ஏசாயா 43:11-19
ஏசாயா 43:11-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை. நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்? நான் உங்களுக்காக அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர் படவுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய கர்த்தர் சொல்லுகிறார். நானே உங்கள் பரிசுத்தராகிய கர்த்தரும் , இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர். சமுத்திரத்திலே வழியையும் வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி, இரதங்களையும் குதிரைகளையும் இராணுவங்களையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படப்பண்ணி, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்துகிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும்பண்ணுகிற கர்த்தர் சொல்லுகிறதாவது: முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
ஏசாயா 43:11-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நான், நானே யெகோவா, என்னைத்தவிர வேறு இரட்சகர் இல்லை. நானே வெளிப்படுத்தினேன், இரட்சித்தேன், பிரசித்தப்படுத்தினேன்; உங்கள் மத்தியிலிருக்கும் எந்த அந்நிய தெய்வமுமல்ல. நானே இறைவன் என்பதற்கு நீங்களே எனது சாட்சிகள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஆம், ஆதிநாட்களிலிருந்து நானே அவர். எனது கரத்திலிருந்து மக்களை விடுவித்துக்கொள்ள யாராலும் முடியாது. நான் செயலாற்றும்போது அதை மாற்ற யாரால் முடியும்?” உங்கள் மீட்பரும், இஸ்ரயேலின் பரிசுத்தருமாகிய யெகோவா கூறுவது இதுவே: “உங்கள் நிமித்தம் பாபிலோனுக்கு நான் இராணுவத்தை அனுப்பி, பாபிலோனியர் அனைவரையும் அகதிகளாகக் கொண்டுவருவேன்; அவர்கள் பெருமைகொள்ளும் அவர்களுடைய கப்பல்களிலேயே அவர்களைக் கொண்டுவருவேன். நானே யெகோவா, உங்கள் பரிசுத்தர்; இஸ்ரயேலைப் படைத்தவரும், உங்கள் அரசனும் நானே.” கடலிலே ஒரு வழியையும், பெரு வெள்ளத்திலே ஒரு பாதையையும் உண்டாக்கியவர் அவரே; தேர்களையும் குதிரைகளையும், இராணுவத்தையும் படைவீரர்களையும் ஒன்றுகூட்டி வந்தவரும், அவர்கள் ஒருபோதும் திரும்பவும் எழுந்திருக்க முடியாமல் விழச்செய்து, திரியை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய யெகோவா சொல்வது இதுவே: “முன்பு நடந்த காரியங்களை மறந்துவிடுங்கள்; கடந்தகால நிகழ்வுகளைப் பற்றிச் சிந்திக்காதிருங்கள். இதோ, நான் ஒரு புதிய காரியத்தைச் செய்கிறேன்! அது இப்போதே உண்டாகிறது; அது உங்களுக்குத் தெரியவில்லையா? நான் பாலைவனத்தில் பாதையையும், பாழ்நிலத்தில் நீரூற்றுக்களையும் உண்டாக்குகிறேன்.
ஏசாயா 43:11-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நான், நானே யெகோவா; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை. நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கச்செய்தேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று யெகோவா சொல்கிறார். நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்? நான் உங்களுக்காக அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர்கள் படகுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய யெகோவா சொல்கிறார். நானே உங்கள் பரிசுத்தராகிய யெகோவாவும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர். கடலிலே வழியையும் திரளான தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி, இரதங்களையும் குதிரைகளையும் படைகளையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படச்செய்து, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்துகிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும்செய்கிற யெகோவா சொல்கிறதாவது: முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; முந்தினமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்திரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
ஏசாயா 43:11-19 பரிசுத்த பைபிள் (TAERV)
நான், நானே கர்த்தர்! என்னைத்தவிர வேறு இரட்சகர் இல்லை! நான் ஒருவர் மட்டுமே! உங்களோடு பேசியவர் நான் ஒருவரே. நான் உங்களைக் காப்பாற்றினேன். நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உங்களோடு இருப்பது வேறு யாரும் அந்நியர் அல்ல. நீங்கள் என்னுடைய சாட்சிகள், நான் தேவன்!” (கர்த்தர் தாமாகவே இதனைச் சொன்னார்). “நான் எப்பொழுதும் தேவனாக இருக்கிறேன். நான் ஏதாவது செய்யும்போது, நான் செய்ததை எவராலும் மாற்றமுடியாது. எனது வல்லமையிலிருந்து எவரும் ஜனங்களைக் காப்பாற்றமுடியாது.” இஸ்ரவேலின் பரிசுத்தமானவரான கர்த்தர் உங்களைக் காப்பாற்றுகிறார். கர்த்தர் சொல்கிறார், “நான் உங்களுக்காகப் படைகளை பாபிலோனுக்கு அனுப்புவேன். பலர் சிறைப்பிடிக்கப்படுவார்கள். கல்தேயர்களான அவர்கள் தங்கள் படகுளில் எடுத்துச் செல்லப்படுவார்கள். (அப்படகுகளைப்பற்றிக் கல்தேயர்களுக்குப் பெருமை உண்டு). நானே பரிசுத்தரான கர்த்தர். நான் இஸ்ரவேலைப் படைத்தேன். நானே உங்கள் ராஜா.” கர்த்தர் கடலின் வழியே சாலை அமைப்பார். அது வலிமையான தண்ணீராக இருந்தாலும், அவர் தமது ஜனங்களுக்காகப் பாதை அமைப்பார். கர்த்தர் சொல்கிறார், “எனக்கு எதிராகத் தங்கள் இரதங்களோடும், குதிரைகளோடும், படைகளோடும் போரிடுகிற ஜனங்கள் தோற்கடிக்கப்படுவார்கள். அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள். அவர்கள் அழிக்கப்படுவார்கள். ஒரு மெழுகின் திரி அணைக்கப்படுகிறதுபோல் அவை அணைந்துபோகும். எனவே, தொடக்கத்தில் நிகழ்ந்ததை எண்ணவேண்டாம். வெகு காலத்திற்கு முன்னால் நடந்ததைப்பற்றி நினைக்கவேண்டாம். ஏனென்றால், நான் புதியவற்றைச் செய்வேன். இப்போது நீங்கள் புதிய செடியைப்போல வளருவீர்கள். இது உண்மை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்தீர்கள். நான் உண்மையில் இந்த வனாந்திரத்தில் சாலை அமைப்பேன். நான் உண்மையில் இந்த வறண்ட நிலத்தில் ஆறுகளை உருவாக்குவேன்.