ஏசாயா 30:29-32
ஏசாயா 30:29-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இரவில் ஒரு பரிசுத்த விழாவைக் கொண்டாடுவதுபோல, நீங்கள் பாடுவீர்கள். இஸ்ரயேலின் கற்பாறையாகிய யெகோவாவின் மலைக்கு மக்கள் புல்லாங்குழலுடன் போவதுபோல, உங்கள் உள்ளமும் மகிழும். யெகோவா தமது மாட்சிமையான குரலை மனிதர் கேட்கும்படி செய்வார்; அத்துடன் அவர் தம்முடைய கரம் கீழ்நோக்கி வருவதை அவர்கள் காணும்படி செய்வார். அது கடுங்கோபத்துடனும், சுட்டெரிக்கும் நெருப்புடனும், திடீர் மழையுடனும், இடி முழக்கத்துடனும், கல்மழையுடனும் வரும். யெகோவாவின் குரல் அசீரியாவைச் சிதறப்பண்ணும்; அவர் தமது செங்கோலால் அவர்களை அடித்து வீழ்த்துவார். யெகோவா யுத்த களத்திலே, தம் கரத்தால் அவர்களை அடித்து யுத்தம் செய்யும்போது, அவர்கள்மேல் தனது தண்டனைக் கோலால் அடிக்கும் ஒவ்வொரு அடியும், தம்புராவினதும் யாழினதும் இசைக்கேற்ப இருக்கும்.
ஏசாயா 30:29-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பண்டிகை அனுசரிக்கப்படும் இரவிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; யெகோவாவுடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையினிடத்திற்குப்போக நாதசுரத்தோடே நடந்து வருகிறபோது மகிழ்கிறதுபோல மகிழுவீர்கள். யெகோவா மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கச்செய்து, கடுங்கோபத்தினாலும் அழிக்கிற நெருப்புத்தழலினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார். அப்பொழுது பெரிய ஆயுதத்தினால் அடித்த அசீரியன் யெகோவாவுடைய சத்தத்தினாலே நொறுங்குண்டு போவான். யெகோவா அவன்மேல் சுமத்தும் ஆக்கினைத்தண்டம் செல்லுமிடமெங்கும், மேளங்களும் வீணைகளும் அதினுடன் போகும்; கொடிய போர்களினால் அவனை எதிர்த்து போரிடுவார்.
ஏசாயா 30:29-32 பரிசுத்த பைபிள் (TAERV)
அந்தக் காலத்தில், நீங்கள் மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடுவீர்கள். அந்த நேரமானது, ஓய்வு நாளைத் தொடங்கும் இரவுகளைப்போன்றிருக்கும். கர்த்தருடைய மலைக்கு நடந்துபோகையில், நீங்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். வழியில் புல்லாங்குழலைக் கவனித்தவண்ணம் இஸ்ரவேலின் கன்மலை அருகில் தொழுதுகொள்ளப்போகும்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். கர்த்தர் அவரது சிறந்த குரலை ஜனங்கள் அனைவரும் கேட்குமாறு செய்வார். கர்த்தர், தம் கரத்தின் வல்லமையை ஜனங்கள் அனைவரும் காணும்படி கோபத்துடன் இறங்கி வருவார். அந்தக் கையானது பெரும் நெருப்பை போல எல்லாவற்றையும் எரிக்கத்தக்கதாக இருக்கும். கர்த்தருடைய வல்லமையானது மழையோடும், கல்மழையோடும் வருகிற புயல்போல இருக்கும். கர்த்தருடைய குரலைக் கேட்டதும் அசீரியா அஞ்சும். கர்த்தர் அசீரியாவை கோலால் அடிப்பார். கர்த்தர் அசீரியாவை அடிப்பார். அது முரசின்மீது தாளம் போடுவது போலவும், வீணைகளை மீட்டுவது போலவும் இருக்கும். கர்த்தர் தமது சிறந்த கையால் (வல்லமை) அசீரியாவைத் தாக்குவார்.
ஏசாயா 30:29-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பண்டிகை ஆசரிக்கப்படும் இராத்திரியிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; கர்த்தருடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையண்டைக்குப்போக நாகசுரத்தோடே நடந்து வருகிறபோது மகிழுகிறதுபோல மகிழுவீர்கள். கர்த்தர் மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜூவாலையினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார். அப்பொழுது தண்டாயுதத்தினால் அடித்த அசீரியன் கர்த்தருடைய சத்தத்தினாலே நொறுங்குண்டு போவான். கர்த்தர் அவன்மேல் சுமத்தும் ஆக்கினைத்தண்டம் செல்லுமிடமெங்கும், மேளங்களும் வீணைகளும் அதினுடன் போகும்; கொடிய யுத்தங்களினால் அவனை எதிர்த்து யுத்தஞ்செய்வார்.