ஏசாயா 40:3-11

ஏசாயா 40:3-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒருவரின் குரல் கூப்பிடுகிறது: “பாலைவனத்தில் யெகோவாவுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; வனாந்திரத்திலே நமது இறைவனுக்கு பிரதான வீதியொன்றை நேராய் அமையுங்கள். ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்த்தப்படும், ஒவ்வொரு மலையும் குன்றும் தாழ்த்தப்படும், மேடுபள்ளம் நிறைந்த நிலம் சமமாக்கப்படும், கரடுமுரடான இடங்கள் சீராக்கப்படும். யெகோவாவின் மகிமை வெளிப்படுத்தப்படும்; மனுக்குலம் யாவும் ஒன்றாய் அதைக் காணும். யெகோவாவின் வாயே இதைப் பேசியிருக்கிறது.” “உரத்துச் சொல்” என்கிறது ஒரு குரல். அதற்கு, “நான் எதைச் சொல்லுவேன்?” என்றேன். “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள், அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன. யெகோவாவின் சுவாசம் அவைகளின்மேல் வீசுகிறபோது புல் வாடுகிறது, பூக்களும் உதிர்கின்றன; நிச்சயமாக மக்களும் புல்லாகவே இருக்கிறார்கள். புல் வாடுகிறது, பூக்கள் உதிர்கின்றன, ஆனால், நமது இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்து நிற்கிறது.” சீயோனுக்கு நற்செய்தி கொண்டுவருபவனே, நீ உயர்ந்த மலையொன்றில் ஏறு. எருசலேமுக்கு நற்செய்தி கொண்டுவருபவனே, நீ குரலை எழுப்பிக் கூக்குரலிடு. பயப்படாதே, குரலை எழுப்பு; “இதோ உங்கள் இறைவன்!” என்று யூதாவின் பட்டணங்களுக்குச் சொல். இதோ, ஆண்டவராகிய யெகோவா வல்லமையோடு வருகிறார்; அவருடைய புயமே அவருக்காக ஆளுகை செய்யும். அவர் அளிக்கும் வெகுமதியும் அவருடன் இருக்கிறது, அவர் தரும் பிரதிபலனும் அவருடனே வருகிறது. அவர் மேய்ப்பனைப்போல் தன் மந்தையை மேய்க்கிறார்: அவர் செம்மறியாட்டுக் குட்டிகளை ஒன்றுசேர்த்து கைகளில் ஏந்தி, மார்போடு அணைத்துக்கொண்டு செல்கிறார்; அவர் குட்டிகளுடன் இருக்கும் செம்மறியாடுகளைக் கனிவாக நடத்துகிறார்.

ஏசாயா 40:3-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் சீர்படுத்துங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும், யெகோவாவின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாகக் காணும், யெகோவாவின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்திரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டானது. பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டானது; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. யெகோவாவின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; மக்களே புல். புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது. சீயோனுக்கு சுவிசேஷம் கொண்டுவருகிறவளே, நீ உயர்ந்த மலையில் ஏறு; எருசலேமுக்கு வரும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு. இதோ, யெகோவாவாகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் கொடுக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்திற்கு முன்பாகச் செல்கிறது. மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாக நடத்துவார்.

ஏசாயா 40:3-11 பரிசுத்த பைபிள் (TAERV)

கவனி! அங்கே ஒருவன் சத்தமிட்டுக்கொண்டிருக்கிறான்! “கர்த்தருக்காக இந்த வனாந்திரத்தில் ஒரு பாதையை தயார் செய்யுங்கள்! நமது தேவனுக்காக வனாந்திரத்தில் ஒரு சாலை அமையுங்கள்! ஒவ்வொரு பள்ளத்தாக்கையும் நிரப்புங்கள். ஒவ்வொரு மலையையும் பள்ளத்தாக்கையும் நேராக்குங்கள். கரடுமுரடான சாலையை மென்மையாக்குங்கள். பிறகு, கர்த்தருடைய மகிமை வெளிப்படும். கர்த்தருடைய மகிமையை ஜனங்கள் அனைவரும் காண்பார்கள். ஆம், கர்த்தர் அவராகவே இவற்றைச் சொன்னார்!” ஒரு குரல் சொன்னது, “பேசு!” எனவே ஒருவன் கேட்டான், “நான் என்ன சொல்லவேண்டும்?” அந்த குரல் சொன்னது, “ஜனங்கள் என்றென்றைக்கும் வாழமாட்டார்கள். அனைத்து ஜனங்களும் புல்லைப்போன்றவர்கள். அவர்களது நன்மை ஒரு காட்டு மலர் போன்றது. கர்த்தரிடமிருந்து ஒரு வல்லமையான காற்று புல்மேல் வீசும். அந்த புல்களும் காட்டு மலர்களும் வாடி செத்துப்போகும். உண்மையாகவே அனைத்து ஜனங்களும் புல்லைப்போன்றவர்கள். புல் வாட்டம் அடையும். பூக்கள் வாடும். ஆனால், தேவனுடைய வார்த்தை என்றென்றும் தொடர்ந்து இருக்கும்.” சீயோனே! உன்னிடம் சொல்வதற்கான நற்செய்திகள் உள்ளன. உயரமான மலைக்கு மேலே போய் நற்செய்திகளை சத்தமாய் சொல்! எருசலேமே! உன்னிடம், சொல்வதற்கான நற்செய்திகள் உள்ளன அஞ்சவேண்டாம். சாந்தமாய் பேசு! யூதாவிலுள்ள அனைத்து நகரங்களிலும் இந்தச் செய்திகளைக் கூறு: “பார், உன் தேவன் இங்கே இருக்கிறார்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் வல்லமையோடு வருகிறார். எல்லா ஜனங்களையும் ஆள அவர் தமது வல்லமையைப் பயன்படுத்துவார். கர்த்தர் தமது ஜனங்களுக்காக விருதுகளைக் கொண்டுவருவார். அவரோடு அவர்களது பலன் இருக்கும். ஒரு மேய்ப்பன் தனது ஆடுகளை வழிநடத்திச் செல்வது போன்று கர்த்தர் தமது ஜனங்களை வழி நடத்துகிறார். கர்த்தர் தமது வல்லமையைப் பயன்படுத்தி அவரது ஆடுகளை ஒன்று சேர்ப்பார். கர்த்தர் சிறிய ஆடுகளை எடுத்து தனது கைகளில் வைத்துக்கொள்வார். அவற்றின் தாய் ஆடுகள் அவர் பின்னால் நடக்கும்.

ஏசாயா 40:3-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும், கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று. பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல். புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது. சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு. இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் சொல்லுகிறது. மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.

ஏசாயா 40:3-11

ஏசாயா 40:3-11 TAOVBSIஏசாயா 40:3-11 TAOVBSIஏசாயா 40:3-11 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்