ஏசாயா 14:12-17

ஏசாயா 14:12-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக்குறித்துச் சிந்தித்து; இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து, உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.

ஏசாயா 14:12-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஒருகாலத்தில் நாடுகளை வீழ்த்திய நீ, பூமிக்குத் தள்ளப்பட்டு விட்டாயே! நீ உன் இருதயத்தில், “நான் வானத்திற்கு ஏறுவேன்; இறைவனின் நட்சத்திரங்களுக்கு மேலாக என் அரியணையை உயர்த்துவேன். பரிசுத்த மலையின் மிக உயரத்தில், சபைக்கூடும் மலையில் நான் அரியணையில் அமர்ந்திருப்பேன். மேகங்களின் மேலாக உயரத்தில் ஏறுவேன்; மகா உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” என்று சொன்னாயே. ஆனாலும் நீ பாதாளமட்டும் தாழ்த்தப்பட்டு, படுகுழிக்குள் தள்ளப்பட்டாய். உன்னைக் காண்போர் உற்றுப்பார்ப்பார்கள். அவர்கள் உன் நிலையைச் சிந்தித்து, “பூமியை நிலைகுலையச் செய்து அரசுகளை நடுங்கப் பண்ணியவன் இவன்தானா? உலகத்தைப் பாலைவனமாக்கி, பட்டணங்களைக் கவிழ்த்து, கைதிகளை வீட்டிற்குத் திரும்பவிடாதவன் இவன்தானா?” என்று சொல்வார்கள்.

ஏசாயா 14:12-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! தேசங்களை கீழ்ப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்திற்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் மலையிலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக வானங்களில் ஏறுவேன்; உன்னதமான தேவனுக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக்குறித்துச் சிந்தித்து; இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், தேசங்களை அதிரவும் செய்து, உலகத்தை வனாந்திரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.

ஏசாயா 14:12-17 பரிசுத்த பைபிள் (TAERV)

நீ விடிவெள்ளியைப்போல் இருந்தாய். ஆனால், நீ வானத்திலிருந்து விழுந்துவிட்டாய். கடந்த காலத்தில், பூமியில் உள்ள எல்லா நாடுகளும், உனக்குமுன் பணிந்திருந்தது. ஆனால், இப்போது நீ வெட்டித் தள்ளப்பட்டிருக்கிறாய். நீ எப்பொழுதும் உனக்குள்ளேயே, “நான் மிக உன்னதமான தேவனைப்போலாவேன். நான் வானங்களுக்கு மேலே போவேன். நான் எனது சிங்காசனத்தை தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேல் வைப்பேன். நான் பரிசுத்தமான மலையான சாபோன் மீது அமர்வேன். நான், அந்த மலைமேலே தெய்வங்களைச் சந்திப்பேன். நான், மேகங்களிலுள்ள பலிபீடத்திற்கு ஏறிப்போவேன். நான் மிக உன்னதமான தேவனைப்போல் ஆவேன்” என்று சொன்னாய். ஆனால் அது நடைபெறவில்லை. நீ தேவனோடு வானத்துக்குப்போகவில்லை. நீ மரணத்தின் இடமான பாதாளத்தின் பள்ளத்துக்குத் தள்ளப்பட்டாய். ஜனங்கள் உன்னைக் கவனிக்கிறார்கள். உன்னைப்பற்றி சிந்திக்கிறார்கள். நீ ஒரு மரித்துப்போன உடல் என்று ஜனங்கள் பார்க்கின்றனர் ஜனங்கள் சொல்லுகிறார்கள், “பூமியிலுள்ள அனைத்து அரசுகளையும் பெரும் பீதிக்கு உள்ளாக்கிய அதே மனிதன் இவன்தானா? இதே மனிதன்தான் நகரங்களை அழித்து, நாடுகளை வனாந்திரமாகச் செய்தவனா? இதே மனிதன்தான் போரில் ஜனங்களைச் சிறைப்பிடித்து அவர்களைத் தங்கள் வீடுகளுக்குப்போகவிடாமல் செய்தவனா?”