ஏசாயா 2:1-5

ஏசாயா 2:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆமோஸின் மகன் ஏசாயா, யூதா நாட்டையும், எருசலேம் பட்டணத்தையும் பற்றிக் கண்ட தரிசனம். கடைசி நாட்களிலே, யெகோவாவினுடைய ஆலயத்தின் மலை, எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாக நிலைநிறுத்தப்படும்; எல்லா குன்றுகளுக்கு மேலாக உயர்த்தப்படும், எல்லா தேசத்தார்களும் அதை நாடி ஓடி வருவார்கள். அநேக மக்கள் கூட்டங்கள் வந்து, “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்கு ஏறிப்போவோம், யாக்கோபின் இறைவனுடைய ஆலயத்திற்குப் போவோம். நாம் அவர் பாதைகளில் நடப்பதற்கு அவர் தம் வழிகளை நமக்கு போதிப்பார்” என்பார்கள். சீயோனிலிருந்து அவரது சட்டமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் வெளிவரும். அவர் நாடுளுக்கிடையில் நியாயம் விசாரித்து, அநேக மக்கள் கூட்டங்களின் வழக்குகளைத் தீர்த்துவைப்பார். அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்துச் செய்துகொள்வார்கள். அதன்பின் ஒரு நாடு வேறு நாட்டை எதிர்த்து பட்டயத்தை எடுப்பதுமில்லை, போருக்கான பயிற்சியையும் அவர்கள் கற்பதுமில்லை. யாக்கோபின் குடும்பமே, வாருங்கள், யெகோவாவின் வெளிச்சத்தில் நடப்போம்.

ஏசாயா 2:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆமோத்சின் மகனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும்குறித்துக் கண்ட காட்சி. வரும்நாட்களில் யெகோவாவுடைய ஆலயமாகிய மலை, மலைகளின் உச்சியில் அமைக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; எல்லா தேசத்தார்களும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான மக்கள் புறப்பட்டுவந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும். அவர் தேசங்களிடையே நியாயந்தீர்த்து, திரளான மக்களின் வாக்குவாதங்களைத் தீர்த்துவைப்பார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் மாற்றுவார்கள்; நாட்டிற்கு விரோதமாக நாடு பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் போர்ப்பயிற்சி எடுப்பதுமில்லை. யாக்கோபின் வம்சத்தாரே, யெகோவாவின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.

ஏசாயா 2:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆமோத்சின் குமாரனான ஏசாயா யூதா மற்றும் எருசலேம் பற்றியச் செய்தியைப் பார்த்தான். கர்த்தருடைய ஆலயம் மலையின் மேல் இருக்கும். இறுதி நாட்களில், அம்மலை அனைத்து குன்றுகளையும்விட உயரமாக இருக்கும். அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்கள் தொடர்ச்சியாக அங்கு வருவார்கள். ஏராளமான ஜனங்கள் அங்கு போவார்கள். அவர்கள், “நாம் கர்த்தருடைய மலைக்குப்போவோம் நாம் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்குப்போவோம். பின் தேவன் நமக்கு வாழும் வழியைக் கற்றுத்தருவார். நாம் அவரைப் பின்பற்றுவோம்” என்பார்கள். தேவனாகிய கர்த்தருடைய போதனைகளும் செய்தியும் சீயோன் மலையிலுள்ள எருசலேமில் துவங்கி, உலகம் முழுவதும் பரவும். பிறகு, தேவனே அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்களுக்கும் நீதிபதியாவார். தேவன் பலரது வாக்குவாதங்களை முடித்துவைப்பார். சண்டைக்காகத் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஜனங்கள் நிறுத்துவார்கள். அவர்கள் தங்கள் வாள்களை கலப்பையின் கொழுவாகச் செய்வார்கள். அவர்கள் தங்கள் ஈட்டிகளிலிருந்து செடிகளை வெட்டும் கருவிகளைச் செய்வார்கள். ஜனங்கள், மற்றவர்களோடு சண்டையிடுவதை நிறுத்துவார்கள். ஜனங்கள் மீண்டும் யுத்தத்திற்குரிய பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தினரே, வாருங்கள், நீங்கள் கர்த்தருடைய வெளிச்சத்திலே நடக்க வேண்டும்!

ஏசாயா 2:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம். கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்து கொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.