ஏசாயா 43:14-21
ஏசாயா 43:14-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உங்கள் மீட்பரும், இஸ்ரயேலின் பரிசுத்தருமாகிய யெகோவா கூறுவது இதுவே: “உங்கள் நிமித்தம் பாபிலோனுக்கு நான் இராணுவத்தை அனுப்பி, பாபிலோனியர் அனைவரையும் அகதிகளாகக் கொண்டுவருவேன்; அவர்கள் பெருமைகொள்ளும் அவர்களுடைய கப்பல்களிலேயே அவர்களைக் கொண்டுவருவேன். நானே யெகோவா, உங்கள் பரிசுத்தர்; இஸ்ரயேலைப் படைத்தவரும், உங்கள் அரசனும் நானே.” கடலிலே ஒரு வழியையும், பெரு வெள்ளத்திலே ஒரு பாதையையும் உண்டாக்கியவர் அவரே; தேர்களையும் குதிரைகளையும், இராணுவத்தையும் படைவீரர்களையும் ஒன்றுகூட்டி வந்தவரும், அவர்கள் ஒருபோதும் திரும்பவும் எழுந்திருக்க முடியாமல் விழச்செய்து, திரியை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய யெகோவா சொல்வது இதுவே: “முன்பு நடந்த காரியங்களை மறந்துவிடுங்கள்; கடந்தகால நிகழ்வுகளைப் பற்றிச் சிந்திக்காதிருங்கள். இதோ, நான் ஒரு புதிய காரியத்தைச் செய்கிறேன்! அது இப்போதே உண்டாகிறது; அது உங்களுக்குத் தெரியவில்லையா? நான் பாலைவனத்தில் பாதையையும், பாழ்நிலத்தில் நீரூற்றுக்களையும் உண்டாக்குகிறேன். நான் தெரிந்துகொண்ட என் மக்களுக்குக் குடிக்கக் கொடுப்பதற்கு பாலைவனத்தில் தண்ணீரையும், பாழ்நிலத்தில் நீரோடைகளையும் நானே வழங்குகிறேன். அதனால், காட்டு மிருகங்களான குள்ளநரிகளும், நெருப்புக் கோழிகளும் என்னை கனம்பண்ணும். இந்த மக்களை எனது துதியைப் பிரசித்தப்படுத்தும்படி, எனக்காக நானே உருவாக்கினேன்.
ஏசாயா 43:14-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நான் உங்களுக்காக அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர்கள் படகுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய யெகோவா சொல்கிறார். நானே உங்கள் பரிசுத்தராகிய யெகோவாவும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர். கடலிலே வழியையும் திரளான தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி, இரதங்களையும் குதிரைகளையும் படைகளையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படச்செய்து, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்துகிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும்செய்கிற யெகோவா சொல்கிறதாவது: முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; முந்தினமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்திரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். நான் தெரிந்துகொண்ட என் மக்களின் தாகத்திற்கு வனாந்திரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், ஆந்தைக் குஞ்சுகளும் என்னைக் கனப்படுத்தும். இந்த மக்களை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.
ஏசாயா 43:14-21 பரிசுத்த பைபிள் (TAERV)
இஸ்ரவேலின் பரிசுத்தமானவரான கர்த்தர் உங்களைக் காப்பாற்றுகிறார். கர்த்தர் சொல்கிறார், “நான் உங்களுக்காகப் படைகளை பாபிலோனுக்கு அனுப்புவேன். பலர் சிறைப்பிடிக்கப்படுவார்கள். கல்தேயர்களான அவர்கள் தங்கள் படகுளில் எடுத்துச் செல்லப்படுவார்கள். (அப்படகுகளைப்பற்றிக் கல்தேயர்களுக்குப் பெருமை உண்டு). நானே பரிசுத்தரான கர்த்தர். நான் இஸ்ரவேலைப் படைத்தேன். நானே உங்கள் ராஜா.” கர்த்தர் கடலின் வழியே சாலை அமைப்பார். அது வலிமையான தண்ணீராக இருந்தாலும், அவர் தமது ஜனங்களுக்காகப் பாதை அமைப்பார். கர்த்தர் சொல்கிறார், “எனக்கு எதிராகத் தங்கள் இரதங்களோடும், குதிரைகளோடும், படைகளோடும் போரிடுகிற ஜனங்கள் தோற்கடிக்கப்படுவார்கள். அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள். அவர்கள் அழிக்கப்படுவார்கள். ஒரு மெழுகின் திரி அணைக்கப்படுகிறதுபோல் அவை அணைந்துபோகும். எனவே, தொடக்கத்தில் நிகழ்ந்ததை எண்ணவேண்டாம். வெகு காலத்திற்கு முன்னால் நடந்ததைப்பற்றி நினைக்கவேண்டாம். ஏனென்றால், நான் புதியவற்றைச் செய்வேன். இப்போது நீங்கள் புதிய செடியைப்போல வளருவீர்கள். இது உண்மை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்தீர்கள். நான் உண்மையில் இந்த வனாந்திரத்தில் சாலை அமைப்பேன். நான் உண்மையில் இந்த வறண்ட நிலத்தில் ஆறுகளை உருவாக்குவேன். காட்டு மிருகங்களும் எனக்கு நன்றியுடையவையாக இருக்கும். பெரிய மிருகங்களும் பறவைகளும் என்னைப் பெருமைப்படுத்தும். நான் வனாந்திரத்திலே தண்ணீரை ஊற்றும்போது அவை என்னை பெருமைப்படுத்தும். வறண்ட நிலத்தில் ஆறுகளைக் கொண்டுவரும்போது அவை என்னைப் பெருமைப்படுத்தும். எனது ஜனங்களுக்காக, என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களுக்காகத் தண்ணீர் கொடுக்கும்படி நான் இதனைச் செய்வேன். நான் சிருஷ்டித்த ஜனங்கள் இவர்கள்தான். இவர்கள் என்னைத் துதித்துப் பாடுவார்கள்.
ஏசாயா 43:14-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நான் உங்களுக்காக அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர் படவுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய கர்த்தர் சொல்லுகிறார். நானே உங்கள் பரிசுத்தராகிய கர்த்தரும் , இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர். சமுத்திரத்திலே வழியையும் வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி, இரதங்களையும் குதிரைகளையும் இராணுவங்களையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படப்பண்ணி, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்துகிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும்பண்ணுகிற கர்த்தர் சொல்லுகிறதாவது: முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும். இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.