ஏசாயா 37:9-33
ஏசாயா 37:9-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவ்வேளையில் எத்தியோப்பிய அரசனான திராக்கா, தன்னை எதிர்த்து யுத்தம் செய்ய வருகிறான் என்று அசீரிய அரசன் சனகெரிப் கேள்விப்பட்டான். அதைக் கேட்டவுடன் யுத்தத்திற்கு அவனை சந்திக்கப் போகுமுன்பு பின்வரும் செய்தியுடன் தூதுவரை எருசலேமுக்கு எசேக்கியாவிடம் அனுப்பினான்: “யூதாவின் அரசனான எசேக்கியாவுக்கு நீங்கள் சொல்லவேண்டியதாவது: ‘எருசலேம் அசீரிய அரசன் கையில் ஒப்புக்கொடுக்கப்படாது’ என்று, நீ நம்பியிருக்கிற உன் இறைவன் சொல்லும்போது, அதைக்கேட்டு நீ ஏமாறாதே. அசீரிய அரசர்கள் எல்லா நாடுகளையும் முழுவதும் அழித்து அவற்றிற்குச் செய்ததை நீ நிச்சயம் கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ எப்படித் தப்புவாய்? எனது முற்பிதாக்கள் அழித்த கோசான், ஆரான், ரேசேப் ஆகிய நாடுகளையும், தெலாசாரில் வசிக்கும் ஏதேன் மக்களையும் அவர்களின் தெய்வங்கள் காப்பாற்றினவா? ஆமாத்தின் அரசன் எங்கே? அர்பாத்தின் அரசன் எங்கே? செப்பர்வாயீம், ஏனா, இவ்வா ஆகிய பட்டணங்களின் அரசர்கள் எங்கே? சொல்லுங்கள்.” எசேக்கியா கடிதத்தைத் தூதுவர்களிடமிருந்து வாங்கி அதை வாசித்தான். பின்பு அவன் யெகோவாவினுடைய ஆலயத்திற்குப்போய் யெகோவாவுக்கு முன்பாக அதை விரித்தான். எசேக்கியா யெகோவாவிடம் மன்றாடி, “சேனைகளின் யெகோவாவே, கேருபீன்களுக்கிடையில் வீற்றிருக்கும் இஸ்ரயேலின் இறைவனே, பூமியின் அரசுகள் எல்லாவற்றின்மேலும் நீர் ஒருவரே இறைவன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர் நீரே. யெகோவாவே, உம்முடைய செவியைச் சாய்த்துக்கேளும். யெகோவாவே, உம்முடைய கண்களைத் திறந்து பாரும். உயிரோடிருக்கும் இறைவனை நிந்திப்பதற்கு சனகெரிப் அனுப்பியுள்ள வார்த்தைகள் எல்லாவற்றையும் கேளும். “யெகோவாவே, அசீரிய அரசர்கள் அந்த மக்கள் கூட்டங்களையும், அவர்களுடைய நிலங்களையும் பாழாக்கியிருப்பது உண்மைதான். அவர்கள் அவர்களுடைய தெய்வங்களையுங்கூட நெருப்பில்போட்டு அழித்துவிட்டார்கள். ஏனெனில் அவை மனிதரின் கைகளினால் வடிவமைக்கப்பட்ட மரமும், கல்லுமேயல்லாமல் தெய்வங்களல்ல. இப்போதும் எங்கள் இறைவனாகிய யெகோவாவே, நீர் மட்டுமே இறைவனாகிய யெகோவா என்று பூமியிலுள்ள எல்லா அரசுகளும் அறியும்படி அவனுடைய கையிலிருந்து எங்களை விடுவியும்” என்று மன்றாடினான். அதன்பின் ஆமோஸின் மகன் ஏசாயா, எசேக்கியாவுக்கு ஒரு செய்தியை அனுப்பினான். “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: அசீரிய அரசன் சனகெரிப்பைக் குறித்து நீ என்னிடம் விண்ணப்பம் பண்ணினாயே, ஆனபடியால் அவனுக்கெதிராக யெகோவா உரைத்த வார்த்தை இதுவே: “சீயோனின் கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து கேலி செய்கிறாள். எருசலேமின் மகள் நீ பயந்து ஓடுவதைப் பார்த்து, உன் பின்னால் நின்று ஏளனத்துடன் தலையை அசைக்கிறாள். நீ யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் சத்தமாய்ப் பேசி, அகங்காரக் கண்களினால் நோக்கினாய்? இஸ்ரயேலின் பரிசுத்தருக்கு எதிராக அல்லவா? உனது தூதுவர்கள் மூலம் நீ ஆண்டவரை நிந்தித்து, ‘நான் அநேக தேர்களுடன் மலைகளின் உச்சிகளுக்கும் லெபனோனின் சிகரங்களுக்கும் ஏறினேன். அங்குள்ள மிக உயர்ந்த கேதுரு மரங்களையும் மிகச்சிறந்த தேவதாரு மரங்களையும் வெட்டி வீழ்த்தினேன். அதன் உயர்ந்த கடைசி எல்லைக்கும், அதன் அடர்த்தியான காட்டுப் பகுதிக்கும் போனேன். நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன். என் உள்ளங்கால்களினால் எகிப்தின் நீரோடைகள் எல்லாவற்றையும் வற்றப்பண்ணினேன்’ என்றும் சொன்னாய். “வெகுகாலத்துக்கு முன்னமே நான் அதைத் திட்டமிட்டேன் என்பதை நீ கேள்விப்படவில்லையா? பூர்வ நாட்களில் நான் அதைத் திட்டமிட்டேன்; இப்பொழுது அவற்றை நடைபெறச் செய்திருக்கிறேன். அதனால் நீ அரணான பட்டணங்கள் எல்லாவற்றையும் கற்குவியலாக மாற்றினாய். அவர்களின் மக்கள் பெலனற்று, சோர்வுற்று வெட்கப்பட நேரிட்டது. அவர்கள் வயல்களிலுள்ள செடிகளைப்போலவும், இளம் முளைகளைப் போலவும், வளருமுன் வெப்பத்தில் பொசுங்கிப்போகும் கூரைமேல் முளைக்கும் புல்லைப்போலவும் ஆனார்கள். “ஆனால் நீ எங்கே தங்கியிருக்கிறாய், எப்போது வருகிறாய், போகிறாய் என்பதும், நீ எனக்கு எதிராகக் கோபங்கொண்டிருக்கிறாய் என்பதும் எனக்குத் தெரியும். நீ எனக்கு எதிராகக் கோபங்கொண்டு, எனக்குக் காட்டும் அவமதிப்பும் என் காதுகளுக்கு எட்டியது. ஆகையால் என்னுடைய கொக்கியை உன் மூக்கிலும், என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியாய் உன்னைத் திரும்பச்செய்வேன். “எசேக்கியாவே, இதுவே உனக்கு அடையாளமாய் இருக்கும்: “இந்த வருடம் தானாக விளைகிறதை நீங்கள் சாப்பிடுவீர்கள்; இரண்டாம் வருடத்தில் அதன் விதையிலிருந்து முளைப்பதைச் சாப்பிடுவீர்கள். ஆனால் மூன்றாம் வருடத்தில் நீங்களாக விதைத்து, அறுத்து, திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவீர்கள். யூதாவின் வம்சத்தில் தப்பி மீதியாயிருப்பவர்கள் மீண்டும் கீழே வேரூன்றி மேலே கனி கொடுப்பார்கள். ஏனெனில் எருசலேமிலிருந்து மீதியானவர்களும், சீயோன் மலையிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் கூட்டத்தாரும் வருவார்கள். சேனைகளின் யெகோவாவின் வைராக்கியமே இதை நிறைவேற்றும். “ஆகையால், அசீரிய அரசனைப் பற்றி யெகோவா சொல்வது இதுவே: “அவன் இந்தப் பட்டணத்திற்குள் செல்வதில்லை, இதின்மேல் அம்பை எய்வதுமில்லை. அவன் தனது கேடகத்தைப் பிடித்துக்கொண்டு அதற்குமுன் வருவதுமில்லை, அல்லது அதற்கு விரோதமாக முற்றுகைத்தளம் அமைப்பதுமில்லை.
