ஏசாயா 26:1-11

ஏசாயா 26:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்த நாளிலே யூதா நாட்டில் இந்தப் பாடல் பாடப்படும்: நமக்கொரு பலமுள்ள பட்டணம் உண்டு; இறைவன் இரட்சிப்பை, அதன் மதில்களாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகிறார். வாசல்களைத் திறவுங்கள், நீதியுள்ள நாடு உள்ளே வரட்டும், நேர்மையான நாடு உள்ளே வரட்டும். மனவுறுதியுடன் இருப்பவனை நீர் முழுநிறைவான சமாதானத்துடன் வைத்திருப்பீர்; ஏனெனில் அவன் உம்மிலேயே நம்பிக்கை வைத்திருக்கிறான். யெகோவாவிடம் என்றென்றும் நம்பிக்கையை வையுங்கள்; ஏனெனில், யெகோவா, யெகோவாவே நித்திய கற்பாறை. உயர்வாக வாழ்வோரை அவர் தாழ்த்துகிறார்; உயர்த்தப்பட்ட பட்டணத்தை கீழே தள்ளி வீழ்த்துகிறார், அதைத் தரைமட்டமாக்கிப் புழுதியாக்குகிறார். கால்கள் அதை மிதிக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களின் பாதங்களும், ஏழைகளின் காலடிகளுமே அதை மிதிக்கின்றன. நீதியானவர்களின் பாதை நேர்சீரானது; நீதியாளரே, நீரே நீதியானவர்களின் வழியைச் சீர்படுத்துகிறீர். ஆம், யெகோவாவே, உமது சட்டங்களின் வழியில் நடந்து, உமக்குக் காத்திருக்கிறோம்; உமது பெயரும் உமது புகழுமே எங்கள் இருதயங்களின் வாஞ்சையாய் இருக்கின்றன. இரவிலே என் ஆத்துமா உம்மை ஆர்வத்தோடு தேடுகிறது, காலையிலே என் ஆவி உம்மை வாஞ்சையுடன் தேடுகிறது. உமது நியாயத்தீர்ப்புகள் பூமியிலே வரும்போது உலக மக்கள் நியாயத்தைக் கற்றுக்கொள்வார்கள். கொடியவருக்கு கிருபை காண்பிக்கப்படுகிறபொழுதும், அவர்கள் நியாயத்தைக் கற்றுக்கொள்வதில்லை. நீதியுள்ள நாட்டிலும் அவர்கள் தொடர்ந்து தீமையையே செய்கிறார்கள்; யெகோவாவின் மாட்சிமையையும் அவர்கள் மதிப்பதில்லை. யெகோவாவே, உமது கரம் மேலே உயர்த்தப்பட்டிருக்கிறது, ஆயினும் அதை அவர்கள் காணாதிருக்கிறார்கள். உமது மக்களுக்காக நீர் கொண்டிருக்கும் வைராக்கியத்தைக் கண்டு அவர்கள் வெட்கமடையட்டும்; உமது பகைவருக்காக ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கும் நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கட்டும்.

ஏசாயா 26:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; காப்பாற்றுதலையே அதற்கு மதிலும் பாதுகாப்புமாக ஏற்படுத்துவார். சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள தேசம் உள்ளே நுழைவதற்காக வாசல்களைத் திறவுங்கள். உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறதினால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். யெகோவாவை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நிலையான கன்மலையாயிருக்கிறார். அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார்; உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைவரை தாழ்த்தி அது மண்ணாகும்வரை இடியச்செய்வார். கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும். நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர். யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது பெயரும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது. என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூமியிலுள்ள மக்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள். துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளமாட்டான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து யெகோவாவுடைய மகத்துவத்தைக் கவனிக்காமல்போகிறான். யெகோவாவே, உமது கை ஓங்கியிருக்கிறது; அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது மக்களுக்காக நீர் வைத்திருக்கும் வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய எதிரிகளை எரிக்கும்.

ஏசாயா 26:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

அந்த நேரத்தில் யூதாவில் இந்தப் பாடலை ஜனங்கள் பாடுவார்கள்: கர்த்தரே நமக்கு இரட்சிப்பைத் தருகிறார். நமக்குப் பலமான நகரம் உள்ளது. நமது நகரத்திற்குப் பலமான சுவர்களும், தற்காப்புகளும் உள்ளன. கதவுகளைத் திறவுங்கள். நல்ல ஜனங்கள் நுழைவார்கள். தேவனுடைய நல்ல போதனைகளுக்கு அந்த ஜனங்கள் கீழ்ப்படிவார்கள். கர்த்தாவே, உம்மை அண்டியுள்ள ஜனங்களுக்கும், உம்மை நம்புகிற ஜனங்களுக்கும், நீர் உண்மையான சமாதானத்தைக் கொடுக்கிறீர். எனவே, எப்பொழுதும் கர்த்தரை நம்புங்கள். ஏனென்றால், கர்த்தராகிய யேகோவாவில் உங்களுக்கு என்றென்றைக்கும் பாதுகாப்பான இடமுண்டு. ஆனால், கர்த்தர் தற்பெருமை கொண்ட நகரத்தை அழிப்பார். அங்கே வாழுகின்ற ஜனங்களை அவர் தண்டிப்பார். கர்த்தர் அந்த உயர்வான நகரத்தை தரையில் போடுவார். அது புழுதிக்குள் விழும். பிறகு, ஏழ்மையும் பணிவும் உள்ள ஜனங்களின் கால்கள் அதனை மிதித்துச் செல்லும். நல்ல ஜனங்களுக்கு நேர்மையே சிறந்த பாதை. நல்ல ஜனங்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் உள்ள பாதையில் செல்வார்கள். தேவனே நீர் அந்தப் பாதையை மென்மையாக்கி எளிதாக செல்லும்படிச் செய்கிறீர். ஆனால் கர்த்தாவே, நாங்கள் உமது நீதியின் பாதைக்காகக் காத்திருக்கிறோம். எங்கள் ஆத்துமா, உம்மையும் உமது நாமத்தையும் நினைவு கொள்ள விரும்புகின்றது. இரவில் எனது ஆத்துமா உம்மோடு இருக்க விரும்புகிறது. என்னுள் இருக்கிற ஆவி ஒவ்வொரு புதிய நாளின் அதிகாலையிலும் உம்மோடு இருக்க விரும்புகிறது. தேசத்திற்கு உமது நீதியின் பாதை வரும்போது, ஜனங்கள் வாழ்வின் சரியான பாதையைக் கற்றுக்கொள்வார்கள். தீயவன் நல்லவற்றை செய்ய கற்றுக்கொள்ளமாட்டான். அவனிடம் நீர் இரக்கம் மட்டும் காட்டினால், அவன் கெட்டவற்றை மட்டும் செய்வான். அவன் நல்லவர்களின் உலகில் வாழ்ந்தாலும் கூட, கர்த்தருடைய மகத்துவத்தை தீயவன் எப்பொழுதும் கண்டுகொள்ளமாட்டான். ஆனால் கர்த்தாவே, நீர் அந்த ஜனங்களைத் தண்டித்தால் அவர்கள் அதனைப் பார்ப்பார்கள். கர்த்தாவே, தீயவர்களிடம் உமது ஜனங்கள்மேல் நீர் வைத்திருக்கிற பலமான அன்பைக் காட்டும். உண்மையாகவே தீய ஜனங்கள் அவமானப்படுவார்கள், உமது எதிரிகள் அவர்களது சொந்த நெருப்பிலேயே (தீமை) எரிக்கப்படுவார்கள்.

ஏசாயா 26:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார். சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள். உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார். அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார்; உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைமட்டும் தாழ்த்தி அது மண்ணாகுமட்டும் இடியப்பண்ணுவார். கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும். நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர். கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்துமவாஞ்சையாயிருக்கிறது. என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள். துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான். கர்த்தாவே, உமது கை ஓங்கியிருக்கிறது; அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது ஜனத்துக்காக நீர் கொண்ட வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய சத்துருக்களைப் பட்சிக்கும்.