ஏசாயா 35:1-10

ஏசாயா 35:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பாலைவனமும் வறண்ட நிலமும் மகிழும். வனாந்திரம் மகிழ்ந்து பூக்கும். அது லீலி பூப்பதுபோல் பூக்கும். அது வளமாய் வளர்ந்து மகிழ்ச்சியுடன் ஆனந்த சத்தமிடும். லெபனோனின் மகிமையும், கர்மேல், சாரோனின் சிறப்பும் அதற்குக் கொடுக்கப்படும். யெகோவாவின் மகிமையையும், நமது இறைவனின் மகத்துவத்தையும் காண்பார்கள். தளர்ந்த கைகளைப் பலப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களைத் திடப்படுத்துங்கள். இருதயத்தில் பதற்றமுள்ளோருக்கு, “திடன்கொள்ளுங்கள், பயப்படாதிருங்கள்; இதோ, உங்கள் இறைவன் உங்கள் பகைவரை பழிதீர்க்கவும், பதிலளிக்கவும் வருவார், அவர் வந்து உங்களை விடுவிப்பார்” என்று சொல்லுங்கள். அப்பொழுது குருடரின் கண்கள் பார்வை பெறும், செவிடரின் காதுகளும் திறக்கப்படும். முடவன் மானைப்போல் துள்ளுவான், ஊமையின் நாவும் ஆனந்த சத்தமிடும்; வனாந்திரத்திலிருந்து தண்ணீரும், பாலைவனத்திலிருந்து நீரோடைகளும் பாயும். சுடுமணல் நீர்த் தடாகமாகும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாய் பொங்கிவரும். நரிகள் தங்கும் இடங்களில் புல்லும், கோரையும், நாணலும் வளர்ந்து நிற்கும். அங்கே பிரதான வீதி ஒன்றிருக்கும், அது பரிசுத்த வழி எனப்படும். அசுத்தர் அதன் வழியே கடந்து செல்லமாட்டார்கள். இறைவனுடைய வழியில் நடப்பவர்களுக்கென்றே அது இருக்கும். கொடிய மூடர் அதில் திரியமாட்டார்கள். அங்கு சிங்கம் இருப்பதில்லை; எந்தவொரு கொடிய மிருகமாவது அங்கே செல்வதில்லை, அங்கே காணப்படுவதுமில்லை. மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள். யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள். அவர்கள் பாடலுடன் சீயோனுக்குள் செல்வார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுடைய தலையின்மேலிருக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அடைவார்கள், துக்கமும் பெருமூச்சும் பறந்தோடிவிடும்.

ஏசாயா 35:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

வனாந்திரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, பாலைவனம் மகிழ்ந்து, மலரைப்போல செழிக்கும். அது மிகுதியாகச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்குக் கொடுக்கப்படும்; அவர்கள் யெகோவாவுடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள். தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களைக் காப்பாற்றுவார் என்று சொல்லுங்கள். அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோகும். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்திரத்திலே தண்ணீர்களும், பாலைவனத்திலே ஆறுகளும் பாய்ந்தோடும். வெட்டாந்தரை தண்ணீர் குளமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் இருந்த இடங்களிலே புல்லும் கோரையும் நாணலும் உண்டாகும். அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை. அங்கே சிங்கம் இருப்பதில்லை; கொடியமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள். யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.

ஏசாயா 35:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

வறண்ட வனாந்திரம் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறும். வனாந்திரம் சந்தோஷம் அடைந்து பூவைப்போல வளரும். வனாந்திரம் முழுவதும் பூக்களால் நிறைந்து அதன் மகிழ்ச்சியைக் காட்டத் தொடங்கும். அது பார்ப்பதற்கு வனாந்திரம் மகிழ்ச்சியுடன் ஆடிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றும். அந்த வனாந்திரமானது, லீபனோன் காடுகளைப்போலவும், கர்மேல் மலையைப்போலவும், சாரோன் பள்ளத்தாக்குபோலவும் அழகாக மாறும். இது நிகழும் ஏனென்றால், ஜனங்களனைவரும் கர்த்தருடைய மகிமையைக் காண்பார்கள். நம் தேவனுடைய மேன்மையை ஜனங்கள் காண்பார்கள். பலவீனமான கைகளை மீண்டும் பலப்படுத்துங்கள். பலவீனமான முழங்கால்களை பலப்படுத்துங்கள். ஜனங்கள் அஞ்சி குழம்பினார்கள். அந்த ஜனங்களிடம் கூறுங்கள், “பலமாக இருங்கள் அஞ்சவேண்டாம்!” பாருங்கள், உங்கள் தேவன் வருவார். உங்கள் பகைவர்களைத் தண்டிப்பார். அவர் வருவார். உங்களுக்கு விருதினைத் தருவார். கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவார். குருடர்களின் கண்கள் திறக்கப்படும். செவிடர்களின் காதுகள் திறக்கும். முடவர்கள் மானைப்போல நடனம் ஆடுவார்கள். பேச முடியாத ஜனங்கள் தங்கள் குரலைப் பயன்படுத்தி மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடுவார்கள். வனாந்தரத்தில் நீரூற்று கிளம்பிப் பாயும்போது இது நிகழும். வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் பாயும். இப்பொழுது ஜனங்கள் கானல் தண்ணீரைப் பார்க்கின்றனர். இது தண்ணீரைப்போல தோன்றும். ஆனால் அந்த நேரத்தில் அங்கே உண்மையான தண்ணீர் குளங்களும் இருக்கும். வறண்ட நிலத்தில் கிணறுகள் இருக்கும். தண்ணீரானது பூமியிலிருந்து பாயும். ஒரு காலத்தில் காட்டு மிருகங்கள் இருந்த இடத்தில் உயரமான நீர்த்தாவரங்கள் வளரும். அந்தக் காலத்திலே, அங்கே ஒரு சாலை இருக்கும். இந்த நெடுஞ்சாலை “பரிசுத்தமான சாலை” என்று அழைக்கப்படும். தீயவர்கள் அச்சாலையில் நடக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். தேவனைப் பின்பற்றாத எவரும் அச்சாலையில் போகமாட்டார்கள். அந்தச் சாலையின் எவ்வித ஆபத்தும் இருக்காது. ஜனங்களைக் கொல்லுகின்ற சிங்கங்கள் அந்தச் சாலையில் இருக்காது. அந்தச் சாலையில் ஆபத்தைத் தரும் மிருகங்கள் எதுவும் இராது. அந்தச் சாலை தேவனால் காப்பாற்றப்பட்டவர்களுக்கே உரியது. தேவன் அவரது ஜனங்களை விடுதலை செய்வார். அந்த ஜனங்கள் அவரிடம் திரும்பி வருவார்கள். இந்த ஜனங்கள் சீயோனுக்குள் வரும்போது அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். என்றென்றும் ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்களின் மகிழ்ச்சியானது அவர்களின் தலையில் கிரீடம்போன்று இருக்கும். மகிழ்ச்சியும் சந்தோஷமும் அவர்களை நிரப்பும். துயரமும், துக்கமும் வெகுதூரம் விலகிப்போகும்.

ஏசாயா 35:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள். தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோகும். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும். வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் தாபரித்துக்கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும். அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை. அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள். கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.