ஏசாயா 37:9-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு போர்செய்யப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்திற்குப் பிரதிநிதிகளை அனுப்பி: நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை ஏமாற்ற இடம்கொடாதே. இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் அழித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ? என் முன்னோர்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் மக்களையும் அவர்களுடைய தெய்வங்கள் தப்புவித்ததுண்டோ? ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார். எசேக்கியா பிரதிநிதிகளின் கையிலிருந்த கடிதத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போய் அதைக் யெகோவாவுக்கு முன்பாக விரித்து, யெகோவாவை நோக்கி: சேனைகளின் யெகோவாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்செய்கிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். யெகோவாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; யெகோவாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும். யெகோவாவே, அசீரியா ராஜாக்கள் அந்த தேசங்களையும், அவர்கள் நிலங்களையும் நாசமாக்கி, அவர்களுடைய தெய்வங்களை நெருப்பிலே போட்டுவிட்டது உண்மைதான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனிதர்கள் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை முற்றிலுமாக அழித்தார்கள். இப்போதும் எங்கள் தேவனாகிய யெகோவாவே, நீர் ஒருவரே யெகோவா என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் செய்தான். அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்செய்தாயே. அவனைக்குறித்துக் யெகோவா சொல்கிற வசனமாவது: மகளாகிய சீயோன் என்னும் கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்செய்கிறாள்; மகளாகிய எருசலேம் உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள். யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாக உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாக அல்லவோ உன் கண்களை மேட்டிமையாக ஏறெடுத்தாய். உன் ஊழியக்காரர்களைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் உச்சிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், விலையுயர்ந்த தேவதாரு மரங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைவரை, அதின் செழுமையான காடுவரை வருவேன் என்றும், நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்காலினால் பாதுகாப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும்செய்தேன் என்றும் சொன்னாய். நான் வெகுகாலத்திற்குமுன் அதை நியமித்து, ஆரம்பநாட்கள்முதல் அதைத் திட்டம்செய்தேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ பாதுகாப்பான பட்டணங்களைப் பாழான மண்மேடுகளாக்கும்படி நானே அதைச் சம்பவிக்கச்செய்தேன். அதினாலே அவைகளின் குடிமக்கள் கை இளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் தாவரத்திற்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கி வளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமமானார்கள். உன் உட்காருதலையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாகக் கொந்தளிக்கிறதையும் அறிவேன். நீ எனக்கு விரோதமாகத் கொந்தளித்து, வீராப்பு பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பச்செய்வேன். உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருடத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருடத்திலே தானாக விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருடத்திலோ விதைத்து அறுத்து, திராட்சைத்தோட்டங்களை ஏற்படுத்தி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவீர்கள். யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள். மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய யெகோவாவின் வைராக்கியம் இதைச் செய்யும். ஆகையால் யெகோவா அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் நுழைவதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு முன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கோட்டைமதில் போடுவதுமில்லை.
ஏசாயா 37:8-33 பரிசுத்த பைபிள் (TAERV)
