் குடித்து களிக்கிறீர்கள்.