ஏசாயா 25:1-9

ஏசாயா 25:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, நீரே என் இறைவன்; நான் உம்மைப் புகழ்ந்துயர்த்தி, உமது பெயரைத் துதிப்பேன். அற்புதமான செயல்களைச் செய்திருக்கிறீர்; நீர் பூர்வகாலத்தில் அவைகளை திட்டமிட்டபடி, பரிபூரண உண்மையுடன் நிறைவேற்றியுள்ளீர். நீர் அந்நியரின் பட்டணத்தை இடிபாடுகளின் குவியலாக்கினீர்; அரணான பட்டணத்தைப் பாழாக்கினீர். அந்நியரின் அரண் இனிமேலும் ஒரு பட்டணமாயிராது; அது இனியொருபோதும் திரும்பக் கட்டப்படுவதுமில்லை. ஆகவே வலிமையுள்ள மக்கள் கூட்டங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; இரக்கமற்ற நாடுகளின் பட்டணங்கள் உம்மைக் கனம்பண்ணும். நீர் ஏழைகளுக்கு அடைக்கலமாயிருந்தீர்; வறுமையுற்றோரின் துயரில் அவர்களுக்கு அடைக்கலமாயிருந்தீர். புயலிலிருந்து காக்கும் புகலிடமாகவும், வெயிலிலிருந்து காக்கும் நிழலாகவும் இருந்தீர். முரடர்களின் மூச்சு, ஒரு மதிலுக்கு எதிராக வீசும் புயலைப்போல் இருக்கிறது. அது பாலைவன வெப்பத்தைப் போலவும் இருக்கிறது. அந்நியரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடக்குகிறீர்; மேகத்தின் நிழலால் வெப்பம் தணிவதுபோல, இரக்கமற்றோரின் பாடலும் அடங்கிப் போகிறது. சேனைகளின் யெகோவா இந்த மலைமேல் எல்லா மக்கள்கூட்டங்களுக்கும் சிறப்பான விருந்தொன்றை ஆயத்தம் பண்ணுவார். நன்றாகப் பதப்படுத்தப்பட்ட பழைய திராட்சை இரசமும், சிறந்த இறைச்சிகளும், உயர்வகை திராட்சை இரசமும் நிறைந்த விருந்தாக அது இருக்கும். இந்த எல்லா மக்கள் கூட்டங்களையும் மூடியிருந்த மூடுதிரையை அவர் இந்த மலையில் அழிப்பார்; இதுவே எல்லா நாடுகளையும் மூடியிருந்த திரைச்சீலையாகும். மரணம் என்றென்றும் இல்லாதபடி அவர் அதை விழுங்கிவிடுவார். ஆண்டவராகிய யெகோவா எல்லா முகங்களிலுமுள்ள கண்ணீரைத் துடைத்துவிடுவார். அவர் பூமியெங்குமுள்ள தன் மக்களின் அவமானத்தை நீக்கிவிடுவார். யெகோவாவே இதைப் பேசியிருக்கிறார். அந்த நாளிலே மக்கள் கூட்டங்கள், “நிச்சயமாக இவரே நம் இறைவன்; நாம் இவரில் நம்பிக்கை வைத்தோம், இவர் எங்களை மீட்டார். இவரே யெகோவா, இவரில் நாம் நம்பிக்கை வைத்தோம்; இவர் கொடுக்கும் இரட்சிப்பில் நாம் மகிழ்ந்து களிகூருவோம்” என்பார்கள்.

ஏசாயா 25:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது முந்தின ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள். நீர் எங்களுடைய எதிரியின் நகரத்தை மண்மேடும், பாதுகாப்பான பட்டணத்தைப் பாழுமாக்கினீர்; அந்நியரின் தலைநகரை நகரமாக இராதபடிக்கும், என்றைக்கும் கட்டப்படாதபடிக்கும் செய்தீர். ஆகையால் பலத்த மக்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; கொடூரமான தேசங்களின் நகரம் உமக்குப் பயப்படும். கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கும்போது, நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்திற்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். வறட்சியான இடத்தின் வெப்பம் மேகத்தினால் தணிவதுபோல், அந்நியரின் மும்முரத்தைத் தணியச்செய்வீர்; மேகத்தின் நிழலினால் வெயில் தணிகிறதுபோல் பெலவந்தரின் ஆரவாரம் தணியும். சேனைகளின் யெகோவா இந்த மலையிலே சகல மக்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சைரசமும், இறைச்சியும் கொழுப்புமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சைரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும். சகல மக்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல தேசங்களையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார். அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது மக்களின் அவப்பெயரை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; யெகோவாவே இதைச் சொன்னார். அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை காப்பாற்றுவார்; இவரே யெகோவா, இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய காப்பாற்றுதலால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.