அசீரியா ராஜா ஒரு அறிக்கையைப் பெற்றான். அந்த அறிக்கை, “எத்தியோப்பியா ராஜாவாகிய திராக்கா உம்மோடு போரிட வருகிறான்” என்று சொன்னது. எனவே, அசீரியா ராஜா லாகீசை விட்டு லிப்னாவுக்குத் திரும்பிப்போனான். தளபதி இதனைக் கேள்விப்பட்டான். அவன் லிப்னா நகரத்திற்குப்போனான். அங்கே அசீரியா ராஜா போரிட்டுக்கொண்டிருந்தான். பிறகு தளபதி எசேக்கியாவிற்குத் தூதுவர்களை அனுப்பினான். “நீங்கள் இவற்றை யூத ராஜாவாகிய எசேக்கியாவிடம் சொல்லவேண்டுவன: ‘நீங்கள் நம்புகிற தெய்வங்களால் முட்டாளாக வேண்டாம். “அசீரியா ராஜாவால் எருசலேம் தோற்கடிக்கப்படும்படி தேவன் விடமாட்டார்” என்று சொல்லாதீர்கள். கவனியுங்கள், அசீரியாவின் ராஜாக்கள் மற்ற நாடுகளுக்குச் செய்ததைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவர்கள் மற்றவர்களை முற்றிலுமாய் அழித்தார்கள். நீங்கள் மீட்கப்படுவீர்கள் என்று நம்புகிறீர்களா? இல்லை. அந்த ஜனங்களின் தெய்வங்கள் அவர்களைக் காப்பாற்றினார்களா? இல்லை. எனது முற்பிதாக்கள் அவர்களை அழித்தனர். எனது ஜனங்கள் கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் ஜனங்களையும் தோற்கடித்தனர். ஆமாத் அர்பாத் ராஜா எங்கே இருக்கிறார்கள்? செப்பர்வாயீம் ராஜா எங்கே இருக்கிறான்? ஏனா, ஈவா நகரங்களின் ராஜாக்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் முறியடிக்கப்பட்டனர்! அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனர்!’” என்று தளபதி சொன்னான். எசேக்கியா தூதுவர்களிடமிருந்து செய்தியைப் பெற்று வாசித்தான். பிறகு, எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திற்குச் சென்றான். எசேக்கியா கடிதத்தைத் திறந்து கர்த்தருக்கு முன்பு வைத்தான். எசேக்கியா கர்த்தரிடம் ஜெபம் செய்யத் தொடங்கினான். எசேக்கியா சொன்னான்: “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே! நீர் கேருபீன்களின் மேல் ராஜாவாக அமர்ந்திருக்கிறீர். நீர் மட்டுமே பூமியிலுள்ள அனைத்து அரசுகளையும் ஆளும் தேவன்! நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர்! கர்த்தாவே நான் சொல்வதைக் கேளும். சனகெரிப்பிடமிருந்து வந்த செய்தியை உமது கண்களைத் திறந்து பாரும். எனக்குச் சனகெரிப் இந்தச் செய்தியை அனுப்பினான். ஜீவனுள்ள தேவனாகிய உம்மைப்பற்றி தீயச் செய்திகளை இது சொல்கிறது. கர்த்தாவே, அசீரியாவின் ராஜா உண்மையிலேயே அனைத்து நாடுகளையும் ஜனங்களையும் அழித்திருக்கிறான். கர்த்தாவே, அந்த நாடுகளில் உள்ள தெய்வங்களை அசீரியாவின் ராஜாக்கள் எரித்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவை உண்மையான தெய்வங்கள் அல்ல. அவைகள் மனிதர்களால் செய்யப்பட்ட சிலைகள்தான். அவைகள் மரமும் கல்லும் தான். எனவேதான் அசீரியாவின் ராஜாக்களால் அவற்றை அழிக்க முடிந்தது. ஆனால் நீரோ எமது தேவனாகிய கர்த்தர்! எனவே அசீரியா ராஜாவின் வல்லமையிலிருந்து எங்களைக் காப்பாற்றும். பிறகு, மற்ற நாடுகள் எல்லாம் கர்த்தராகிய நீர் மட்டுமே ஒரே தேவன் என்பதை அறிந்துகொள்ளும்” என்று ஜெபித்தான். பிறகு ஆமோத்சின் குமாரனான ஏசாயா எசேக்கியாவிற்குச் செய்தி அனுப்பினான். ஏசாயா, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுவது என்னவென்றால், ‘அசீரியா ராஜாவாகிய சனகெரீப்பிடமிருந்து வந்த செய்தியைப்பற்றி நீ ஜெபம் செய்தாய். நான் உனது ஜெபத்தைக் கேட்டேன்.’ “சனகெரிப்பைக் குறித்து கர்த்தரிடமிருந்து வந்த செய்தி இதுதான்: “அசீரியா ராஜாவே, சீயோனின் (எருசலேம்) கன்னிமகள், ‘நீ முக்கியமானவன்’ என்று எண்ணுவதில்லை. உன்னைப் பார்த்து அவள் சிரிக்கிறாள். எருசலேமின் குமாரத்தி உன்னை பரிகாசம் செய்கிறாள். உன்னைப் பார்த்து அவள் சிரிக்கிறாள். ஆனால், நீ யாரை பரிகாசம் செய்தாய்? நீ யாருக்கு எதிராகப் பேசினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு எதிராகப் பேசினாய். அவரைவிட நீ உத்தமன்போல நடித்தாய். எனது கர்த்தராகிய ஆண்டவரைப்பற்றி எதிராகப் பேச உனது வேலைக்காரர்களைப் பயன்படுத்தினாய். நீ, ‘நான் வல்லமையுள்ளவன்! என்னிடம் பற்பல இரதங்கள் உள்ளன. எனது வல்லமையால் நான் லீபனோனைத் தோற்கடித்தேன். லீபனோனின் மலை உச்சிகளில் நான் ஏறினேன். நான் லீபனோனில் உள்ள உயரமான மரங்களை (படைகள்) வெட்டித் தள்ளினேன். நான் மலையின் உச்சிக்கும் காட்டின் மிக ஆழமான பகுதிக்கும் சென்றிருக்கிறேன் என்று கூறினாய். நான் கிணற்றைத் தோண்டி புதிய இடங்களிலிருந்து தண்ணீரைக் குடித்திருக்கிறேன். எகிப்தின் ஆறுகளை வற்றச்செய்து அந்நாட்டில் நான் நடந்து சென்றிருக்கிறேன்.’ “‘இதைத்தான் நீ கூறினாய். ஆனால் நான் சொன்னவற்றை நீ கேட்டாயா? நீண்ட காலத்துக்கு முன்னால் தேவனாகிய நானே இவற்றைத் திட்டமிட்டேன். பழங்காலத்திலிருந்து நானே அதைத் திட்டமிட்டேன். இப்போதும் நானே அதை நடப்பித்தேன். பலமான நகரங்களையெல்லாம் அழிக்கும்படி நான் உன்னை அனுமதித்தேன். நான் அந்த நகரங்களைப் பாழான மண்மேடாகும்படி மாற்றினேன். அந்நகரங்களில் வாழ்ந்த ஜனங்கள் பலவீனமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் அச்சமும் குழப்பமும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் வயல்வெளியில் உள்ள புல்லைப்போல வெட்டப்படுகிறவர்களாக இருந்தார்கள். வீடுகளுக்கு மேலே வளர்ந்துள்ள புல்லைப்போல அவர்கள் இருந்தனர். அது உயரமாக வளருவதற்கு முன் வனாந்தரத்து வெப்பக்காற்றால் எரிக்கப்படுகிறது. உனது படையைப்பற்றியும், போர்களைப்பற்றியும் எனக்குத் தெரியும். நீ எப்பொழுது ஓய்வெடுத்தாய், எப்பொழுது போருக்குப்போனாய் என்று எனக்குத் தெரியும். போரிலிருந்து எப்பொழுது வீட்டிற்கு வந்தாய் என்றும் எனக்குத் தெரியும். என்னிடத்தில் எப்போது கலக்கமடைந்தாய் என்றும் எனக்குத் தெரியும். என் மீது நீ கோபத்தோடு இருக்கிறாய். உனது பெருமையான சொற்களை நான் கேட்டேன். எனவே, நான் உனது மூக்கில் கொக்கியை மாட்டுவேன். நான் உனது வாயில் கடிவாளத்தைப்போடுவேன். நீ வந்த அதே சாலையில் என் நாட்டை விட்டு நீ போகும்படி பலவந்தப்படுத்துவேன்.’” பிறகு கர்த்தர் எசேக்கியாவிடம், “நான் சொன்னவையெல்லாம் உண்மை என்பதைக் காட்ட உனக்கு ஒரு அடையாளம் தருவேன். இந்த ஆண்டு எந்த தானியத்தையும் விதைக்க மாட்டாய். எனவே இந்த ஆண்டு நீ சென்ற ஆண்டின் விளைச்சலில் காடு போல வளர்ந்த தானியம் மட்டுமே உண்பாய். ஆனால் மூன்று ஆண்டுகளில் நீ பயிர் செய்த தானியத்தையே உண்பாய். நீ அவற்றை அறுவடை செய்வாய். உண்பதற்கு உன்னிடம் ஏராளமாக இருக்கும். நீ திராட்சையைப் பயிர் செய்து அதன் பழங்களை உண்பாய். “யூதாவின் குடும்பத்தில் தப்பி மீதியாய் இருக்கிற ஜனங்கள் மறுபடியும் வளர ஆரம்பிப்பார்கள். அந்த ஜனங்கள், தரையில் தன் வேர்களை ஆழமாகச் செலுத்தி உறுதியாக வளர்ந்த செடிகளைப்போன்றவர்கள். அந்த ஜனங்களுக்கு மிகுதியான பழங்கள் (பிள்ளைகள்) பூமியின்மேல் இருக்கும். ஏனெனில் எருசலேமை விட்டு வெளியே வந்த சில ஜனங்கள் மட்டும் உயிரோடு இருப்பார்கள். சீயோன் மலையில் இருந்து உயிரோடு வந்தவர்களும் இருப்பார்கள்” சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய பலமான அன்பு இதனைச் செய்யும். எனவே, அசீரியா ராஜாவைப்பற்றி ஒரு செய்தி கர்த்தர் இதைக் கூறுகிறார்
ஏசாயா 37:9-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்தவொட்டாதே. இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ? என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ? ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார். எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து, கர்த்தரை நோக்கி: சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும். கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி, அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள். இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் பண்ணினான். அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணினாயே. அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள். யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய். உன் ஊழியக்காரரைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு விருட்சங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும், நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்காலினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும்பண்ணினேன் என்றும் சொன்னாய். நான் வெகுகாலத்துக்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள்முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகளாக்கும்படி நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன். அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கி வளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமானமானார்கள். உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன். நீ எனக்கு விரோதமாய்த் கொந்தளித்து, வீரியம்பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பப்பண்ணுவேன். உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள். யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள். மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும். ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு முன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை.