ஏசாயா 40:27-31
ஏசாயா 40:27-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“என் நிலைமை யெகோவாவுக்கு மறைவாயிருக்கிறது; இறைவன் எனக்குரிய நீதியைக் கண்டும் காணாதிருக்கிறார்” என்று யாக்கோபே நீ ஏன் சொல்கிறாய்? இஸ்ரயேலே, ஏன் முறையிடுகிறாய்? நீங்கள் அறியவில்லையோ? நீங்கள் கேள்விப்படவில்லையோ? யெகோவாவே நித்திய இறைவன், பூமியின் எல்லைகளைப் படைத்தவரும் அவரே. அவர் களைத்துப் போவதுமில்லை, சோர்ந்துபோவதுமில்லை. அவரின் ஞானத்தை யாராலும் அளவிடமுடியாது. அவர் களைப்புற்றோருக்கு பெலன் கொடுக்கிறார்; பெலவீனருக்கு வலிமையைக் கூட்டுகிறார். இளைஞர் களைத்து சோர்ந்துபோவார்கள், வாலிபர் இடறி விழுவார்கள். ஆனால், யெகோவாவிடம் நம்பிக்கையோடேக் காத்திருப்போர் தங்கள் பெலனைப் புதுப்பித்துக்கொள்வார்கள். அவர்கள் கழுகுகளைப்போல் சிறகுகளை விரித்து உயரே பறப்பார்கள்; அவர்கள் ஓடுவார்கள், சோர்வடையமாட்டார்கள்; அவர்கள் நடப்பார்கள், களைப்படையமாட்டார்கள்.
ஏசாயா 40:27-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி யெகோவாவுக்கு மறைவானது என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ ஏன் சொல்லவேண்டும்? பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது. சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகச்செய்கிறார். இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபர்களும் இடறிவிழுவார்கள். யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் இறக்கைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள், நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.
ஏசாயா 40:27-31 பரிசுத்த பைபிள் (TAERV)
யாக்கோபே, இது உண்மை. இஸ்ரவேலே, நீ இதனை நம்பவேண்டும்! எனவே, நீ எதற்காக இதைக் கூறுகிறாய்? “கர்த்தர் நான் வாழும் வழியை அறியமாட்டார். தேவன் என்னைக் கண்டுபிடித்துத் தண்டிக்கமாட்டார்.” தேவனாகிய கர்த்தர் மிகவும் ஞானமுள்ளவர் என்று நீ உறுதியாகக் கேள்விப்பட்டு அறிந்திருக்கிறாய். ஜனங்கள் அவருக்கு தெரிந்ததையெல்லாம் கற்றுக்கொள்ள இயலாது. கர்த்தர் சோர்வடையமாட்டார். அவருக்கு ஓய்வு தேவையில்லை. கர்த்தர் தொலைதூர இடங்களைப் பூமியில் படைத்தார். கர்த்தர் என்றென்றும் ஜீவிக்கிறார். கர்த்தர் பலவீனமானவர்கள் பலம் பெற உதவுகிறார். ஜனங்கள் வல்லமையில்லாமல் இருந்தால் வல்லமை பெற கர்த்தர் காரணமாகிறார். இளைஞர்கள் சோர்வடைந்து ஓய்வு தேவை என நினைக்கின்றனர் சிறு பையன்களும் கூடத் தடுமாறி விழுகிறார்கள். ஆனால், கர்த்தரை நம்புகிற ஜனங்கள் புதிய சிறகுகள் முளைக்கின்ற கழுகுகளைப்போல மீண்டும் பலம் பெறுகின்றனர். இந்த ஜனங்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள். இந்த ஜனங்கள் நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.
ஏசாயா 40:27-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்? பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது. சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.