ஏசாயா 4:2-6

ஏசாயா 4:2-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும். அப்பொழுது ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது, சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான். அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும். பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.

ஏசாயா 4:2-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்த நாளிலே யெகோவாவின் கிளை, அழகுடனும் மகிமையுடனும் விளங்கும்; இஸ்ரயேல் நாட்டில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு அந்த நாட்டின் கனி பெருமையும், மகிமையுமாகும். அப்பொழுது சீயோனில் விடப்பட்டவர்களாய், எருசலேம் நகரில் மீந்திருப்பவர்கள், பரிசுத்தர்கள் என அழைக்கப்படுவார்கள்; வாழ்வதற்கென்று எருசலேமில் பேரெழுதப்பட்ட எல்லோரும் அப்படியே அழைக்கப்படுவார்கள். யெகோவா சீயோனின் பெண்களுடைய அசுத்தத்தைக் கழுவி, அவர் எருசலேமிலிருந்து அதன் இரத்தக் கறைகளை நியாயத்தின் ஆவியாலும், நெருப்புத் தணலையொத்த ஆவியாலும் சுத்திகரிப்பார். அதன்பின் சீயோன் மலை முழுவதற்கு மேலாகவும், அங்கு சபை கூடுகிறவர்களுக்கு மேலாகவும் பகலிலே புகை மேகத்தையும், இரவிலே நெருப்புச் சுவாலையின் பிரகாசத்தையும் யெகோவா உண்டாக்குவார்; இந்த எல்லா மகிமைக்கு மேலாகவும் ஒரு விதான மண்டபம் உண்டாயிருக்கும். அது பகலின் வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் கூடாரமாகவும், நிழலாகவும் இருக்கும். அது புயலிலிருந்தும், மழையிலிருந்தும் மக்களைப் பாதுகாக்கும் புகலிடமாயும், மறைவிடமாயும் இருக்கும்.

ஏசாயா 4:2-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே யெகோவாவின் கிளையானது அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும். அப்பொழுது ஆண்டவர், சீயோன் பெண்களின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது, சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தங்கியிருந்து ஜீவனுக்கென்று பெயர் எழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான். அப்பொழுது யெகோவா சீயோன் மலையிலுள்ள எல்லா குடியிருப்புகளிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும். பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.

ஏசாயா 4:2-6 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்போது, கர்த்தருடைய செடியானது (யூதா) அழகாகவும் உயர்வாகவும் இருக்கும். இஸ்ரவேலில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்கள் தம் நாட்டின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் அடைவார்கள். அப்போது, சீயோனிலும் எருசலேமிலும் வாழ்கின்ற மீதியான ஜனங்கள் பரிசுத்தமானவர்கள் என்று அழைக்கப்படுவார்கள். சிறப்புப் பெயர் பட்டியலில் தம் பெயருள்ள அனைவருக்கும் இது நிகழும். பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள். சீயோன் பெண்களின் இரத்தத்தை கர்த்தர் கழுவிவிடுவார். எருசலேமில் உள்ள அனைத்து இரத்தக் கறைகளையும் கர்த்தர் கழுவி போக்குவார். தேவன் நீதியின் ஆவியினால் நியாயம்தீர்ப்பார். சுட்டெரிப்பின் ஆவியினால் அனைத்தையும் சுத்தப்படுத்துவார். அப்போது, தேவன் தன் ஜனங்களோடு இருப்பதை நிரூபிப்பார். அந்நாளின் பகலில், தேவன் புகை மேகத்தை தோன்றச் செய்வார். இரவில், தேவன் ஒளிரும் நெருப்புச்சுடரையும் தோன்றச் செய்வார். இச்சாட்சிகள் வானத்தில் ஒவ்வொரு கட்டிடத்தின் மேலும் சீயோன் மலையில் நடைபெறும் ஒவ்வொரு ஜனங்கள் கூட்டத்தின் மேலும் தோன்றும், ஒவ்வொருவரைச் சுற்றிலும் அவர்களைப் பாதுகாக்க ஒரு மூடி அமையும். இம்மூடியானது பாதுகாப்புக்கான இடம். இது ஜனங்களை சூரியனின் வெப்பத்திலிருந்து காக்கும். இம்மூடி வெள்ளம் மற்றும் மழையிலிருந்து காத்துக்கொள்ள உதவும்.