ஏசாயா 16:1-6

ஏசாயா 16:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நாட்டின் ஆளுநனுக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை, நீங்கள் சேலா நாட்டிலிருந்து பாலைவனம் வழியாக சீயோன் மகளின் மலைக்கு அனுப்புங்கள். கூட்டிலிருந்து கலைக்கப்பட்டு, செட்டையடிக்கும் பறவைகளைப்போல் மோவாபிய பெண்கள், அர்னோன் ஆற்றின் துறைகளில் இருக்கிறார்கள். “நீங்கள் ஆலோசனைபண்ணி, ஒரு தீர்மானம் எடுங்கள். நடுப்பகலில் உங்கள் நிழலை இரவு போலாக்குங்கள். தப்பியோடி வருபவருக்கு மறைவிடம் கொடுங்கள். ஜனங்களைக் காட்டிக் கொடாதிருங்கள். மோவாபிலிருந்து துரத்திவிடப்பட்ட என் மக்கள் உங்களுடன் இருக்கட்டும். அவர்களை அழிப்பவர்களிடமிருந்து தப்பும்படி அவர்களுக்குப் புகலிடமாயிருங்கள்.” ஒடுக்குகிறவர்களுக்கு ஒரு முடிவுவரும், அழிவும் ஓய்ந்துவிடும்; துன்புறுத்துபவன் நாட்டிலிருந்து இல்லாமல் போவான். அன்பில் ஒரு அரியணை நிலைநாட்டப்படும். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த உண்மையுள்ள ஒருவர் அதில் அமர்ந்திருப்பார். அவர் நியாயத்தீர்ப்புச் செய்ய நீதியை நாடுவார்; தாமதியாமல் நியாயம் செய்வார். மோவாபியரின் மேட்டிமையைக் குறித்து கேள்விப்பட்டோம். அவர்கள் ஆணவம் பெரிதே! அகந்தையும், பெருமையும், இறுமாப்பும் உடையவர்கள்; அவர்களுடைய தற்புகழ்ச்சிகள் எல்லாம் வெறுமையானவையே.

ஏசாயா 16:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை நீங்கள் சேலாபட்டணம் முதல் வனாந்திரம்வரை சேர்த்து மகளாகிய சீயோனின் மலைக்கு அனுப்புங்கள். இல்லாவிட்டால் கூட்டைவிட்டுத் துரத்தப்பட்டு அலைகிற குருவியைப்போல மகள்களாகிய மோவாப் அர்னோன் நதியின் துறைகளிடத்திலிருப்பார்கள். நீ ஆலோசனைசெய்து, நியாயம் செய்து, மத்தியானத்திலே உன் நிழலை இரவைப்போலாக்கி, துரத்தப்பட்டவர்களை மறைத்துக்கொள், ஓடிவருகிறவர்களைக் காட்டிக்கொடுக்காதே. மோவாபே, துரத்திவிடப்பட்ட என் மக்கள் உன்னிடத்தில் தங்கட்டும்; அழிக்கிறவனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு; ஒடுக்குகிறவன் இல்லாதேபோவான்; அழிவு ஒழிந்துபோம்; மிதிக்கிறவர்கள் தேசத்தில் இல்லாதபடி அழிந்துபோவார்கள். கிருபையினாலே சிங்காசனம் நிலைப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாக நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாக உண்மையோடே வீற்றிருப்பார். மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் கோபத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மிகவும் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது.

ஏசாயா 16:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

நீங்கள் நாட்டின் ராஜாவுக்கு அன்பளிப்பை அனுப்பவேண்டும். நீங்கள் சேலாவிலிருந்து வனாந்தரம் வழியாக சீயோன் குமாரத்தியின் மலைக்கு (எருசலேம்) ஒரு ஆட்டுக்குட்டியை அனுப்புங்கள். மோவாபின் பெண்கள் அர்னோன் ஆற்றை கடக்க முயன்றனர். அவர்கள் உதவிக்காக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓடுகிறார்கள். மரத்திலிருந்து கூடு விழுந்த பிறகு, அதை இழந்த பறவைகளைப்போன்றிருக்கின்றனர். “எங்களுக்கு உதவுங்கள்! என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுங்கள்! மதிய வெயிலிலிருந்து நிழலானது எங்களைக் காப்பாற்றுவது போன்று எங்கள் பகைவரிடமிருந்து காப்பாற்றுங்கள். நாங்கள் எங்கள் பகைவர்களிடமிருந்து ஓடிக்கொண்டிருக்கிறோம். எங்களை ஒளித்து வையுங்கள். எங்களை எமது பகைவர்களிடம் ஒப்படைத்துவிடாதீர்கள் மோவாபிலிருந்த ஜனங்கள் தங்கள் வீடுகளிலிருந்து விலக பலவந்தப்படுத்தப்பட்டனர். எனவே, அவர்கள் உங்கள் நாட்டில் வாழட்டும். அவர்களின் பகைவர்களிடமிருந்து அவர்களை மறைத்துவையுங்கள்” என்று அவர்கள் சொல்கிறார்கள். கொள்ளையானது நிறுத்தப்படும். பகைவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். மற்ற ஜனங்களைக் காயப்படுத்திய மனிதர்கள் இந்த நாட்டிலிருந்து வெளியே போவார்கள். பிறகு, புதிய ராஜா வருவார். அந்த ராஜா தாவீதின் குடும்பத்திலிருந்து வருவார். அவர் உண்மையுள்ளவராக இருப்பார். அவர் அன்பும் கருணையும் உள்ளவராக இருப்பார். அந்த ராஜா சரியாக நியாயந்தீர்ப்பார். அவர் சரியாகவும் நல்லதாகவும் உள்ளவற்றையே செய்வார். மோவாபிலுள்ள ஜனங்கள் பெருமையும் மேட்டிமையும் கொண்டவர்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். அவர்கள் பிடிவாதமும் தற்பெருமையும் உடையவர்கள். அவர்களின் தற்பெருமைகள் வெற்று வார்த்தைகளாக உள்ளன.

ஏசாயா 16:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை நீங்கள் சேலாபட்டணந்துவக்கி வனாந்தரமட்டும் சேர்த்துச் சீயோன் குமாரத்தியின் மலைக்கு அனுப்புங்கள். இல்லாவிட்டால் கூட்டைவிட்டுத் துரத்தப்பட்டு அலைகிற குருவியைப்போல மோவாபின் குமாரத்திகள் அர்னோன் நதியின் துறைகளிடத்திலிருப்பார்கள். நீ ஆலோசனைபண்ணி, நியாயஞ்செய்து, மத்தியானத்திலே உன் நிழலை இரவைப்போலாக்கி, துரத்தப்பட்டவர்களை மறைத்துக்கொள், ஓடிவருகிறவர்களைக் காட்டிக்கொடாதிரு. மோவாபே, துரத்திவிடப்பட்ட என் ஜனங்கள் உன்னிடத்தில் தங்கட்டும்; சங்கரிக்கிறவனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு; ஒடுக்குகிறவன் இல்லாதேபோவான்; சங்கரிப்பு ஒழிந்துபோம்; மிதிக்கிறவர்கள் தேசத்தில் இராதபடிக்கு அழிந்துபோவார்கள். கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார். மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் உக்கிரத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மெத்தப் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது.