ஏசாயா 30:1-5
ஏசாயா 30:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“பிடிவாதமுள்ள என் பிள்ளைகளுக்கு ஐயோ கேடு!” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஏனெனில் அவர்கள் என்னுடையதல்லாத திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள். என் ஆவியானவரினாலன்றி உடன்படிக்கை செய்து, பாவத்திற்குமேல் பாவத்தைக் குவிக்கிறார்கள். என்னிடம் அறிவுரை கேளாமல் எகிப்திற்குப் போகிறார்கள். அவர்கள் பார்வோனின் பாதுகாப்பின்கீழ் உதவிகோரி, எகிப்தின் நிழலில் அடைக்கலம் தேடுகிறார்கள். ஆனால் பார்வோனின் பாதுகாவல் உங்களுக்கு வெட்கமாகும்; எகிப்தின் நிழல் உங்களுக்கு அவமானத்தைக் கொண்டுவரும். சோவானில் அவர்களுக்கு தலைவர்கள் இருந்தாலும், அவர்களுடைய பிரதிநிதிகள் ஆனேஸ்மட்டும் வந்து சேர்ந்தாலும், அவர்களுக்குப் பயனற்ற நாடான எகிப்தின் நிமித்தம் ஒவ்வொருவரும் வெட்கத்திற்குட்படுவார்கள். அவர்களால் யாதொரு உதவியோ, நன்மையோ கிடைப்பதில்லை; வெட்கமும் அவமானமுமே கிடைக்கும்.”
ஏசாயா 30:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பாவத்தோடே பாவத்தைக் கூட்டுவதற்கு, என்னை அல்லாமல் ஆலோசனைசெய்து, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும், என் வார்த்தையைக் கேட்காமல் பார்வோனின் பெலத்தினாலே பெலப்படவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்திற்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள மக்களுக்கு ஐயோ, என்று யெகோவா சொல்கிறார். பார்வோனுடைய பெலன் உங்களுக்கு வெட்கமாகவும் எகிப்தினுடைய நிழலில் ஒதுங்குவது உங்களுக்கு வெட்கமாகவும் இருக்கும். அவர்கள் அதிகாரிகள் சோவான் பட்டணத்தில்போய், அவர்களுடைய ஸ்தானதிபதிகள் ஆனேஸ் பட்டணம் வரை சேருகிறார்கள். ஆனாலும் தங்கள் உதவிக்காகவும், தேவைக்காகவும் உதவாமல், வெட்கத்திற்கும் நிந்தைக்குமே உதவும் மக்களாலே அனைவரும் வெட்கப்படுவார்கள்.
ஏசாயா 30:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர், “இந்தப் பிள்ளைகளைப் பாருங்கள். அவர்கள் எனக்குக் கீழ்ப்படிவதில்லை. அவர்கள் திட்டங்களைப்போடுவார்கள். ஆனால் என்னிடம் உதவியைக் கேட்கமாட்டார்கள். அவர்கள் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்கிறார்கள். ஆனால், எனது ஆவி அந்த ஒப்பந்தங்களை விரும்புவதில்லை. இந்த ஜனங்கள் தங்களுக்குள் மேலும், மேலும் பாவங்களைச் சேர்த்துக்கொண்டே போகிறார்கள். இந்தக் குழந்தைகள் உதவிக்காக எகிப்துக்குப்போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தாங்கள் செய்வது சரிதானா என்பதை என்னிடம் கேட்கவில்லை. அவர்கள் பார்வோனால் காப்பாற்றப்படுவதாக நம்பினார்கள். எகிப்து அவர்களைக் காப்பாற்றும் என்று நினைக்கிறார்கள். “ஆனால், எகிப்தில் ஒளிந்துக்கொள்வது உங்களுக்கு உதவாது என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். எகிப்தால் உங்களைக் காப்பாற்ற இயலாது. உங்கள் தலைவர்கள் சோவானுக்குப்போயிருக்கிறார்கள். உங்கள் வெளியுறவு அதிகாரிகள் ஆனேஸ் நாட்டுக்குப்போயிருக்கிறார்கள். ஆனால் அவர்கள், ஏமாற்றம் அடைவார்கள். அவர்களுக்கு உதவிசெய்ய முடியாத ஜனத்தை அவர்கள் சார்ந்துள்ளனர். எகிப்து பயனற்றது. அதினால் உதவிசெய்ய முடியாது. வெட்கத்திற்கும் துக்கத்திற்குமே எகிப்து காரணமாக அமையும்” என்றார்.
ஏசாயா 30:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என்ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும், என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார். பார்வோனுடைய பெலன் உங்களுக்கு வெட்கமாகவும் எகிப்தினுடைய நிழலொதுக்கு உங்களுக்கு இலச்சையாகவும் இருக்கும். அவர்கள் பிரபுக்கள் சோவானிலேபோய், அவர்கள் ஸ்தானாபதிகள் ஆனேஸ்மட்டும் சேருகிறார்கள். ஆனாலும் தங்கள் சகாயத்துக்கும் பிரயோஜனத்துக்கும் உதவாமல், வெட்கத்துக்கும் நிந்தைக்குமே உதவும் ஜனத்தினாலே யாவரும் வெட்கப்படுவார்கள்.