ஏசாயா 25:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே, நீர் எனது தேவன். நான் உம்மை கனம்பண்ணி, உமது நாமத்தைத் துதிக்கிறேன். நீர் அதிசயமானவற்றை செய்திருக்கிறீர். நீண்ட காலத்துக்கு முன்னால் நீர் சொன்னவை, அனைத்தும் முழுமையாக உண்மையாகியுள்ளது. இப்படி இருக்கும் என்று நீர் சொன்ன ஒவ்வொன்றும், சரியாக நீர் சொன்னபடியே ஆயிற்று. நீர் நகரத்தை அழித்திருக்கிறீர். அந்த நகரமானது பலமான சுவர்களால் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இப்போது அது மண்மேடாயிற்று. அயல்நாட்டு அரண்மனை அழிக்கப்பட்டிருக்கிறது. அது மீண்டும் கட்டப்படமாட்டாது. வல்லமை மிக்க தேசங்களிலுள்ள ஜனங்கள் உம்மை மதிப்பார்கள். பலமான நகரங்களில் உள்ள வல்லமையுள்ள ஜனங்கள் உமக்குப் பயப்படுவார்கள். கர்த்தாவே, நீர் பாதுகாப்புத் தேவைபடுகிற ஏழை ஜனங்களுக்குப் பாதுகாப்பான இடம். இந்த ஜனங்களைத் தோற்கடிக்க பல பிரச்சனைகள் தொடங்கும். ஆனால் நீர் அவர்களைப் பாதுகாப்பீர். கர்த்தாவே, நீர் வெள்ளத்திலிருந்தும், வெப்பத்திலிருந்தும் ஜனங்களைக் காப்பாற்றும் வீடுபோல இருக்கிறீர். தொல்லைகள் எல்லாம், பயங்கரமான காற்று மற்றும் மழைபோன்று இருக்கும். மழை சுவரைத் தாக்கி கீழே விழச்செய்யும். ஆனால் வீட்டிற்குள் உள்ள ஜனங்கள் பாதிக்கப்படமாட்டார்கள். பகைவன் சத்தமிட்டு ஆரவாரத்தை ஏற்படுத்துவான். பயங்கர பகைவன் சத்தமிட்டு சவால்விடுவான். ஆனால் தேவனாகிய நீர் அவர்களைத் தடுப்பீர். கோடை காலத்தில் வனாந்தரத்தில் செடிகள் வாடி தரையில் விழும். அடர்த்தியான மேகங்கள் கோடை வெப்பத்தைத் தடுக்கும். அதே வழியில், நீர் பயங்கரமான பகைவர்களின் சத்தங்களை நிறுத்துவீர். அந்த நேரத்தில், சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இந்த மலையில் உள்ள ஜனங்களுக்கு ஒரு விருந்து தருவார். அந்த விருந்தில் சிறந்த உணவும், திராட்சை ரசமும் தரப்படும். மாமிசமானது புதிதாகவும் சிறந்ததாகவும் இருக்கும். ஆனால் இப்போது, எல்லா தேசங்களின் மேலும் ஜனங்களின் மேலும் ஒரு முக்காடு கவிழ்ந்திருக்கிறது. அந்த முக்காடு “மரணம்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் மரணமானது எக்காலத்திற்கும் அழிக்கப்படும். கர்த்தராகிய எனது ஆண்டவர், ஒவ்வொரு முகத்திலும் வடியும் கண்ணீரைத் துடைப்பார். கடந்த காலத்தில், அவரது ஜனங்கள் எல்லாரும் துக்கமாயிருந்தார்கள். ஆனால், பூமியிலிருந்து தேவன் அந்தத் துக்கத்தை எடுத்துவிடுவார். இவையெல்லாம் நிகழும். ஏனென்றால், இவ்வாறு நிகழும் என்று கர்த்தர் கூறினார். அந்த நேரத்தில், ஜனங்கள், “இங்கே எங்கள் தேவன் இருக்கிறார். அவர், நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஒருவர், நம்மைக் காப்பாற்றுவதற்காக அவர் வந்திருக்கிறார். நமது கர்த்தருக்காக நாம் காத்துக்கொண்டிருந்தோம். கர்த்தர் நம்மைக் காப்பாற்றும்போது, நாம் கொண்டாடுவோம், மகிழ்ச்சி அடைவோம்.”

ஏசாயா 25:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள். நீர் நகரத்தை மண்மேடும், அரணான பட்டணத்தைப் பாழுமாக்கினீர்; அந்நியரின் ராஜதானியை ஊராயிராதபடிக்கும், என்றைக்கும் கட்டப்படாதபடிக்கும் செய்தீர். ஆகையால் பலத்த ஜனங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; கொடூரமான ஜாதிகளின் நகரம் உமக்குப் பயப்படும். கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். வறட்சியான இடத்தின் காங்கை மேகத்தினால் தணிவதுபோல், அந்நியரின் மும்முரத்தைத் தணியப்பண்ணுவீர்; மேகத்தின் நிழலினால் வெயில் தணிகிறதுபோல் பெலவந்தரின் ஆரவாரம் தணியும். சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும். சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார். அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார். அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.

ஏசாயா 25:1-9

ஏசாயா 25:1-9 TAOVBSIஏசாயா 25:1-9 TAOVBSIஏசாயா 25:1-9 TAOVBSIஏசாயா 25:1-9 TAOVBSIஏசாயா 25:1-9 TAOVBSIஏசாயா 25:1-9 TAOVBSIஏசாயா 25:1-9 TAOVBSI